உங்கள் வீட்டைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வீர்களா?
எளிய கடவுச்சொற்களானவை நம்முடைய வீடுகளைப் பூட்டாமல் திறந்து வைத்திருப்பதற்குச் சமமாகும். நம்மில் பலர் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் உள்நுழைவு செய்வதற்கு அனைத்திற்கும் ஒரே கடவுச்சொற்களையே பயன்படுத்திடுவர். அதனால் இணையத்திருடர்கள் நம்முடைய சொந்த தகவல்களை எளிதாக அபகரித்துக் கொள்ள இதன் வாயிலாக நாமே வழிகாட்டிட உதவுகின்றோம் என்ற செய்தியை மனதில் கொள்க.
மிகஎளிதாக நினைவில் இருக்கும் கடவுச்சொற்களை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது
மிகமுக்கியமாக 2016 இல் பயன்படுத்தபட்ட இரண்டு மில்லியனிற்கு அதிகமான கடவுச்சொற்களை ஆய்வு செய்தபோது பின்வரும் வலுவற்ற கடவுச்சொற்களை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திவருவது தெரியவந்தது.
- password
- 12345678
- qwerty
- football
- baseball
- welcomes
- abc123
- 111111
- 1qaz2wsx
வேறுசிலர் இவைகளை சிறிய அளவு மாறுதல்களுடன் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. அதிலும் எந்தவொரு தளத்திற்கும் உள்நுழைவு செய்திடும் போதான இயல்புநிலை கடவுச்சொற்களை எளிதானதாக அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கு அடிப்படையாக அனைவரும் கூறும் காரணம் யாதெனில் கடவுச்சொற்களை எளிதாக நினைவில் கொள்வதற்கு வசதியாக இருப்பதற்காக இவ்வாறு அமைத்திட்டோம் என கூறுகின்றனர். இவ்வாறான வகையில் கடவுசொற்களை கட்டமைவு செய்திடும் செயலானது இணையத்திருடர்களுக்கு நாமே நம்முடைய வீட்டின் கதவைத் திறந்து நம்முடைய அனைத்து சொந்த தகவல்களையும் அபகரித்துச் செல்வதற்கு உதவுவதற்கு சமமான செயலாகும்.
கடவுச்சொற்களின் நீளம் அதிகமாக இருக்க வேண்டும்
இவ்வாறான நிலையைத் தவிர்த்து மிகவலுவான கடவுச்சொற்களை கட்டமைவு செய்திட பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றிடுக எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. பொதுவாக கடவுச்சொற்களின் நீளம் அதிகமாக இருந்தால் அவைகளை இணையத்திருடர்களால் எளிதாக யூகிக்கமுடியாது. எட்டு எழுத்துருக்களுக்குக் குறையாமல் அமைத்திடுக.
கடவுச்சொற்கள் எழுத்துகள், எண்கள் ஆகிய குறியீடுகளால் கலந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்
அதைவிட எழுத்துகள் எண்கள் ஆகிய குறியீடுகளால் கலந்து உருவாக்கப்பட்டிருந்தாலும் அவைகளை இணையத்திருடர்களால் கண்டிப்பாக யூகிக்கமுடியாது. சிறிய எழுத்துகள், பெரிய எழுத்துகள் ஆகியவை கலந்ததாக இருப்பது மிகவும் நன்று.
கடவுச்சொற்களில் சிறப்புக் குறியீடு இருப்பது மிக நன்று
கடவுச்சொற்களில் கண்டிப்பாக #,@,$,%, & ,/ஆகியவற்றில் ஒரு சிறப்புக் குறியீடு கொண்டதாக இருப்பது மிக நன்று.
அகராதியில் உள்ள சொற்களையும், சொந்த தகவல்களையும் கடவுச்சொற்களாக வைக்க வேண்டாம்
கடவுச்சொற்களானது அருஞ்சொற்பொருட்களின் அகராதியில் உள்ள சொற்களாக இருக்கக்கூடாது. நம்முடைய சொந்த தகவல்களை கடவுச்சொற்களாக பயன்படுத்திடவேண்டாம்.
– முனைவர் ச. குப்பன்