எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவற்றை நாம் உருவாக்க முடியாது.
திட வடிவ மாதிரி உருவாக்கும் கருவிகள் (solid modeling tools) ஒரு திட வடிவத்தில் எல்லா பக்கங்களையும் ஒரே நேரத்தில் உருவாக்குகின்றன. ஆனால் மேற்பரப்பு மாதிரி உருவாக்கும் கருவிகள் (surface modeling tools) ஒரு நேரத்தில் ஒரு மேற்பரப்பை மட்டுமே உருவாக்குபவை. ஆகவே சீரற்ற மேற்பரப்புகளுக்கு நாம் இம்மாதிரி மேற்பரப்பு மாதிரிக் கருவிகளையே பயன்படுத்துவோம்.
ஃப்ரீகேட் கண்ணி பணிமேடை (Mesh Workbench)
கண்ணிகள் மிக எளிதான வடிவம் கொண்டவை. ஃப்ரீகேட் கண்ணி பணிமேடையில் இவை முக்கோணமாக இருக்கும். இவற்றுக்கு மூலைகள், விளிம்புகள் மற்றும் முக்கோண முகப்புகள் என்று மூன்று அம்சங்கள் மட்டுமே உண்டு. ஆகவே இவற்றை உருவாக்குவதும், உட்பிரிவு செய்வதும், நீட்டுவதும் மற்ற மாற்றங்கள் செய்வதும் எளிது. விவரங்களை இழக்காமல் ஒரு செயலியிலிருந்து மற்றொரு செயலிக்கு எளிதாக அனுப்ப முடியும். மற்றும் கணினியில் சேமிக்கும்போது அதிக இடத்தை அடைக்காது. ஆகவே சீரற்ற மேற்பரப்புகள் தயாரிக்கக் கண்ணிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஃப்ரீகேட் கண்ணி பணிமேடையில் நாம் கண்ணிகளை இறக்குமதி செய்யலாம், பகுப்பாய்வு செய்யலாம், பிழைகளை சரி செய்யலாம் மற்றும் இறுதியாக இவற்றை திட வடிவமாக மாற்றி பாகம் பணிமேடையில் பயன்படுத்தலாம்.
இருப்பினும், பொறியியல் துறையில் கண்ணிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. இவை மேற்பரப்புகளால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன, ஆகவே பொருண்மை (mass) பற்றிய தகவல்கள் எதுவும் கிடையாது. எனவே இவை திடப்பொருள்களாக செயல்படாது. சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற திட வடிவ அடிப்படையிலான செயல்பாடுகளை இவற்றில் செய்யமுடியாது.
நர்ப்ஸ் வளைபரப்புகள் (NURBS surfaces)
நர்ப்ஸ் வளைபரப்புகள் கண்ணிபோல் அல்லாமல் வழுவழுப்பாகவே இருக்கும். இது வளைந்த மேற்பரப்புகளை கணித ரீதியாக மாதிரியமைக்கும் உத்தி. எனினும் மாதிரி உருவாக்க நீங்கள் கணித சூத்திரங்கள் எழுதத் தேவையில்லை. கட்டுப்படுத்தும் புள்ளிகளை சுட்டியால் இழுத்துத் தேவையான வடிவத்துக்கு சரிசெய்து கொள்ளலாம்.
நர்ப்ஸ் வடிவங்களைப் பரிமாறிக்கொள்ள பல தொழில்துறைத் தரநிலைகள் உள்ளன. ஆகவே நாம் நம்முடைய மதிப்புமிக்க வடிவியல் மாதிரிகளை பல்வேறு மாதிரியமைத்தல் (modelling), தோற்ற அமைவு (rendering), அசைவூட்டம் (animation) மற்றும் பொறியியல் பகுப்பாய்வு (CAE) திட்டங்களில் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃப்ரீகேட் மேற்பரப்புப் பணிமேடை (Surface workbench)
ஃப்ரீகேட் மேற்பரப்புப் பணிமேடை எளிய நர்ப்ஸ் மேற்பரப்புகளை உருவாக்க மற்றும் மாற்றுவதற்கான கருவிகளை வழங்குகிறது.
இதன் சில அம்சங்கள்:
- எல்லை விளிம்புகளிலிருந்து மேற்பரப்புகளை உருவாக்குதல்.
- அண்டை முகப்புகளிலிருந்து வளைவை சீரமைத்தல்.
- மற்ற வளைவுகள் மற்றும் உச்சிமுனைகள் படி மேற்பரப்புகளைக் கட்டுப்படுத்துதல்.
- முகப்புகளை நீட்டித்தல்.
- ஒரு கண்ணியின் மேற்பரப்பை வார்ப்புருவாக வைத்து நர்ப்ஸ் வளைவுகளை உருவாக்குதல்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஓபன்ஸ்கேட் (OpenSCAD) மற்றும் பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio)
இது ஊடாடும் (interactive) மாதிரியாக்கி அல்ல. இது எல்லோருக்கும் ஒத்துவரும் என்று சொல்ல முடியாது. மாறிகளை வரையறுத்தல் (Defining Variables). அளவுரு மாதிரி (Parametric Model) தயாரித்தல். பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio) எந்திரன் உருவாக்கும் தளம் (Robotics Development Platform).