பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன.
“பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”
தொழிற்புரட்சியில் முக்கிய சக்தியாக இருந்ததால் பிரிட்டன் ஒரு சக்திவாய்ந்த பேரரசாக ஆயிற்று. குடிசைத் தொழில், மரபு சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைகளுக்குப் பதிலாக தொழிற்சாலை அடிப்படையிலான உற்பத்தி, நுட்பமான இயந்திரங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் போக்குவரத்து முன்னேற்றங்கள் சேர்ந்த பொருளாதார மாற்றங்களைத்தான் தொழிற்புரட்சி என்று சொல்கிறோம். இத்துடன் பல நாடுகளில் குடியேற்றம் வேறு. இவ்வாறு பிரிட்டன் தன்னைப் பேரரசாகக் கட்டி அமைத்ததுதான் ஆங்கில மொழியின் உலகளாவிய பரவலின் முதல் கட்டம். இது ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டில் அதன் ஏகாதிபத்தியத்தின் உச்ச கட்டத்தில், பிரிட்டிஷ் பேரரசு வரலாற்றில் மிகப்பெரியது, இது பூமியின் மொத்த நிலப்பகுதியில் சுமார் கால் பங்கு அளவு, 450 மில்லியனுக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்டது. இதனால்தான் “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை” என்று பெயர் பெற்றது.
17 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியா கம்பெனி இந்தியாவில் கொஞ்சம் தொத்த ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றதுவரை சுமார் மூன்று நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் குடியேற்றமாக இருந்தோம். குடியேற்ற நாடுகளில் கல்விக்கு முதன்மை நோக்கம் ஆங்கில மொழியைப் பரப்புதல். அந்த நாட்டு வாசிகளின் வருங்காலம், கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு வர முக்கிய வழி அவர்களின் ஆங்கில மொழித் திறன்.
இரண்டாம் உலகப்போரில் பெரும் சேதம் அடைந்ததுடன் பின்னர் குடியேற்ற நாடுகளையும் இழந்திருந்த பிரிட்டிஷ் பேரரசு 1956 இல் சூயஸ் கால்வாய் நெருக்கடியில் பின்வாங்க நேரிட்டதால், ஒரு வல்லரசாக இருந்த செல்வாக்கு பெரிதும் மங்கிவிட்டது.
விருப்பமின்றியே வல்லரசான அமெரிக்கா
இரண்டாவது உலகப் போரிலிருந்து உலகின் முன்னணி இராணுவ மற்றும் பொருளாதார சக்தியாக வெளிவந்த அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்துடன் மூன்றாம் உலகில் செல்வாக்கிற்காகப் போட்டியிட வேண்டுமென்று முன் தீர்மானிக்கப்பட்டது போலிருந்தது. அங்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முடிவுக்குப் பின் ஒரு வலிமை வெற்றிடம் உருவாகியிருந்தது. குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போராடியது போலவே அமெரிக்காவும் ஒழுங்கைப் பராமரிப்பதற்கான பொறுப்பை ஏற்றது.
1941 இல் வெளியீட்டு அதிபர் ஹென்றி லூஸ் லைஃப் பத்திரிகையில் “அமெரிக்க நூற்றாண்டு” என்ற தலைப்பில் அமெரிக்காவைப் பற்றிய தனது முன்னோக்குப் பார்வையை ஒரு செல்வாக்குள்ள தலையங்கமாக எழுதினார். அமெரிக்காவை “மேலாதிக்க உலக சக்தியாக”, “உலகம் முழுவதும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய உத்தரவாதமளிப்பவர்” மற்றும் “உலக வர்த்தகத்தின் ஆற்றல் மிகுந்த தலைவர்” என்று விவரித்தார். 1949 இல் வரலாற்றாசிரியர் ஆர்தர் ஷ்லேசிஞ்சர் “உலகத்துக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு அமெரிக்காவின் மீது திணிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
பனிப்போர் முடிவில் அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாகியது
நமக்கு விடுதலை கிடைத்த 1947 ஆம் ஆண்டில் தான் ட்ரூமன் கோட்பாடு அறிவிக்கப்பட்டது. இந்த ட்ரூமன் கோட்பாடு என்பது சோவியத் விரிவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்கான ஒரு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாகும். இதில்தான் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் துவக்கம் என்று சொல்லலாம். இந்தப் பனிப்போர்தான் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ச்சி செய்ய மூலகாரணமாக இருந்தது. 1989 ஆம் ஆண்டு, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை வீழ்ச்சியுற்று, பெர்லின் சுவரும் உடைந்தது. தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சியுற்றது.
அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார செல்வாக்கு வளர்ச்சி
அமெரிக்காவின் கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கின் உலகளாவிய பரவல் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியின் மேலாதிக்க நிலையை மேம்படுத்துவதற்கு கணிசமாகப் பங்களித்தது. ஆங்கிலம் இன்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் அதிகார பூர்வமான மொழியாகும். அறிவியலில் ஆங்கிலமே முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. 1997 ஆம் ஆண்டில், அறிவியல் மேற்கோள் புள்ளிவிபரம் படி, 95 சதவீத கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்களில் பாதி பேர் தான் ஆங்கிலம் பேசும் நாடுகளின் வாசிகள். புள்ளிவிவரங்களின்படி தற்போது உலகெங்கிலும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆங்கிலத்தை தங்கள் அதிகார பூர்வ மொழியாகப் பயன்படுத்துகின்றன.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிஞ்சர் 1971 ஜூலையில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டபோது, ரகசியமாகப் பெய்ஜிங் சென்று அமெரிக்க அதிபர் நிக்சனின் 1972 அதிகாரப்பூர்வமான வருகைக்கு வழி கோலினார். 25 ஆண்டுகளாக எந்த விதத் தொடர்பும் இல்லாதிருந்த சீனாவுடன் உறவைச் சரிசெய்ய அமெரிக்கா விரும்பியது. சோவியத் ஒன்றியத்துடனான உறவுகளில் அதிக செல்வாக்கு பெறவே இந்த யுக்தி. 1990 களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்காவின் வல்லரசு நிலைமையைச் சவால் செய்ய ஒருவருமில்லை. எனினும் அமெரிக்காவின் தொழிற்சாலை தயாரிப்புகள் வழங்குநராகச் சீனா தன்னை உருவாக்கிக்கொண்டது. ரேடாருக்குக் கீழேயே பறந்து, கண்ணுக்குத்தெரியாமலே பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசு நிலைமைக்குச் சீனா வளர்ந்து விட்டதைப் பார்க்கிறோம்.
அடுத்து நிகழவிருக்கும் சீன பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கத்திலும் கவனம் வைப்போம்
சீனாவின் பொருளாதாரம் 2035 க்குள் அமெரிக்காவை விட அதிகமாக இருக்குமெனச் சில கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் விரைவான வளர்ச்சி உள்நாட்டுத் தேவைகளால் உந்தப்படுகிறது. முன் போல் ஏற்றுமதியினால் அல்ல. ஆகவே இந்த நூற்றாண்டில் பெரும்பாலும் தொடர்ந்து சுமார் 6 முதல் 7 விழுக்காடு வரை வளர்ச்சி நீடிக்கும் என்றும் சொல்கிறார்கள். அமெரிக்காவோ ஏற்கெனவே வளர்ச்சிபெற்ற நாடு. ஆகையால் அதன் வளர்ச்சி சுமார் 2 முதல் 3 விழுக்காடுதான்.
உலகின் முதன்மை பொருளாதார சக்தி என்ற இடத்துக்கு அமெரிக்காவுக்கு சவால் விடச் சீனா வழிசெய்து கொண்டிருக்கிறது. சீன ராணுவமும் பல நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை மற்றும் நிலம், கடல்பகுதி விவகாரங்களில் பலாத்காரமாகத் தலையிடுவதையும் பார்க்கிறோம். அருணாசல பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடி பிரச்சினை எழுப்பிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்திலும் சீனா தனிவழி அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சில துறைகளில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதன் விளைவாக மொழியியல் மேலாதிக்கம் ஏற்படுமா என்பதுதான் கேள்வி.
“அரசியல், பொருளாதாரம், பண்பாடு, தொழில்நுட்பம் அல்லது இராணுவம் தனியாக ஒரு மொழிக்குப் பன்னாட்டு முக்கியத்துவத்தை வழங்க முடியாது. இதை அடைவதற்கு இந்த எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்த தொடர்ச்சியான தாக்கம் இருக்க வேண்டும். 1960 களிலிருந்து 1990 கள் வரை ஜப்பான் நம்பமுடியாத பொருளாதார வெற்றியைக் கண்டிருந்தபோதிலும், ஜப்பானிய மொழி பெரு வழக்கு அடைந்தது, ஆனால் பன்னாட்டு அளவில் ஒரு முக்கிய மொழியாக வர இயலவில்லை.” என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் ஜப்பானிய மொழி பேசுவோர் சுமார் 150 மில்லியனுக்குக் கீழேதான். சீன மொழி பேசுவோரோ ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் உட்பட 1.3 பில்லியன். ஜப்பானில் மக்களாட்சி, சீனாவிலோ கொடுங்கோன்மை. சீனாவில் வாழும் திபெத், வீகர் இன மக்களைத் தங்கள் தாய் மொழியைக் கற்க வழி இல்லாமல் செய்து, சீன மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்துவதையும் மறந்து விடக் கூடாது.
இத்தொடரில் அடுத்த கட்டுரை: உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்
இணையமும் மற்ற பல தகவல் தொழில்நுட்பங்களும் வளர்ந்தது உலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து கொடுத்தாற்போல ஆயிற்று. உலகமயமாக்கலுக்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனம் ரகுடென் (Rakuten). அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி (Hiroshi Mikitani) ஆங்கிலமே நிறுவனத்தின் அதிகாரபூர்வ மொழி என்று 2010 இல் இட்ட உத்தரவு. இரண்டு ஆண்டுகளுக்குள் பன்னாட்டு ஆங்கில மதிப்பீட்டின்படி பணியாளர்கள் அனைவரும் தகுதிப்பட வேண்டும் அல்லது பதவி இறக்குதல் அல்லது பணிநீக்கம் ஆக நேரிடும் என்ற அவர் அறிவித்தது. அது எப்படி 7,100 ஜப்பானிய ஊழியர்களைப் பாதித்தது.