விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம்.

அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது.

நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன்.

அவர்களும் ஒவ்வொரு கேள்விக்கும், தனது விலை மதிப்பில்லாத நேரத்தை செலவிட்டு முழு மனதோடு பதில் அளித்திருக்கிறார்கள். முழு மனதோடு கேள்விகளுக்கு பதிலளித்த திரு. புஹாரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கட்டுரைக்கு உதவிய விக்கி மூல பங்களிப்பாளர் திரு.பாலாஜி அவர்களுக்கும் மற்றும் திரு.தாஹா புஹாரி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேர்காணல் பகுதி

1.உங்களைப் பற்றி சில வரிகள்…!

M. தாஹா இப்ராஹிம் புஹாரி.



நான், M. தாஹா இப்ராஹிம் புஹாரி. அகவை சுமார் 68 ஆகும். சென்னையில் பிறந்து வளர்ந்தவன். பூர்வீகம் செங்கோட்டை [தந்தை] மற்றும் தென்காசி [தாயார்] ஆகும்.

பள்ளிப் படிப்பு 5வது வரையிலும் அரசுப் பள்ளியிலும், பின் 6 லிருந்து 11 வரை தனியார் பள்ளியிலும் தமிழ் வழி பயின்றவன். அக்காலத்தில் 11 வது வகுப்புதான் S.S.L.C. என்று அறியப்பட்டது. அதன் பின் மீனம்பாக்கம் A.M.Jain கல்லூரியில் PUC மற்றும் B.Sc (Maths)உம், College of Engineering, Guindyல், M.Sc(Applied Mathematics) 1979ம் ஆண்டு முடித்தவன். 

அங்கு, முதல் தலைமுறை IBM கணினியில், Fortranல் எனது Projectஐச் செய்தேன். Project முழுவதையும் Punch Cardல் Punch செய்து, கணினி மையத்தில் அளிக்க வேண்டும். அதை அவர்கள் கணினியில் இட்டு, முடிவை [Result] மறுநாள், Punch Card மூலமாக அளிப்பார்கள்  அதை அங்குள்ள Accounting Machineல் உள்ளீடு செய்து, காகிதத்தில் பிரதி எடுத்து, முடிவுகளைப் பரிசீலனை செய்து, பிழைகளைத் திருத்தி, பிழைகள் முழுவதுமாகக் களையப்படும் வரை மீண்டும், மீண்டும் கணினி மையம் மூலமாகச் சோதனை செய்ய வேண்டும். அக்காலக் கணினியில், அணி வரிசையில்  மூன்று மாறிகளைத்தான் செயல் படுத்த முடிந்தது. [In those days, the main frame computer supported only upto 3 variables in an array such as A(x, y, z)] எனது Project 8 மாறிகளைக் கொண்டது. எனவே, அதன் பிறகு, Projectஐ manualஆகத்தான் செய்ய வேண்டி இருந்தது. இக்காரணத்தினாலேயே, அக்கால கட்டத்திலேயே, கணினி இயலில் எனக்கு ஓர் ஈர்ப்பு வந்தது. அதனாலேயே கணினித் துறையிலேயே பணி தேடித் கொண்டிருந்தேன்.

அதற்கேற்றவாறு, பின்னி குழுமத்தில், கணினித் துறையில் வேலை கிடைத்தது. அங்கு டேவிட் என்னும் ஆங்கிலோ இந்தியர், Cobol Programmimg கற்றுத் தந்தார்.  1980லிருந்து  சுமார் இரண்டரை ஆண்டுகள், பின்னி நிறுவனத்தில் Computer Departmentல் பணி புரிந்தேன்.1982 ம் ஆண்டு, Indian Oil Corporationல், programmer ஆகச் சேர்ந்தேன். அங்கு, என் சொந்த முற்சியால், C, Basic, Dbase, Clipper, Foxpro போன்ற languageகளைக் கற்றுக் கொண்டேன்.

2016ல் IOCல் இருந்து, Chief Manager (Information System) ஆக ஒய்வு பெற்றேன். தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளவன்.

குடும்பம்

என் துணைவியார் இல்லத்தரசியாகத் திறம்படச் செயல்பட்டவர். நாங்கள் இறையருளால், வாழ்க்கையில் ஒரு ஸ்திரமான நிலையை அடைந்ததற்கு, மூல காரணம். அவர்தம் தந்தையார் மலேஷியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற நாணய மாற்றாளர். [Government approved money exchanger] கோலாலம்பூர் இந்தியப் பள்ளிவாசலின் செயலாளராகவும் இருந்தார்கள்.  என் மாமியார் இல்லத்தரசி ஆவார்.

என் மூத்த மகன், துணைவியார் மற்றும் மகன், மகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்கக் குழுமம் ஒன்றில் உயர் பதவியில் உள்ளார்.

இரண்டாம் மகன்,  மும்பையில்,  தம் துணைவியார் மற்றும் மகள்கள் இருவருடன் வசித்து, வெளிநாட்டு வங்கியில் உயர்ந்த பதவியில் இருந்தவர், தற்பொழுது சவுதியில் வசிக்கிறார்.
சவுதியின் அரசுடைமை வங்கியில் உயர் பதவியில் உள்ளார்.

மூன்றாம் மகன், சேலம் Government College of Engineeringல் B.E.(Metallaurgy) முடித்து விட்டு, பின், சுவீடனில் MS(Material Science)ல் தேர்ச்சி பெற்று, தற்போது இலண்டனில் Ph.D. முடிக்கச் சென்றுள்ளார். புதிதாக மணம் முடித்தவர்.

தாய், தந்தையார்

எம் தாய் இல்லத்தரசி. எம் தந்தையார், மௌலானா M. அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th அவர்கள், இஸ்லாமிய அறிஞர். சிறந்த தமிழ் எழுத்தாளர். ஆங்கிலம், தமிழ், அரபி, மலையாளம், உருது, பார்சி, பிரெஞ்சு ஆகிய ஏழு மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்கள்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், Authours’ Guild of Indiaவின் Vice President ஆகவும் இருந்தார்கள். தம் ‘தித்திக்கும் திருமறை’ என்ற நூலுக்காக, தமிழக அரசின் சமய நூலுக்கான முதல் பரிசு பெற்றார்கள். சமகாலத்தியவர்களான கலைஞர், ‘விகடன்’ வாசன், கல்கி, தேவன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, எஸ்.ஏ.பி, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், மணியன், விக்கிரமன், பால்யூ, அ.லெ.நடராஜன், அரு. இராமநாதன்,  பி.வி.ஆர்., ‘ஜாவர்’ சீதாராமன், கி.வா. ஜ, சோமலெ, தமிழ்வாணன் போன்ற மிகப் பல எழுத்தாளர்களுடன் நெருக்கம் கொண்டவர்கள். “பிறை” என்னும் இஸ்லாமிய மாத சஞ்சிகையை நடத்தி வந்தார்கள். இதன் சம கால இஸ்லாமிய இதழ்கள் மணி விளக்கு, முஸ்லிம் முரசு, நர்கீஸ், குர் ஆனின் குரல், மறு மலர்ச்சி போன்ற இதழ்கள் ஆகும்.

தமிழ்வாணன் அவர்கள், எம் தந்தையாருடன் கொண்டிருந்த ஆழ்ந்த நட்பின் காரணமாக, தம் ‘சங்கர்லால்’ நாவல்களில் வரும் கதாபாத்திரம் ஒருவருக்கு, அப்துல் வகாப் [இன்ஸ்பெக்டர் என்று எண்ணுகிறேன்] என்று பெயரிட்டிருந்தார்.

எம் தந்தையார் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களிலும், மலேஷியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலும் இஸ்லாமியச் சமயச் சொற்பொழிவு ஆற்றி வந்ததினால், மிகப் பிரபலமானவர்கள். இதன் காரணமாக, ரோம் நகரிலிருந்து, Pontifical institute of Arabic and Islamic Studies எனும் கிறிஸ்துவ அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பின் பேரில், இந்திய, பங்களா தேஷ், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பதினொரு பேர் ரோம் நகருக்குப் பயணமானார்கள். இந்தப் பதினொருவரில், தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரே ஒருவர், எம் தந்தையார்..  

இந்த அழைப்பானது, போப்பின் சார்பாக, இஸ்லாமிய மார்க்கம் குறித்து, கலந்து உரையாடி அறிந்து கொள்ளும் பொருட்டு,உலகெங்கிலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாகும்

எம் தந்தையார் 2002ல் மறைந்தார்கள்.

My father receiving a memento from Perasiriyar Kaa. Anbazzhagan. Kundrakudi Adigalaar also seen…
Authors’ Guild of India meeting. My father with the then Finance Minister Shri. C. Subramaniam …



2. உங்களுக்கு ஏன் தமிழ் ஆர்வம் உண்டானது?

நான் முன்னரே குறிப்பிட்டது போன்று, என் தந்தை தமிழ் இலக்கியவாதி. தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததனால், பல்வேறு தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவன் நான். மேலும், அக்காலங்களில், நாங்கள் இருந்த பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் சந்தர்ப்பமும் அமைந்தது.

சிறு வயதிலேயே, என் தந்தையார் நடத்தி வந்த “பிறை” மாத சஞ்சிகையில், தொடர்ந்து சிறுவர்க்கான கதைகள் எழுதி வந்தேன். அக்கால கட்டத்தில் வெளி வந்த “கோகுலம்” சிறுவர் இதழிலும், “குமுதம்”, “ஆனந்த விகடன்” போன்ற இதழ்களிலும் துணுக்குகள் எழுதி வந்தேன். அதறகாக, அந்த இதழ்கள் அனுப்பிய சிறு சன்மானம் என்னை மேலும் எழுதத் தூண்டினாலும், வாழ்க்கையின் தேவைகள் என்னைச் சற்றே அப்பாதையில் இருந்து மாற்றி விட்டது.

என் தமிழ் ஈடுபாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணம், நான் பயின்ற தனியார் பள்ளியின் சிறு வகுப்பின் தமிழ் ஆசிரியர் திரு. சிவ. சுப்பிரமணியம் ஆவார் . மேலும் இன்னொரு காரணம், மேல் நிலை வகுப்பின் தமிழ் ஆசிரியர் திரு. முத்துசாமி அவர்கள். அவர் தமிழில் M.A.M.Ed பட்டம் பெற்று, தமிழைச் சுவை பட நடத்துவார். அவர் நாடக நடிகராகவும் இருந்தவர் ஆதலால், நடித்தே காட்டுவார். கண்ணகியின் வழக்குரை காதையை அவர் நடத்திய விதம் இன்னும் நினைவில் நிற்கிறது. ‘தேரா மன்னா செப்புவதுடையேன்’ என ஆரம்பித்து ‘கோவலன் மனைவி கண்ணகியென்பது என் பெயரே’ என முடியும் பகுதி அக்காலத்தில் மனப்பாடப் பகுதி. சுவைபட அவர் நடத்திய முறையினால், அந்த செய்யுட் பகுதி, வகுப்பு மாணவர்கள் அனைவரும் சுலபமாக நினைவில் நிறுத்த உதவியாக இருந்தது.மேலும், நுடபமாக, செய்யுட்களை விளக்கும் திறனும் பெற்றிருந்தார். உதாரணமாக, இப்பகுதியில், கண்ணகி தன பிறந்த வீட்டுப் பெருமையைக் கூறாமல், புகுந்த வீட்டுப் பெருமையை, அரசனிடம் கூறுகிறாள். இது பெண்களின் இயல்பான தன்மைக்கு மாறு என்பதாக விளக்கினார்.

தற்காலத்தில் இத்தகு தமிழாசிரியர்கள் அமையப் பெறுவது துர்லபம் என்றே கருதுகிறேன்.

3. விக்கிமூலம் குறித்து எப்போது அறிந்து கொண்டீர்கள்?

நான் 2016ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். அது வரை வேறு பணிகளில் ஈடுபட இயலாமல், என் பணிச் சுமை, தடையாக இருந்தது. ஓய்வு பெற்ற பின்னரே, விக்கிமூலம் என் கவனத்தில் வந்தது. பணி ஓய்வு பெற்று, சரியாக ஒரு வருடம் கழித்து, 2017ல் பயனராக இணைந்தேன்.

4. விக்கிமூலத்தில் உங்கள் பணிகள் என்னென்ன?

மெய்ப்புப் பார்த்தல் [Proof Reading], மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களைச் சரி பார்த்தல் [Verification], அத்தியாயங்கள் ஒருங்கிணைவு [Chapters Transclusion], எழுத்துணரியாக்கம் செய்தல் [OCR} ஆகியவை அடிப்படைப் பணிகள்.

ஆங்கில விக்கிமூலத்தில் நான் காணும் வார்ப்புருகளை, தமிழில் வடிவமைக்குமாறு பிற பயனர்களைக் கோருதல் [குறிப்பாக திரு. பாலாஜி மற்றும் திரு. தகவலுழவன்] . இறையருளால், பிற பயனர்கள் கடினம் என ஒதுக்கும் பக்கங்களை வடிவமைத்தல். குறிப்பாக மரபு வழி [Family Tree], கடினமான அட்டவணைகள் [Tables], படங்களுடன் கூடிய பக்கங்கள், பொருளடக்கம் [Index Page] ஆகியவற்றைத் திறம்பட வடிவுறுத்துகிறேன்.

பிற பயனர்கள் பயனுறும் வகையில் “உத்திகளும் உபாயங்களும்” என்ற பகுதியில் நான் கடினமானவற்றை எவ்வாறு வடிவமைக்கிறேன் என விளக்குவதுடன், நான் விழைந்து பெற்ற புதிய வார்ப்புருகளைக் கையாண்ட விதம் குறித்தும், ஆங்கில மற்றும் தமிழ் விக்கி மூலத்தில் நான் கண்ட சுவையான, திறமையான வார்ப்புருகளையும் விளக்குகிறேன். பிற பயனர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க, அவர்களுக்குத் துணையாக அவர்கள் மெய்ப்புச் செய்யும் பக்கங்களில் உதவுகிறேன்.படங்களை, அவற்றின் சரியான விகிதத்தில் நூற்களில் இடம் பெற முயற்சிக்கிறேன்.

சில பக்கங்களே மெய்ப்புப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கும் நூற்களில், அப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்து, மெய்ப்புப் பணியை முழுமையுறச் செயகிறேன். சில பக்கங்கள் தேவைப்படும் நிலையில் உள்ள சில நூற்களில், தேவைப்படும் பக்கங்களை, இணையத்தில் தேடி, தரவேற்றி, நிர்வாகிகளுக்கு [Administrators] உரையாடல் பகுதியில் தெரிவிக்கிறேன். சில அரிய நூற்கள் இணையத்தில் கிடைக்கும். அவ்வாறான நூற்களின் சுட்டிகளை நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கின்றேன்.

நூற்களை, ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆய்வு செய்து, அவை அனைத்துப் பக்கங்களுடன் முழுமையாகத் திகழ்கின்றனவா என்பதை உறுதி செயகிறேன். பக்கங்கள் இல்லாத பட்சத்தில், உரியவர்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்.

Proofreadthon என்னும் மெய்ப்புப் பார்க்கும் போட்டிகளில் பங்கேற்றதுடன், போட்டிக்காகச் சில நூற்களையும் தெரிவு செய்து கொடுத்தேன்.

என்னால் இயன்ற அளவு, நிர்வாகிகளுடன் ஒத்துழைக்கிறேன். அவர்கள் விடுக்கும் வேண்டுகோள்களை ஏற்றுச் செயல்படுகிறேன். விக்கிமூலத்தின் முதல் பக்கத்தில் மாதம் தோறும் “இம்மாதத்தின் கூட்டு மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்” என்னும் பகுதியில் இடம் பெறும் நூற்களை, அம்மாதத்திற்குள் விரைவாக முடித்துத் தர முயல்கிறேன்.

5. விக்கிமூலத்தில் என்னென்ன மேம்பாடுகள் தேவை?

நான் விக்கிமூலத்தில், சுமார் ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், தானியங்கியின் செயல்பாடுகள் குறித்து இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

நிர்வாகிகளின் அருமுயற்சியால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விக்கிமூலத்தை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அறிந்தேன்.  தமிழக அரசும் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே விக்கிமூலத்தை அறிமுகப்படுத்துகிறது என்றும் கேள்விப் பட்டேன். அவ்வாறான நிகழ்ச்சிகளில் தானியங்கியின் செயல்பாடு குறித்து விளக்குவது மிக அவசியம் எனக் கருதுகிறேன். மேலும், புதிய பயனர்களுக்கு மேலடி, கீழடி குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால், மேலடி, கீழடிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. இதனால், சரிபார்ப்பவர்களின் பணிச் சுமை அதிகமாகிறது.

மேலும் Proofreadthon போன்ற போட்டிகளில் மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, சரிவர மெய்ப்புச் செய்யாமலேயே, பக்கத்தின் நிலையைக் குறிக்கும் வண்ணங்களை மாற்றுவதனாலும், சரிபார்ப்பவரின் பளு அதிகமாகிறது.

இவ்வாறான போட்டிகளில், பங்கேற்பாளர்களுக்கு, மாதிரிச் சுற்றில், சில பக்கங்களை வழங்கி, அதில் அவர்கள் இழைக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்திய பின்னரே, இறுதிச் சுற்று போட்டிகள் ஆரம்பிக்கப் படல் வேண்டும். இவ்வாறு மாதிரிச் சுற்றில் கலந்து கொண்டு, பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டு, திருத்திக் கொண்ட பங்கேற்பாளர்கள், இறுதிச் சுற்றில் மீண்டும் அதே பிழைகளைச் செய்தால், அப்போட்டியில், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படல் வேண்டும்.

புதிய பயனர்களுக்கு, விக்கிமூலப் பயிலரங்குகள் அடிக்கடி நடத்தபபடுதல் அவசியம்.

வெகுஜன ஊடகங்கள் / சஞ்சிகைகளிடையே விக்கிமூலம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றே கருதுகிறேன். அவ்வாறான விழிப்புணர்வு ஏற்பட்டால், அதிகமான அளவில் புதிய பயனர்களை நாம் பெறலாம் என எண்ணுகிறேன்.

6. குறிப்பிடும்படியான விக்கிமூலக் கருவிகள் யாவை?

விக்கிமூலக் கருவிகள் குறித்து நான் அறியேன். இது வரை அக்கருவிகளைப் பயனுறுத்தியதும் இல்லை.

7. வருங்காலத் திட்டங்கள் ஏதாவது உள்ளனவா?

திரு. தகவலுழவன் தானியங்கியைச் செயல்படுத்தும் முறை குறித்துத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இன் ஷா அல்லாஹ், அதனைக் கற்றுக் கொண்டால், எழுத்துணரியாக்கம் செய்ய வேண்டிய நூற்கள், 1000க்கும் மேற்பட்டுள்ளன. அவற்றை, இன் ஷா அல்லாஹ்,எழுத்துணரியாக்கம் செய்யலாம். ஆங்கில விக்கி மூலத்தில் உள்ள பல வார்ப்புருகளைக் குறித்து வைத்துள்ளேன். அவற்றை, பிற பயனர்களின் உதவியுடன், வடிவிறக்கம் செய்யலாம். மாதா மாதம் முழுமை பெறும் ஆங்கில நூற்களின் பட்டியல் ஆங்கில விக்கியில் வெளியிடப் பெறுகின்றது. அதே போன்று தமிழிலும் மாதந்தோறும் முழுமை பெறும் நூற்களின் பட்டியலை வெளியிட்டால், அநேகர் பயன் பெறுவர்.

என் வழி காட்டுதல் “உத்திகளும் உபாயங்களும்” பக்கத்தை மேலும் பொலிவுறச் செய்தல் வேண்டும். வார்ப்புரு வடிவிறக்கம் செய்யும் முறையைக் கற்றல் வேண்டும். இதனால், பிற பயனர்களின் உதவியை நாடி, அவர்கள் நேரத்தை வீணடித்தலைத் தவிர்க்கலாம்.

ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது, கவனமாக மெய்ப்புச் செய்தல் வேண்டும். ஆனால், துர்ப்பாக்கிய வசமாக, அவ்வாறு செய்யப்படுவதில்லை. ஆகையால், இது வரை மெய்ப்புப் பார்க்கப் பட்ட நூற்களிலும், சரிபார்க்கப் பட்ட நூற்களிலும், இக்குறையைக் களைய, இன் ஷா அல்லாஹ், முயற்சிப்பேன்.


8. தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவு எப்படி உள்ளது?

தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் உள்ள ஆதரவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால், என் விக்கிமூல உதவிப் பக்கத்தை அநேகர் உபயோகிக்கின்றனர் எனத் தெரிகின்றது. சில பயனர்கள், அவர்களால் மெய்ப்புப் பார்க்க இயலாத பக்கங்களைச் சீரமைக்க சில பொழுது என் உதவியை நாடுவதும் உண்டு.

9. இளைஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்ற என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறான ஆலோசனைகள் கூறும் தகுதி எனக்கிருப்பதாக நான் கருதவில்லை. எனினும், விக்கிமூல நிர்வாகிகள் தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் விக்கிமூலத்தை அறிமுகப்படுத்த மேற்கொண்டிருக்கும் முயற்சிகளே முதல் படியாகத் திகழும் என யோசிக்கிறேன். அரசுடன் இணைந்து, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஆசிரிய பெருமக்களுக்குப் போதிய விழிப்புணர்வை இச்செயல் மூலம் ஏற்படுத்தினால், அவர்கள் பல காலம் அப்பாடசாலை வழிக் கடக்கும் மாணாக்கருக்கு, நம் முத்தமிழின் இலக்கியப் பெருமையை, பண்பாட்டை, பழமையை, தொன்மையை, இலக்கணக் கட்டமைப்பை, பராம்பரியத்தை இலகுவாக்க கடத்தப் பெரும் துணையாக அமையும். இதுவே ~தமிழ் இனி மெல்லச் சாகும்~ என்ற கூற்றைப் பொய்யாக்கும்.

10. இலக்கணப் பிழைகள் தவிர்க்கக் கருவிகள் உள்ளனவா?

நான் அறிந்த வரையில் இல்லை எனவே கூறலாம். தமிழில் உள்ள இலக்கண நூல்களை நான் விக்கிமூலத்திலும் கண்டுள்ளேன். ஆனாலும், வெகு ஜன ஊடகங்களில் அடிக்கடி, தமிழைப் பிழையின்றிப் பேசுவது / எழுதுவது குறித்த தொடர் கட்டுரைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது கூட, அவ்வாறான ஒரு தொடர் தினமணியில் வெளியாகிறது. இந்து-தமிழ், தினமணி கதிர் போன்றவற்றில் வெளியான தொடர்களின் இணைய இணைப்புகளை, நான் என் முக நூல் பக்கத்தில் தந்துள்ளேன். அவை பேருதவியாக அமையலாம். மேலும், விக்கிமூல நிர்வாகிகள், இத்தொடர்களின் ஆசிரியர்களை அணுகி, அவற்றை விக்கிமூலத்தில் வெளியிடத் தகுந்த முனைப்புகளை முன்னெடுத்தால், தமிழ்ச் சமூகம் பெரும் பயனடையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

 

அரும்பணிகளுடன் தமிழுக்கு பங்களித்துவரும் திரு.தாஹா புஹாரி அவர்களுக்கும் தமிழ் விக்கி பங்களிப்பாளர்கள் அனுவருக்கும் எமது நன்றிகள்.

 

தொடர்ந்து இதுபோல தமிழ் சமூகத்திற்காக உழைக்கும் பல முகங்களோடு உங்களை வந்து சந்திக்கிறோம்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: