ஏன், நீங்கள் லினக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்?

கட்டற்ற பயனர்களின் ஆகச்சிறந்த இயங்குதளமாக, லினக்ஸ் விளங்குகிறது.

தன்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில், கிட்டத்தட்ட லினக்ஸ் கால் பதிக்காத துறையே இல்லை என்று குறிப்பிடலாம்

அப்படிப்பட்ட சிறப்புகள் மிக்க லினக்ஸ் ஐ, ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? என்பதற்கான சில தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

மேற்படி இந்த கட்டுரையானது, itsfoss தளத்தில் திரு.சாய் சுயம் தாஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

1. எங்கும் பயன்படுத்தலாம்

லினக்ஸ் என்பது ஏதோ கணினிகளுக்கான இயங்குதளம் மட்டுமல்ல.

சிசிடிவி கேமராக்கள் முதல் தொலைக்காட்சிகள்,ஸ்மார்ட் வாட்ச்கள் ஏன்? மொபைல் கருவிகளுக்கு கூட லினக்ஸ் ஐ நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுடைய தேவைக்கு ஏற்ப எங்கும், எதிலும் நினைத்து பயன்படுத்த முடியும்! என்பதே அதன் முதல் சிறப்பு.

2. பாதுகாப்பு

பாதுகாப்பு என்ற சொல்லுக்கு கணினி துறையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது, லினக்ஸ் இயங்குதலங்கள்.

விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டி வைரஸ் களை காட்டிலும், சாதாரண லினக்ஸ் இயங்குதளங்கள் சிறப்பாக செயல்படக் கூடியவை.

மேலும், நான் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த மாற்ற முடியாத லினக்ஸ் வெளியீடுகளை நீங்கள் பயன்படுத்தும் போது! உங்களுடைய பாதுகாப்பானது அடுத்த நிலைக்கு மேம்படுத்தப்படுகிறது.

மேலும், சிறந்த சமூக ஆதரவு  இருப்பதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் கூட உடனடியாக சரி செய்து விட முடியும்.

மேலும், இங்கு அனைத்துமே கட்டற்ற தரவுகள் என்பதால் நீங்களும் கூட இதில் திருத்தம் செய்யலாம்.

3. செலவு மிக மிகக் குறைவு

விண்டோஸ் போன்ற இயங்குதளங்களை நீங்கள் பயன்படுத்த நினைத்தால், அதற்கான வருடாந்திர சந்தாவை நீங்கள் வழங்க வேண்டி இருக்கும்.

மேலும், குறிப்பிட்ட செயல்களை கூட பணம் கொடுத்து அதிக விலைக்கு வாங்க வேண்டியது இருக்கும்.

லினக்ஸ் இல் இந்த பிரச்சனை சுத்தமாக இல்லை.

நீங்கள் கற்றுக் கொண்டால் மட்டும் போதும், லினக்ஸ் உங்களுக்கான சிறந்த துணைவனாக இருக்கும்.

4. புதுமையின் புகலிடம்

லினக்ஸில் பலவிதமான வெளியீடுகள் இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு வெளியீடை நீங்கள் பயன்படுத்தும் போதும் வெவ்வேறு விதமான அனுபவத்தை பெற முடியும்.

பல லினக்ஸ் வெளியீடுகளையும் பயன்படுத்தி பார்ப்பதே, சிலருக்கு பொழுது போக்காக இருக்கும்.

ஒவ்வொரு வெளியிடும் அதற்குரிய புதுமையினையும், தனித்துவத்தையும் கொண்டிருக்கிறது.

5. பழைய கணினியிலும் பயன்படுத்தலாம்

என்னுடைய நண்பர்கள் பலரும் கூறி கேட்டிருக்கிறேன்.

பழைய கணினிகளை விலை கொடுத்து வாங்கினாலும் கூட, அதில் தற்காலத்தில் இருக்கக்கூடிய புதிய விண்டோஸ் 11 போன்ற இயங்குதலங்களை பயன்படுத்த முடியாது என்று பலரும் புதிய கணினிகளை தேடி செல்கிறார்கள்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, இது மேலும் சுமை யினை தான் தருகிறது.

உங்களிடத்தில் அரசாங்கத்தில் வழங்கப்பட்ட பழைய மடிக்கணினிகள் இருந்தால் போதுமானது! அதில் கூட உங்களால், லினக்ஸ் ஐ எவ்வித தடையும் இன்றி சிறப்பாக பயன்படுத்த முடியும்.

ஏன்? 90களில் உள்ள பழைய கம்ப்யூட்டர்களில் கூட இன்றளவும் கூட, ரிலாக்ஸை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. தனி உரிமை பாதுகாப்பு

உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் திருடப்படாமல் இருக்க வேண்டும், என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சிறந்த தேர்வாக லினக்ஸ் அமையும்.

விண்டோஸ் போன்றவற்றோடு ஒப்பிடும்போது, உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் மிக மிக பாதுகாப்பாக பராமரிக்கப்படும்.

7. வேலைவாய்ப்பு

லினக்ஸ் பயன்படுத்த கற்றுக் கொள்வது என்பது பொழுதுபோக்கான விஷயம் மட்டுமல்ல.

லினக்ஸ் தொடர்பாக நீங்கள் ஆழமான அறிவை பெற்று இருந்தால், நிச்சயமாக உங்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

8. லினக்ஸ் சமூகத்தின் ஆதரவு

லினக்ஸ் சமூகமானது, உலகம் முழுவதிலும் இருந்து இயங்கி வருகிறது. எனவே, உங்களுக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த சிறந்த நிரலாளர்களின் நட்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் உங்களுடைய லினக்ஸ் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முடியும்.

9. மென்பொருள் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்

கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ளும் மென்பொருள் தொடர்பான செயல்பாடுகளுக்கு(like IOT projects), லினக்ஸ் இயங்குதளத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rasberry pie, Arduino ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

லினக்ஸ் தொடர்பான சிறந்த தகவல்களை மூலக்கட்டுரையோடு, எனக்குத் தெரிந்த தகவல்களையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: