விக்கிப்பீடியா மங்கைகள் 1

விக்கிப்பீடியா_மங்கைகள் 1 – பாத்திமா ரினோசா

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். எனக்கு எங்க நேரமிருக்கு? குடும்பத்தைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு, என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம்.

1. பாத்திமா ரினோசா

பாத்திமா ஷைலா என்ற இயற்பெயர் கொண்ட இலங்கையின் நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தமிழ்ப்பெண். உயர் தேசிய டிப்ளோமா கற்கும் மாணவி.

2019 ஆம் ஆண்டு நடந்த புதுப்பயனர் போட்டியில் தமிழ் விக்கிபீடியாவிற்கு அறிமுகமானார். விக்கிப்பீடியாவைத் தேடுபொறியாகப் பயன்படுத்தும் ரினோசா விக்கிபீடியாவில் புதுப்பயனர் போட்டி அறிவிப்பை கண்டு அப்போட்டியில் பங்கேற்றார்.

வேங்கைத் திட்டம் 2.0, ஆசிய மாதம் 2019 , விக்கி பெண்களை நேசிக்கிறது ஆகிய திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் தமிழக அளவில் அதிக கட்டுரைகள் எழுதி முதல் பெண்ணாகவும் இந்திய அளவில் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய சில கட்டுரைகளில் மூலக்கூற்று படியாக்கம், தாவர நோயியல், நொறுங்கு விண்மீன், சதிர்குரு, பரு, திமிங்கில எண்ணெய், செம்புள்ளி தொற்று ஆகியவையாகும்.

குறுகிய மூன்று மாத காலத்திற்குள் வெற்றி வாகை சூடியிருக்கும் ரினோசாவின் வீட்டில் கணனி இல்லை. திறன்பேசியில் மட்டுமே அனைத்தையும் எழுதியுள்ளார். இதுவரை 215 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வாட்சப் தவிர்த்து எந்தவொரு சமூக வலைத்தளங்களையும் பாவிப்பதில்லை. அதனால் ஓய்வு நேரங்களில் விக்கியில் எழுத நேரம் கிடைக்கிறது என்கிறார் இவர். தொலைக்காட்சி விரும்பி பார்ப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது திறன்பேசிக் குறிப்பில் கட்டுரைகளை எழுதி வைத்துப் பின்னர் வெட்டி ஒட்டி வெளிவிடுகிறார்.

இன்னும் சிகரம் தொடுவீர்கள். வாழ்த்துகள் ரினோசா.

பார்வதிஸ்ரீ

parvathisriabi@gmail.com

%d bloggers like this: