அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்
1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே அமைந்திருந்த சின்னச் சின்ன வல்லுனர் குழுக்களால் பெரிய நிறுவனங்களின் எந்தவிதப் பெரிய உதவிகளும் இல்லாமல் தன்னிச்சையாக வளர்த்தெடுக்கப் பட்டன.
அவற்றினுடைய இன்றைய நிலை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட அறுபது சதவிகித இணையதளங்கள் இந்த மென்பொருட்களினால் இயங்குகின்றன. மிகப் பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் தீர்வுச் சேவைக்கான தளமாக இவற்றைத் தேர்வு செய்து வருகின்றன. இதன் பொருள் என்ன? கட்டற்ற மற்றும் திறவூற்று மென்பொருட்களைக் (Free/Open Source Software – FOSS) கற்றுத் தேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதே சமயம் நமது கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் இன்னும் கூடக் கட்டற்ற மற்றும் திறவூற்று மென்பொருட்கள் பற்றிய பாடங்கள் இல்லை; இந்திய அளவிலேயே கிடையாது என்று சொல்லலாம். தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகக் கூடியவர்களாக வெளிவரக் கூடிய மாணவர்கள் இல்லை.
இந்தச் சூழலில்தான் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்து ஓர் அதிரடியான கோர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அது M.Sc FOSS. கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பான இது கட்டற்ற மற்றும் திறவூற்று மென்பொருட்களைப் பற்றிய பாடங்களைக் கற்றுத் தருகிறது. இந்தப் படிப்பு ஒரு தொலைநிலைப் படிப்பாகும். இந்தப் படிப்பில் FOSS பற்றி உச்சி முதல் உள்ளங்கால் வரை கற்றுத்தருகிறார்கள். FOSS-ன் ஆணிவேராக இருக்கக்கூடிய தத்துவப் பின்புலத்திலிருந்து அதிநவீனத் தொழில்நுட்பங்கள் வரை இந்தப் படிப்பில் பயிற்றுவிக்கப் படும்.
மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கும்போதே தமிழக அளவில் உள்ள வல்லுனர்கள் மற்றும் இதர FOSS குழுக்களுடன் தொடர்புகளும் அதன்மூலமாக அதிநவீனத் தொழில்நுட்பங்களை practical-ஆக அறிந்து கொள்ளவும், ஏன் உடனடி வேலையும்கூடக் கிடைக்கலாம். இந்தப் படிப்பு பற்றி நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசுங்கள். போதிய மாணவர்கள் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை இந்தக் கோர்ஸைக் கைவிடும் என்றும் கூடவே அறிவித்திருக்கிறார்கள். FOSS-ஐ மையமாகக் கொண்டு இயங்குகின்ற நிறுவனங்கள் இந்தக் கோர்ஸ் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு scholarship-ஓ sponsorship-ஓ கடனோ கொடுத்து உதவ முன்வரலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அதிரடி சரவெடியாக மாறவேண்டும். மேலும் விவரங்களுக்கு cde.annauniv.edu/MSCFOSS/
– மாணிக்