விக்கிப்பீடியா_மங்கைகள் – 4 – கலையரசி குகராஜ்

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம்.

கலையரசி குகராஜ்

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2007 திசம்பர் மாதம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். 2010 இல் பேர்கனில் வாழும் தமிழர்களுக்கு ஓர் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையும் நடத்தியுள்ளார்.

கூகுள் நிறுவனம் தானியக்கமாக கட்டுரை மொழிபெயர்க்கும் திட்டமொன்றை நடத்தி அதில் ஆயிரக்கணக்கான தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அக் கட்டுரைகள் இயந்திர மொழிபெயர்ப்பாதலால் ஏராளமான பிழைகள் ஏற்பட்டது. எனவே இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பைச் சீர் செய்ய ஒரு போட்டி வைக்கப்பட்டது. இப்போட்டி ஒருங்கிணைப்பில் கலையரசி ஈடுபட்டார்.

மேலும் 2010 ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி மாணவர்களுக்காக நடைபெற்ற தமிழ் கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பிலும், தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஊடகக் கோப்புகளுக்கான தமிழ் விக்கி ஊடகப் போட்டி முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.

நோயியல் துறையில் பணியாற்றுவதால் மருத்துவம் தொடர்பான குறிப்பாக மகளிர் நலன், பொது நலன் சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மூச்சுத்தடை நோய், காச நோய், தொற்றுநோய், நோய்க்காரணி, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை சிகிச்சை, வெளிச் சோதனை முறை கருக்கட்டல், தாய்ப்பாலூட்டல், ஏபிஓ குருதி குழு முறைமை, பூச்சி முதலியவை அவற்றுள் சில.

இதுவரை 24,000 க்கும் மேற்பட்ட தொகுப்புகளையும், 228க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள கலையரசி பொதுவகத்தில் 148 புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். அயல்நாட்டில் வாழ்ந்தாலும், விமானப்பயணங்களில் ஆங்காங்கு வெளிநாடுகளுக்குப் பறந்துகொண்டிருந்தாலும் அன்னைமொழியை மறவாமல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொண்டாற்றிவரும் கலையரசி தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பெண் நிர்வாகியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் கலையரசி.

பார்வதிஸ்ரீ

parvathisriabi@gmail.com

%d bloggers like this: