கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக,
1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது?
2. மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
3. யார் யாரெல்லாம் பங்களிப்பாளர்கள்
ஆகியவற்றை எழுதிப் பதிந்து வைக்க வேண்டும். எழுதிப் பதிந்து வைப்பது சரி! எங்கே எழுதுவது? அதற்குத் தான் கிட்லேப் முதலிய மென்பொருட்கள் இருக்கின்றன.
கிட்லேப் (அல்லது கிட்ஹப்)பில் ஒவ்வொரு திட்டப்பணியின்
1) விக்கி பக்கத்தில் எழுதலாம்.
2) ReadMe பக்கத்தில் திட்டப்பணி பற்றிய சுருக்கத்தை எழுதலாம்.
3) சிக்கல்கள்(Issues) பக்கத்தில் எழுதலாம். இங்கு என்னென்ன தேவை, வடிவமைப்புப் பக்கத்திற்குத் தேவையானவை என்ன, தரவுத்தளத்தில் என்னென்ன தேவை ஆகியவற்றை எழுதலாம். அருவி(Waterfall) முறை மென்பொருள் உருவாக்கத்தில் முன்பக்கத்திற்கு என்னென்ன தேவை, பின்புலத்தில் தரவுத்தள வடிவமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் முன்பு எழுதுவார்கள். இப்போது தகவெளிமை(Agile) முறையில் முன்பக்கத்தையும் பின்புலத்தையும் சேர்ப்பதற்கான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்(API) எழுதுவது பற்றி எழுதுகிறார்கள். சிக்கல்களைப் பற்றி எழுதும்போதே, சிக்கல் என்ன, எந்தத் தேதிக்குள் முடிக்க வேண்டும், விவரச் சீட்டு(label) ஆகியனவற்றையும் கொடுத்து விடுவார்கள்.
விவரச்சீட்டில்(label) என்ன இருக்கும்?
மென்பொருள் உருவாக்கத்தில் பல்வேறு நிலைகள் இருக்கும் அல்லவா! கருதுகோள்(Ideation), வடிவமைப்பு(Design), நிரலாக்கம்(Coding), சோதனை(Testing) ஆகியன இருக்குமே! அந்த நிலைகளுள் ஒன்றை விவரச்சீட்டில் எழுதி ஒட்டி வைத்திருப்பார்கள்.
சிக்கல் பலகை(Issue Board):
என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, எவையெல்லாம் தீர்ந்திருக்கின்றன. எவையெல்லாம் தீராமல் இருக்கின்றன என்பதை இங்கு போய்ப் பார்க்கலாம். நாம் உருவாக்குநர்களில்(Developer) ஒருவராக இருந்தால் இங்கிருந்து சிக்கல்களை நம் பெயருக்கு எடுத்து வேலை செய்யத் தொடங்கலாம்.
MileStone: (எல்லை)
தகவெளிமை(Agile) முறையில் ஒவ்வொரு குறுவிரையோட்டத்தை(Sprint)க் குறிக்கும். ஒவ்வொரு சிக்கலுக்கும் உரிய குறுவிரையோட்டத்தை முன்னரே குறித்து வைத்து வேலையைத் தொடங்குவது திட்டப்பணியைத் திட்டமிட்டபடி முடிக்க உதவும்.
(ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் கேட்டவை)