எளிய தமிழில் Car Electronics 11. உமிழ்வுக் கட்டுப்பாடு

ஊர்திகளின் எண்ணிக்கை உயர உயர அவற்றின் உமிழ்வால் பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக ஆகி வருகிறது. ஆகவே அரசாங்கங்கள் உமிழ்வுக் கட்டுப்பாட்டைத் (Emission control) தீவிரமாக அமல்படுத்துகின்றன. இவற்றில் எரிபொருள் முழுமையாக எரியாததால் வெளிவரும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), நீர்க்கரிமம் (Hydrocarbon) மற்றும் அதிக வெப்ப நிலையில் உருவாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (Nitrogen Oxides) மற்றும் புகைக்கரி (soot or particulate matter) ஆகியவை முக்கியமானவை. 

நைட்ரஜன் ஆக்சைடுகள் உணரி (NOx Sensor)

NOx என்பது எஞ்சின்களின் உமிழ்வுகளில் காணப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகளைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அனுமதிக்கப்படும் NOx மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயு அளவுகள் தொடர்பான கடுமையான சட்டங்கள் உள்ளன. மேலும் இந்த விதிமுறைகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. எனவே, உங்கள் கார் வெளியிடும் NOx வாயுக்களின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. NOx அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க காற்று எரிபொருள் விகிதத்தை உமிழ்வு கட்டுப்பாடு ECU நேரடியாக மாற்றும். இதைத் தாண்டிப் போனால் ஓட்டுநருக்கும் தெரிவிக்கும்.

இரண்டு வழி வினையூக்கி மாற்றிகள்

உமிழ்வில் வரும் மாசுகளை வினையூக்கிகளைப் (catalysts) பயன்படுத்தி முழுமையாக எரிய விடுவதே முக்கிய நோக்கம். இந்த சாதனங்களை வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) என்று சொல்கிறோம். இரண்டு வழி வினையூக்கி மாற்றிகள் உமிழ்வில் இருக்கும் நீர்க்கரிமம் (Hydrocarbon – HC) மற்றும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide – CO) ஆகிய இரண்டையும் எரியவைத்துக் கார்பன் டையாக்சைடு (Carbon Dioxide – CO2) மற்றும் நீராவியாக மாற்றிவிடுகின்றன.

மூன்று வழி வினையூக்கி மாற்றிகள்

3-way-catalytic-converter

மூன்று வழி வினையூக்கி மாற்றி

பெரும்பாலான நவீன கார்களில் இந்த மூன்று மாசுகளையும் கணிசமாகக் குறைக்கும் மூன்று வழி வினையூக்கி மாற்றிகள் பொருத்தப்படுகின்றன. மேற்கண்ட இரண்டு மாசுகளைத் தவிர நைட்ரஜன் ஆக்சைடுகளையும் (Nitrogen Oxides) இயற்கையிலேயே காற்றிலுள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்களாக மாற்றிவிடும்.

இவை பிளாட்டினம் (Platinum), ரோடியம் (Rhodium) மற்றும் பல்லேடியம் (Palladium) போன்ற உலோகங்கள் பூசப்பட்ட பீங்கான் சாதனங்கள். இந்த உலோகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆகவே மிக மெல்லிய மேற்பூச்சு மட்டுமே இருக்கும். செயல்திறனைக் கண்காணிக்க வெப்பநிலை உணரி (Temperature Sensor), ஆக்சிஜன் உணரி (Oxygen Sensor) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் உணரி (NOx Sensor) ஆகியவை உமிழ்வு அமைப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உணரிகள்.

உமிழ்வு வாயு மறுசுழற்சி (Exhaust Gas Recirculation – EGR)

எரிகலத்தின் உயர் வெப்பநிலையில் காற்றிலுள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதி வினையால் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) உற்பத்தி ஆகிவிடுகிறது. இதைத் தவிர்க்க உச்ச வெப்பநிலையைக் குறைக்கவேண்டும்.

பொறியிலிருந்து வெளியேறும் வாயுவின் ஒரு பகுதியை மீண்டும் பொறிக்குள் மறுசுழற்சி செய்வதன் மூலம் EGR செயல்படுகிறது. உமிழ்வுக் காற்றை இடமாற்றம் செய்கிறது மேலும் எரிகலத்தில் ஆக்சிஜனைக் குறைக்கிறது. இதனால் பொறிக்குள் உச்ச வெப்பநிலை ஓரளவு குறையும்.

உமிழ்வுக் கட்டுப்பாடு சரியாக வேலை செய்யாவிட்டால் ஓட்டுநருக்கு எப்படித் தெரியவரும்? 

மானிப்பலகையில் பொறியைச் சரிபார் (check engine) என்ற விளக்கு உள்ளது. இது பொறியின் வடிவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது எரியத் தொடங்கினால் பொறியிலோ அல்லது உமிழ்வுக் கட்டுப்பாட்டிலோ பிரச்சினை இருக்கலாம். மேலும் சோதனை செய்துதான் எது என்று சொல்லமுடியும். தேவைக்கு அதிகமாக எரிபொருள் உட்செலுத்தப்பட்டால் உமிழ்வு அதிகரிக்கும். இது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலே சென்றால் இந்த விளக்கு எரியும். இது மட்டுமல்லாமல் உணரி செயலிழந்தாலும் இந்த விளக்கு எரியக்கூடும்.

நன்றி

  1. Three-way catalytic convertor

இத்தொடரில் அடுத்த கட்டுரை: உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம்

சிறுவர் பாதுகாப்புப் பூட்டு. அமைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஓட்டுநர் இருக்கை. மழை உணரும் முன் கண்ணாடித் துடைப்பான். எரிபொருள் காலியாகும் தூரம் (Distance to Empty – DTE). தட்பவெப்பநிலை கட்டுப்பாடு (Climate control).

ashokramach@gmail.com

%d bloggers like this: