எளிய தமிழில் VR/AR/MR 10. கல்வி மற்றும் பயிற்சிக்கு VR

கற்றதைத் தக்கவைக்க (learning retention) மூழ்கவைக்கும் அனுபவங்கள் உதவுகின்றன

நீங்கள் சிறுவர்களுக்கு பூகோளப் பாடம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகப்படம் (Atlas) காட்டிக் கற்பித்தல் ஓரளவுதான் புரியும். எனினும் கோளத்தை (Globe) வைத்து சுழற்றிக் காட்டினால் பூமியின் உருண்டை வடிவம் தெளிவாகப் புரியும் அல்லவா? இதைவிட மேலாக தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது. மேலும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர்.

பயில்வோர் ஈடுபாடு

பயில்வோர் ஈடுபாடு

உள் விவரங்களையும் வெட்டுத் தோற்றத்தையும் (section view) காட்ட இயலும்

முப்பரிமாணப் பொருட்களும் அசைவூட்டமும் நேரில் அருகில் இருப்பதுபோல் பார்ப்பதால் தெளிவாகப் புரிகிறது. இது ஈடுபாட்டையும் கற்றல் உள்வாங்குவதையும் அதிகரிக்கும். மேலும் உடல் உள் உறுப்புகள், இயந்திரங்களின் பாகங்கள் ஆகியவை எவ்வாறு பொருந்துகின்றன மற்றும் இயங்குகின்றன என்றும் முப்பரிமாணத்தில் தெளிவாகக் காட்ட இயலும். பயனர்கள் வெவ்வேறு கோணங்களில் திருப்பியும் பெரிதாக்கியும் (zoom in) பார்க்க இயலும். பள்ளிகள் கல்லூரிகளில் மட்டுமல்லாது நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் இது மிகவும் பயனுள்ள தொழில்நுட்பம்.

இடர் மிகுந்த வேலைகளில் பெரும்பாலான பயிற்சிகளை VR மூலம் அளிக்கலாம்

விமானிகள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஆழ்கடலில் மூழ்கி வேலை செய்பவர்கள் (deep sea divers) போன்ற ஆபத்தான வேலைகளுக்குப் பயிற்சி அளிக்க இதைப் பயன்படுத்துவதன் மூலம் தெளிவாக நன்மைகள் உள்ளன. இடரற்ற (risk free) சூழலில் பெரும்பாலான பயிற்சியை முடித்துவிட்டுக் கடைசியாக நேரடிப் பயிற்சிக்குச் செல்லலாம்.

VR பயிற்சிக்கு செலவும் மிகக் குறைவு

எடுத்துக்காட்டாக விமானிப் பயிற்சியை எடுத்துக் கொள்வோம். வானூர்தி வாடகை, எரிபொருள் செலவு மற்றும் பயிற்சி கொடுப்பவர் நேரம் ஆக செலவு மிக அதிகம். உங்கள் அறையிலேயே VR தலையணி அணிந்து பெரும்பாலான பயிற்சியை மிகச் செலவில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பயிற்சியின் போது நடக்கும் தவறுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் பொருட் சேதங்களையும் தவிர்க்கலாம்.

நன்றி

  1. Revitalizing rural education in India

இத்தொடரில் அடுத்த கட்டுரை: வீடு பார்க்கவும், உட்புற வடிவமைப்புக்கும் VR

உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம். நேரில் பார்ப்பது போலவே VR தத்ரூபமாக இருக்கும். வீடு பார்க்க முப்பரிமாண VR உலா (walkthrough).

ashokramach@gmail.com

%d bloggers like this: