கணக்குப் போட கத்துப்போம் – புதிய தொடர் அறிமுகம்| இயற்பியலோடு விளையாடும் பைத்தான் தொடர்

By | May 1, 2025

கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில், துளி அளவு கூட நம்பிக்கை இன்றி தொடங்கப்பட்ட கட்டுரை தொடர் தான் எளிய எலக்ட்ரானிக்ஸ். ஒரு செயலில்,நம்பிக்கையையும் கடந்து  “ஒழுங்கு”(Discipline) எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு, எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர் சாட்சியாக மாறியிருக்கிறது. நானே எதிர்பாராத வகையில், நானே கற்றுக் கொள்ளாத பலவற்றையும் தானாக கற்றுக்கொண்டு, இன்றைக்கு 50 கட்டுரைகளோடு எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ் இனிதே நிறைவடைந்தது.

நிறுத்தக் குறி போட்டால், அதை comma வாக மாற்ற வேண்டுமா?. ஏற்கனவே, எளிய தமிழில் C என்னும் தொடரை ஆரம்பித்து, அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறேன். அடிப்படையான நிரல் அமைப்புகள் குறித்து அந்த கட்டுரைகளின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இருந்தபோதிலும், பொறுப்பாசிரியரின் அறிவுரைக்கு இணங்க பைத்தான் படிக்க வேண்டும் என களத்தில் இறங்கினேன். தற்போது வரை ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. இன்றளவும் பைத்தான் மொழியில் சரளமாக என்னால் இயங்க முடியவில்லை. இந்தக் குறையை சரி செய்ய, பைத்தானை நம் வசப்படுத்த என்னதான் வழி ! என பலநாள் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் swaroop எழுதிய bytes of python புத்தகம், என்னுடைய பழைய பிராக்டிகல் நோட்டின் மீது இருந்தது. இரண்டையும் ஒருசேர பார்த்தபோதுதான் வினாடிப் பொழுதில் யோசனை தோன்றியது. உடனடியாக, பொறுப்பாசிரியரிடம் இயற்பியல் செயல்பாடு கணக்கீடுகளை மேற்கொள்வதற்கு, ஏதுவான எளிய பைத்தான் நிரல்களை தொடராக எழுதலாமா என கேட்டேன்.

இன்முக எமோஜியோடு இசைவும் கிடைத்துவிட்டது. இந்த தொடரை ஒழுங்கோடு, வாரம் தோறும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரை வீதம் எழுத வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன். மிக மிக அடிப்படையான பைத்தான் நிரல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, நானும் கற்றுக் கொண்டு வாசிக்கும் வாசகர்களுக்கும் பைத்தானின் அடிப்படைகளை கற்றுக் கொடுக்கப் போகிறேன். காணொளி வடிவில் இணையத்தில் கோடான கோடி பேர் கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழில் கூட ஆயிரக்கணக்கான காணொளிகளை உங்களால் பார்க்க முடியும். என்னதான் காணொளிகளை பார்த்து படித்தாலும், படித்த அடுத்த வினாடியை மறந்து போவதை நான் கவனிக்காமல் இல்லை.

ஆகவே, இந்த தொடருக்கு முழுக்க முழுக்க அடிப்படை நூலாக byte of python தான் இருக்கும். மேலும், நம்முடைய கணியம் வலைதளத்தில் கணியம் பொறுப்பாசிரியர், பயிலகம் கி முத்துராமலிங்கம் ஆகியோர் பைத்தான் தொடர்பான கட்டுரைகளை தமிழில் எழுதி வருகிறார்கள். அவர்களுடைய கட்டுரைகளையும், நீங்கள் படித்துப் பார்க்கலாம். மேலும், கட்டற்ற பங்களிப்பாளர் சையத் ஜாஃபர் அவர்களும் இலவசமாக பைத்தான் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். எனவே, பைத்தான் மொழியின் அடிப்படைகளை மேற்கண்ட வழிகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு, என்னால் இயன்றவரை இயற்பியலில் செயல்வடிவம் கொடுப்பதுதான் இந்த தொடரின் நோக்கம்.

வழக்கம்போல, வாசகர்களின் ஆதரவு இன்றி எதுவும் முடியாது. நான் எழுதுவதில் பிழைகள் இருக்கலாம். கருத்துக்கள் எழலாம். எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி என்னிடம் தெரிவியுங்கள். நானும் கற்று தெளிவடைந்து, வாசகர்களுக்கும் இனிய தமிழில் விருந்தளிக்க முயற்சி செய்கிறேன். இது முற்று முழுதாக புதிய முயற்சி.

Bytes of python book link: python.swaroopch.com/

நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை : kaniyam.com/learn-python-in-tamil-3/

காணொளிகள் : www.youtube.com/@syedjaferk

சில அடிப்படை கட்டுரைகள்

parottasalna.com/2024/07/05/python-fundamentals-the-print/

தமிழில்

ssktamil.wordpress.com/2025/04/12/printing-options-in-python-part-1/

ssktamil.wordpress.com/2025/04/13/printing-in-python-part-2/

மேற்கண்டவற்றைக் கொண்டு, உங்களுடைய கணினியில் பைத்தானை நிறுவி விடுங்கள்.

விரைவில்….. பைத்தான் மொழியில் எளிய கால்குலேட்டர் நிரல் எழுதுவது எப்படி என பார்ப்போம்…..

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com