பொதுவாக மென்பொருள் சோதனைகளை(Software Testing – Types) இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
-
நிலைத்த வகை சோதனை (Static Testing)
-
இயக்க வகை சோதனை(Dynamic Testing)
நிலைத்த வகை சோதனை (Static Testing):
நிலைத்த வகை சோதனை என்பது உண்மையில் மென்பொருளைச் சோதிப்பது அன்று! மென்பொருளின் நிரல்(Code), தேவை ஆவணங்கள்(Requirement Documents), வடிவமைப்பு ஆவணங்கள்(Design Documents) ஆகியவற்றைச் சோதிப்பது ஆகும். மென்பொருளைச் சோதிப்பது என்பது மென்பொருளின் பயனைப் பொருத்து மாறும். ஆனால், நிரல், ஆவணங்கள் ஆகியவற்றைச் சோதிப்பது என்பது நிலையானது அல்லவா? அதனால் தான் இவ்வகைச் சோதனைக்கு நிலைத்த வகைச் சோதனை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
நிலைத்த வகை சோதனைகளை மேலும் அதன் உட்பிரிவுகளாக,
=> திறனாய்வு முறை (Review)
=> விளக்க முறை (Walkthrough)
என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
திறனாய்வு முறை (Review) :
இந்தத் திறனாய்வை முறைசாராத் திறனாய்வாகவும் (Informal) செய்யலாம்; முறையான திறனாய்வாகவும்(Formal) செய்யலாம். முறைசாரா(Informal Review)த் திறனாய்வு என்பதில் வேறு ஒரு நிரலர் நிரல், ஆவணங்கள் ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போது ஆய்ந்து பார்ப்பார். அவர் தம்முடைய ஆய்வு முடிவாக என்னென்ன சொல்ல வேண்டும் என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. தம்முடைய அனுபவத்தின் அடிப்படையில் அவர் திறனாய்வு செய்து முடிவுகளை விளக்குவார். இந்தத் திறனாய்வு முறைக்குத் தான் விளக்க முறை(Walkthrough) என்று பெயர்.
முறையான திறனாய்வு(Formal Review):
முறையான திறனாய்வு என்பது ஆய்வு(Inspection) என்று சொல்லப்படும். இந்தத் திறனாய்வில் யார் யார் கலந்து கொள்ள வேண்டும், எப்போது திறனாய்வுக் கூட்டம் நடக்கும், எங்கு நடக்கும் என்பன போன்ற எல்லாமே முறையாகத் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.
-
இந்த வகை திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவருக்கு ஏற்பாட்டாளர்(Moderator) என்று பெயர்.
-
திறனாய்வுக் கூட்டத்தில் நடக்கும் அனைத்தையும் குறிப்பெடுப்பவருக்கு குறிப்பெடுப்பவர்(Scribe) என்று பெயர்.
-
கூட்டத்தில் கலந்துகொண்டு திறனாய்வு செய்பவர்கள் திறனாய்வாளர்கள்(Reviewers) என்று சொல்லப்படுவார்கள். அவர்கள் எந்தெந்த நிரல்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் திறனாய்வுக்கு உட்படுத்துவார்கள் என்பது பற்றிய பட்டியல் திறனாய்வுக்கூட்டத்திற்கு முன்னரே முறையா எல்லோருக்கும் கொடுக்கப்படும்.
-
யாருடைய நிரல், ஆவணங்கள் ஆகியவற்றைத் திறனாய்வுக்கு உட்படுத்துகிறார்களோ – அவரை எழுத்தர்(Author) என்று சொல்வார்கள்.
இயக்க வகை சோதனை(Dynamic Testing)
இயக்க வகை சோதனைகளை நாம் முன்னரே விரிவாகப் பார்த்திருக்கிறோம். முழுமையான சோதனைக்குப் பிறகு வாடிக்கையாளர் செய்யும் சில சோதனைகள் இருக்கின்றன. என்ன – டெஸ்டர்கள் தாமே சோதிப்பார்கள்? வாடிக்கையாளர்களும் சோதிப்பார்களா? என்கிறீர்களா? எல்லாவகைச் சோதனைகளும் முழுமையாக முடிந்த பிறகு – வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தி வாடிக்கையாளர் ஏற்புச் சோதனைகள்(User Acceptance Testing) செய்யப்படும்.
-
ஆல்பா சோதனை(Alpha Testing)
- பீட்டா சோதனை(Beta Testing)
-
ஆகிய சோதனைகள் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் என்றால் எல்லா வாடிக்கையாளர்களும் அல்லர்! தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வாடிக்கையாளர்கள் இந்தச் சோதனை வாய்ப்பு கொடுக்கப்படும். அதென்ன ஆல்பா சோதனை, பீட்டா சோதனை? பார்ப்போம் ஒவ்வொன்றாக!
ஆல்பா சோதனை:
நாம் வெளியிடப் போகும் மென்பொருளை முழுமையாக டெஸ்டர்கள் கொண்டு சோதித்த பிறகு – வெளியீட்டிற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் – நம் இடத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். வெளியிடப் போகும் மென்பொருளை நம் கணினிகளில் நிறுவி அவர்களிடம் கொடுப்போம். அவர்களை புதிய வெளியீட்டைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டுவார்கள். அவர்கள் பயன்படுத்திப் பிழைகள் ஏதாவது இருந்தால் சொல்வார்கள். இப்படிச் செய்வதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
* மென்பொருள் நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார் என்பது வெளியீட்டிற்கு முன்னர் தெரிந்து விடும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் இப்படி வெளியீட்டிற்கு முன்னரே (பிறர் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்னரே) ஒரு மென்பொருளைப் பயன்படுத்துவதைப் பெருமையாக நினைப்பார்கள்.
பீட்டா சோதனை:
பீட்டா சோதனை என்பதும் வாடிக்கையாளர் செய்வது தான்! ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்! ஆல்பா சோதனையை வாடிக்கையாளர் – மென்பொருள் நிறுவனத்தின் கணினிகளில் செய்து பார்ப்பார். பீட்டா சோதனையை வாடிக்கையாளர் தம்முடைய இடத்தில் இருந்து கொண்டே தம்முடைய கணினியிலேயே சோதித்துப் பார்ப்பது ஆகும்.
இது வரை நாம் சோதனை வகைகள் என்னென்ன என்பதைப் பார்த்து விட்டோம். மென்பொருள் சோதனைகள் செய்வதற்கு என்றே சில வழிகாட்டு நெறிமுறைகள்(Software Testing Principles) இருக்கின்றன. அவை என்னென்ன? தொடர்ந்து பார்ப்போம்.
– கி. முத்துராமலிங்கம்(muthu@payilagam.com)