கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனால், அதே நேரம் என்னிடத்தில் கணினி இருந்திருக்கவில்லை.
அதன் பிறகு, எப்படியோ 15000 ரூபாய்க்கு ஒரு பழைய மடிக்கணினியை விலைக்கு வாங்கி விட்டேன். இருந்த போதிலும், அந்த கருவியில் முற்று முழுதாக லினக்ஸ் நிறுவுவதற்கு எனக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை.
ஏனெனில், விண்டோஸ் போல அல்லாமல், லினக்ஸ் ஆரம்பத்தில் பயன்படுத்தும் போது கடினமாக இருக்கும்! என்று நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்துகொண்ட புரளிகள் தான் காரணம்.
அதற்காக, நான் தேர்ந்தெடுத்த வழி தான் dual boot முறை. இம்முறையில், ஒரே கணினிக்குள் உங்களால் இரண்டு இயங்குதளங்களை பயன்படுத்த முடியும்.
குறிப்பிட்டுச் செல்லப் போனால், இரண்டு இயங்குதளங்கள் அல்ல! உங்களுடைய கணினி தாங்கும் என்றால் 10 இயங்குதளங்களை கூட, ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.
என்னிடம் இருக்கக்கூடிய, எட்டு ஜிபி ரேம் மற்றும் 256 gb சேமிப்பக வசதி கொண்ட கணினியில் 50 gb அளவிலான இடத்தை லினக்ஸ் மின்ட் xcfe இயங்குதளத்தை நிறுவுவதற்கு பயன்படுத்தினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்ட வழிமுறைகளை பயன்படுத்தி, என்னுடைய விண்டோஸ் கணினியில் இருந்து செக்யூர் பூட் அமைப்பை ஆப்(turning off secure boot)செய்தேன்.
அதன் பின்பாக, லினக்ஸ் மின்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து, xcfe iso கோப்பை பதிவிறக்கம் செய்து பின்பு வேறு ஒரு மென்பொருளின் மூலமாக அதை பிளாஷ் செய்தேன்.
ஃபிளாஷ் செய்யப்பட்ட கோப்பை 32 ஜிபி அளவிலான pendrive க்கு மாற்றி, அதற்குப் பின்பாக என்னுடைய மடிக்கணினியில் boot மேனேஜர் அமைப்பை திறந்து, அங்கிருந்து லினக்ஸ் மென்ட் இயங்கு தளத்தை dual boot முறையில் நிறுவி இருக்கிறேன்.
இது தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், ஏற்கனவே நான் பயன்படுத்திய சில கட்டுரைகள் மற்றும் youtube காணொளிகளை கீழே இணைப்பாக வழங்குகிறேன்.
அதன் பின்பாக லினக்ஸ் தொடர்பாக விரிவாக கற்றுக்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்த்து, என்னிடத்தில் இருக்கக்கூடிய விண்டோசை நீக்கிவிட்டு முற்று முழுதாக லினக்ஸ் பயனராக மாற முடிவு செய்து இருக்கிறேன்.
லினக்ஸ் இயங்கு தளம் குறித்து தெரியாததால், நான் எழுதாமலேயே விட்டுவிட்ட, பல கட்டுரைகளையும் இனிமேல் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.
மேலும், நண்பர்கள் யாருக்கேனும் லினக்ஸ் மீண்டும் மூலமாக நிரலாக்க மொழிகளை எவ்வாறு எளிமையாக கற்றுக் கொள்ளும் வழிமுறைகள் தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் பல சுவாரசியமான கட்டுரைகளோடு உங்களை சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com