எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே ஹோம் அசிஸ்டன்ட்(home assistant io )எனும் செயற்கை நுண்ணறிவு செயலி குறித்து பார்த்திருந்தோம்.
மேலும், அதன் மூலமாக வழங்கப்படக்கூடிய இணையத்தோடு இணைந்து கருவி தொழில்நுட்பம்(internet of things) குறித்தும் பார்த்து இருந்தோம்.
அந்தக் கட்டுரையில் ஐஓடி(IOT) குறித்து நான் தெரிவித்திருந்தேன்.
ஆங்கிலத்தில் இதன் முழு விரிவாக்கமானது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என அறியப்படுகிறது.
அதாவது இணையத்தோடு இணைந்த கருவிகள் என்று தமிழில் பொருள் படும்.
சரி! அது தொடர்பாக விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
kaniyam.com/category/basic-electronics/
சரி! இணையத்தோடு இணைந்த கருவிகள் என்றால் என்ன? கட்டுரை படிக்க வந்தவர்களிடமே கேள்வி கேட்கிறேன் என்று யோசிக்க வேண்டாம்.
இந்த தொழில்நுட்பம் இன்று தோன்றியது என்று சொல்லிவிட முடியாது.
அடிப்படையில், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் எந்த கட்டுரை கூட இதன் உடன் தொடர்புடையது தான். அதான் கட்டுரையின் தலைப்பிலேயே இருக்கிறது என்று நீங்கள் கேட்டுவிட வேண்டாம்.
நான் இங்கு எழுதிக் கொண்டிருக்க கூடிய கட்டுரையானது சங்கேத மொழியில்(binary language) கணியம் இணையதளத்தின் சேமிப்பகங்களில்(servers) சேமிக்கப்பட்டு இருக்கும்.
நீங்கள் google போன்ற இணைய தேடுபொறியை கொண்டு, கணியம் இணையதளத்திற்குள் நுழைந்து இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுதான் இணையத்தோடு இணைந்த கருவிகளின் அடிப்படை. ஆனால் இங்கு நீங்கள் எந்த கருவியினையும் இயக்கவில்லை. மாறாக, அதில் வழங்கப்பட்டுள்ள தகவலை மட்டும் பார்வையிடுகிறார்கள்.
இணையத்தோடு இணைந்து கருவிகள் என்பது, எவ்வித மனித இடைமுகமும் இன்றி செயல்களை செய்யக் கூடியதாக இருக்கிறது.
உதாரணமாக, உங்கள் வீட்டில் ஒரு மாமரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மாமரத்தின் தரை பரப்பு வெப்ப நிலையானது, 35 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக செல்லும்போது நீர் பாய்ச்சப்பட வேண்டும் என வைத்துக் கொள்வோம்.
இதற்காக நீங்கள் சில சென்சார்களை பயன்படுத்தலாம். மேலும், இவை அனைத்தையும் இணையத்தோடு இணைப்பதன் மூலமாக உங்களுடைய கணினியில் இருந்து 35 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலை வரும்போது தானாகவே தொட்டியில் உள்ள நீர் பாகிக்கப்படும்.
நீங்கள் ஒரு முறை மட்டும் அதற்கான நிரலை எழுதி விட்டால் போதுமானது. மேலும் தகவல்களை சரி செய்து வைத்து விட்டால், உங்களுடைய உதவி ஏதும் இன்றி இது தானாக செயல்படும்.
அடிப்படையில், இந்த தொழில்நுட்பமானது பல தசாப்தங்களுக்கு முன்பே அறிவியல் துறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நீங்கள் அமெரிக்காவில் இருக்கக்கூடிய, ஒரு இயற்பியல் செயல்முறை கருவியை இயக்கி பார்க்க விரும்புகிறீர்கள்! அதற்காக நீங்கள் அமெரிக்கா சொல்ல முடியாது.
இத்தகைய சூழலில் அந்த கருவியை இணையத்தோடு இணைக்கும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அந்த கருவியை கணினி வழியாக இயக்கி அதில் இருந்து தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்காலத்தில், இவ்வகையில் தான் கிளவுட் கேமிங் செயல்படுகிறது.
தற்காலத்தில் இருக்கக்கூடிய இருசக்கர வாகன பாதுகாப்பு கருவிகளும் இவ்வகையில் தான் செயல்படுகின்றன
தற்காலத்தில் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அனைத்து இருசக்கர வாகன கருவிகளிலும், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து உங்களுடைய வாகனம் வெளியில் செல்லும்போது! வாகனத்தின் எஞ்சின் தானாகவே அணைக்கப்பட்டு விடுகிறது.
அதுபோலே, வான் பாதுகாப்பு சாதனங்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்! உதாரணமாக, எதிரி நாட்டில் இருந்து ஏவுகணைகள் வீசப்படும் போது அவற்றை தானாகவே கண்டறிந்து தாக்கி அடிக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.
தற்காலத்தில், எலக்ட்ரானிக்ஸ் துறையின் மிக முன்னேறிய துறையாகவே இது(IOT) மாறிவிட்டது. இதற்கு சிறந்த வருங்காலம் இருப்பதாக பலரும் நம்புகின்றனர்.
மேலும், இத்தகைய இணையத்தோடு இணைந்த கருவிகளின் மூலமாக அதிகப்படியான ஆற்றல் இழப்பை தவிர்க்க முடியும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவை அனைத்தும் ஒன்றோடு பின்னிப்பினைந்த கணினிகளின் மூலமாக சாத்தியமாகிறது.
மேலும், ஒவ்வொரு கணினியிலும் உள்ளக சரிபார்ப்பு அமைப்புகளும், அமைக்கப்பட்டு இருக்கும்.ஒவ்வொரு தரவுகளும், கணினிக்குள்ளாக சரிபார்க்கப்பட்ட பிறகே வெளியில் அனுப்பப்படும்.
மேலும, அணுக்கதிர்வீச்சு உள்ள பகுதிகளிலும் ஆபத்தான மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் இத்தகைய கருவிகளை அனுப்பி ஆராய்ச்சிகளை நம்மால் மேற்கொள்ள முடியும். மனித மேற்பார்வையிடல் இல்லாமலேயே, இக்கருவிகள் செயல்படுகின்றன.
சரி! இந்த கருவிகளுக்கு பின்னால் அடிப்படையில் என்ன எலக்ட்ரானிக் பொருட்கள் தான் இருக்கிறது? என்பதை தெளிவாக பார்த்து விடலாம்.
இத்தகைய ஒரு கருவியை உருவாக்க உங்களுக்கு தேவைக்கு ஏற்ற ஒரு சென்சார்(specific type sensor for your desired work)வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் மாலை ஆறு மணி முதல் காலை 6 மணி வரை எறியக்கூடிய ஒரு மின் விளக்கை உருவாக்க விரும்பினால், உங்களுக்கு அதற்கு ஏற்ற ஒரு உள்ளார்ந்த மின்சுற்று தேவைப்படும்.
உதாரணமாக, தற்காலத்தில் கிடைக்க கூடிய ராஸ்பெரிப்பை(raspberry pie), அட்ரினோ(Arduino ) போன்ற மின்சுற்றுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த குறிப்பிட்ட நேரத்திற்கான நிரல் ஆக்கத்தை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். அதை, அந்த உள்ளார்ந்த சுற்றுகளில் பதிவேற்ற வேண்டும்.
அதனோடு ஒளி சென்சார் ஒன்றை இணைக்க வேண்டும். மேலும், உங்களுக்கு தேவையான மின் விளக்கையும் இணைக்க வேண்டும். இந்த சுற்றுக்கு மின் இணைப்பு மற்றும் இணைய இணைப்பை வழங்க வேண்டும்.
பின்பு இதற்கான இயக்க செயலியை,(control app) உங்களுடைய கருவியில் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
அடிப்படையில், நான் கூறுவது போல இது மிகவும் எளிமையான செயல் அல்ல ! இது சற்றே நுணுக்கமானது தான்.
ஆனால், மேற்கண்ட செயல்களில் நீங்கள் கைதேர்ந்தவர் ஆக இருந்தால்! எடிசன் காலத்து குண்டு பல்பை கூட இன்டர்நெட்டோடு இணைத்து விட முடியும்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவர், ஆண்டிப்பட்டியில் இருக்கும் மின் விளக்கை இயக்க முடியும்.
தொலைக்காட்சி பெட்டியில் சேனல்களை மாற்ற முடியும்.
திரைப்படங்களில் வரும் மாயாஜால வித்தையை மிஞ்சும் அளவுக்கு, தற்காலத்தில் ஐஓடி கருவிகள் முன்னேறி இருக்கின்றன.
எனக்குத் தெரிந்தவரை வேளாண்மை, வான் பாதுகாப்பு, வீட்டு உபயோக சாதனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ,வானியல் கருவிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பல்வேறுபட்ட துறைகளிலும் ஐஓடி தனது காலை பதித்திருக்கிறது.
நான் முதலில் இருந்தே பார்த்து வரக்கூடிய, ஒவ்வொரு எலக்ட்ரானிக் சாதனமும் இணைந்து தான் இவ்வளவு பெரிய விந்தையை செயல்படுத்தி காட்டுகிறது.
எனக்கு இருக்கக்கூடிய அடிப்படையான ஐஓடி தொடர்பான அறிவைக் கொண்டு, இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
நான் வழங்கி இருக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் என்னுடைய இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com