விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம் வளாகத்தில் இன்று தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

விக்கிப்பீடியர் நீச்சல்காரன், இந்த முழுநாள் தொகுப்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில், உதயக்குமார், கார்த்திபன், தமிழ்க்கனல், திவ்யா, சித்ரா, பிச்சைமுத்து, உதயன், அன்வர், காயத்திரி, அருண் ஆகிய விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வின் தொடக்கத்தில் நீச்சல்காரன், விக்கிப்பீடியாவின் நோக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் நிலை, விக்கியின் பிற திட்டங்கள், விக்கி கருவிகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். இதன் தொடர்ச்சியாக நடந்த கலந்துரையாடல் – விக்கிப்பீடியாவைப் பற்றி மட்டுமல்லாது – படைப்பாக்கப் பொதும உரிமைகள் (Creative Commons License) – பற்றியும் பொதுச் சமூகத்திற்கு அவற்றின் தேவை பற்றியும் தெரிந்து கொள்ள உதவியது.

பிறகு, வேங்கைத்திட்டம் 2.0 இல் தேவைப்படும் கட்டுரைகள் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கட்டுரையை எடுத்து எழுதத் தொடங்கினார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்த நிகழ்வு – மதிய உணவிற்குப் பிறகும் தொடர்ந்தது.

மதிய உணவோடு சேர்ந்து – வந்திருந்தவர்களுக்கு விக்கிப்பீடியர் நீச்சல்காரன்,

  • தமிழில் எப்படித் தட்டச்சிடுவது
  • விக்கி கருவிகள் கொண்டு எப்படிச் சொற்கள் எண்ணிக்கை கண்டுபிடிப்பது, சொற்பிழை திருத்தியை எப்படிப் பயன்படுத்துவது,
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிகளை எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதப் பயன்படுத்துவது
  • தவறான கட்டுரைகளை விக்கிப்பீடியர்கள் எப்படிப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்கள்
  • விக்கி பல்லூடகத்தில் படங்கள், காணொலிகள் ஆகியவற்றை எப்படி ஏற்றுவது
  • விக்கி நூல்களில் எப்படிப் புத்தகங்களை ஏற்றுவது, எழுத்துணரி(OCR)களை இதற்கு எப்படிப் பயன்படுத்துவது
  • விக்கி செய்திகளில் செய்திகளை ஏற்றும்போது எந்தெந்தத் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், புள்ளி விவரங்களை எப்படிச் சரியாகக் கொடுக்க வேண்டும்

என்று பல்வேறு செய்திகளைப் பல தரவுகளுடன் புரியும்படி எடுத்துச் சொல்லி ‘விக்கி’ தமிழ் அமுது படைத்தது தனிக் கதை! வேங்கைத் திட்டத்தில் கலந்து, விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்க வந்தவர்களுக்கு – விக்கிப்பீடியா – விருந்து வைத்து அனுப்பியது என்னும் அளவில் இருந்தது அவருடைய பங்கேற்பும் – ஒவ்வொருவர் அருகிலும் போய் – சந்தேகங்கள் போக்கி, உதவிகள் நல்கிய பாங்கும்!

நிறைவில், “விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் சேர்ப்பது என்பது – நம் வீட்டில் ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் பொறுப்பாக எடுத்து வைப்பதைப் போன்றது. அந்தப் பொறுப்பை உணர்ந்து நாம் செயல்பட்டாலே போதுமானது” என்று விக்கிப்பீடியர் அன்வர் சொன்னது எல்லோர் நெஞ்சையும் தொட்டது.

பத்து மணியில் இருந்து ஐந்து மணிக்குள் – விரும்பிய நேரத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தும் – அனைவரும் முழு நாளும் கலந்து கொண்டதும்; மாலை ஐந்து மணி வரை தான் தொடர் நிகழ்வு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், பல விக்கிப்பீடியர்கள் இரவு ஏழு மணி வரை இருந்து கட்டுரைகளை ஏற்றிவிட்டுக் கிளம்பியதும் – “ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா!” என்னும் பாவேந்தரின் பாடல் வரிகளை நினைவூட்டியது. அண்மைக்காலத்தில் இந்நிகழ்வு போலப் பல நிகழ்வுகள் நடப்பதையும் அதில் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொள்வதையும் பார்க்கும் போது – தமிழின், தமிழரின் இனி வருங்காலம் – இனிய வருங்காலம் தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

– கி. முத்துராமலிங்கம்(muthu@payilagam.com)

%d bloggers like this: