என்னப்பா! எலக்ட்ரானிக்ஸ்,கட்டற்ற செயலிகள் என அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த நீயும், இப்பொழுது லினக்ஸ் புராணத்தை பாடத் தொடங்கி விட்டாயா என கேட்கிறீர்களா?
நான்கு மாத காலம் மட்டுமே நான் லினக்ஸ் பயனராக அறியப்படுகிறேன். இல்லையே! நீ ஏழு,எட்டு மாதங்களுக்கு முன்பே லினக்ஸ் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா? உண்மையை சொல்லப்போனால், நான் கடந்து ஆறு மாதங்களாக மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்து வருகிறேன்(அதுவும் நம் பொறுப்பாசிரியரின் பொறுப்பான அறிவுரைகளை கேட்டு தான் கஷ்டப்பட்டு லேப்டாப்பை வாங்கி இருக்கிறேன்). அதற்கு முன்பெல்லாம் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கணினியை பார்த்தது மட்டும்தான். பல்வேறு பயனர்களைப் போல பல ஆண்டுகாலம் விண்டோஸுக்குள் முடங்கி கிடந்து விட்டு புதியதாக லினக்ஸ் பயன்படுத்த தொடங்கிவிட்டு அதை புகழ்ந்து தள்ளும் லினக்ஸ் பயனரல்ல.
கணினி வாங்குவதற்கு முன்பே லினக்ஸ் குறித்து எழுதி, ஆர்வத்தோடு மற்றும் ஒரு வித பயத்தோடு நானே சுயமாக பயந்து பயந்து நிறுவிய இயங்கு தளம் தான் லினக்ஸ். 256 ஜிபி சேமிப்பாக வசதி(storage), எட்டு ஜிபி ரேம்(8Gb ram)கொண்ட, ஒரு தசாப்தத்திற்கு(10years = தசாப்தம்)முந்தைய லெனோவோ(lenovo thinkpad) மடிக்கணியை தான், நான் பயன்படுத்தி வருகிறேன்.
என்னுடைய கல்லூரி செயல்பாடு வேலைகளுக்கு விண்டோஸ் இல்லாமல் கதை நடக்காது. எனக்கு லினக்ஸ் குறித்து தெரிந்திருந்தாலும், பிறருக்கு அது குறித்து எடுத்துக்கூறி செயல்பாடுகளை முடிப்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும்(நமக்கு நாமே சொல்லிக் கொள்வது தான்). இதைத்தான் மடிக்கணினி வாங்கிய முதல் நாளிலேயே எங்கள் பொறுப்பாசிரியரிடம் சொன்னேன். அவரும் உன்னை போன்றவர்களுக்காகவே,Dual boot எனும் அருமையான வசதி கணினிகளில் இருப்பதாக சொன்னார். என்னடா இது ஒன்றுமே புரியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான், ஒரே கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட இயங்குதளங்களை பயன்படுத்துவது தான் dual boot என்று எனக்கு புரியும் விதத்தில் எடுத்துக் கூறினார்.
நம்மிடம் இருப்பது தலைமுறை கடந்து போன ஒரு பழங்காலத்து மடிக்கணினி, இதில் எங்கே போய் ஒன்றுக்கு இரண்டு இயங்கு தளங்களை வைத்து மெயின்டைன் பண்ணுவது(திடீரென வெடித்து போய்விட்டால் என்ன செய்வது ?)என கொஞ்சம் கொஞ்சம் நாட்கள் கடத்திக் கடத்தி சென்று கொண்டிருந்தேன். இருந்த போதும் இதன் சாத்திய கூறுகள் குறித்து, தொடர்ந்து இணையத்தில் ஆராய்ந்து கொண்டுதான் இருந்தேன். ஒருவழியாக கல்லூரி பரிட்சை விடுமுறையும் வந்தது.இதற்காகவே புதியதாக ஒரு பென் ட்ரைவ்(pendrive )வாங்கி என்ன லினக்ஸ் விநியோகத்தை ஏற்றலாம் என்று கொஞ்ச காலம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதற்கும் நமது பொறுப்பாசிரியர் லினக்ஸ் மின்ட் நிறுவலாம் என்று ஐடியா கொடுத்தார். லினக்ஸ் மின்ட் சின்னமின்(cinnamin )போன்ற சிறந்த திறன்மிக்க விநியோகங்கள்(distros )காணக் கிடைக்கும். இருந்தாலும், பழைய மடிக்கணினி என்பதால், தயங்கிக் கொண்டே லினக்ஸ் மின்டின் மிகவும் சிறிய மற்றும் குறைந்த செயல் திறன் கொண்ட கணினிகளிலும் சிறப்பாக இயங்கும் லினக்ஸ் மின்ட் xfce வகையை நிறுவலாம் என முடிவு(5Gb space and 512 mb ram is the system requirement) செய்தேன். அதற்காக மூன்று நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இன்டர்நெட்டை செலவழித்து(limited data problem), டவுன்லோட் செய்து ஒரு வழியாக வேலையை முடித்து விட்டேன்.
பின்பு தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி அளித்த அறிவுரைகளின் மூலம், எப்படியோ 50 gb சேமிப்பக வசதியோடு லினக்ஸ் மின்டை நிரூவிவிட்டேன். அதைத் தொடர்ந்து வந்த சில நாட்களிலேயே, பகுதி நேர மொழிபெயர்ப்பாளராக ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிக்கும் சேர்ந்து விட்டேன்(இது நம்ம லிஸ்டிலேயே இல்லை என யோசிக்கிறீர்களா? என் லிஸ்ட்லும் தான் இல்லை. வாழ்க்கையின் நிறைய விஷயங்கள் ஆக்சிடென்டலாக நடந்து விடுகிறது).
என்னதான் இருந்தாலும், இரண்டு மூன்று நாட்களுக்கு பணியிட வேலைகளை சமாளிக்க, விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்தி வந்தேன். மொழிபெயர்ப்பு செய்வதோடு அந்தப் பத்தியை ஒலியாக(voice clip)பதிவு செய்து google Drive இல் பதிவேற்றம் செய்ய வேண்டும். நான் மொபைலில் ரெக்கார்டு செய்து, விண்டோஸ் இல் பதிவேற்றம் செய்து அங்கிருந்து தான் google drive க்கு மாற்ற முடியும். இதற்கிடைஏ, லேப்டாப் கத்திரி வெயிலில் சிக்கியதைப் போல கண்டபடி வெப்பநிலையை வெளிப்படுத்தும். பேட்டரி பர்சன்டேஜ்ம் மிக வேகமாக குறைந்து விடும்.
சரி புதியதாக நிறுவி போட்ட லினக்ஸ்மிண்ட்டை பயன்படுத்தி பார்க்கலாம் என்று அந்த பக்கம் திரும்பினேன். அங்கே பார்த்தால், ஜிமெயிலுக்கு என்று தனி செயலி ஒன்றும் இல்லை. என்னுடைய பணி இமெயில் முகவரியும், அங்கு வழங்கப்பட்டு இருக்கும் ஈமெயிலில்(default email app)உள்நுழையவில்லை. உள்ளே பார்ப்பதற்கு எனக்கு தெரிந்தவரை firefox உலாவி(browser )மட்டும்தான் இருந்தது. மற்றும் லிபரி ஆபீஸ் போன்ற ஒரு சில தேவையான செயலிகள் வழங்கப்பட்டிருந்தது.
சரிப்பா முயற்சி செய்து பார்த்து விடலாம் என்று பயர் பாக்ஸ் உலாவியில் பணிகளை செய்யத் தொடங்கினேன். விண்டோஸில் அரை மணி நேரம் எடுக்கக்கூடிய வேலையை வெறும் ஐந்தே நிமிடத்தில் முடித்து விட முடிந்தது. என்னுடைய மொபைல் கருவிகளில் ரெக்கார்டு செய்ததை, யூஎஸ்பி கேபிள் மூலமாக மடிக்கணினியோடு இணைத்து நேரடியாக கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்துவிட முடிகிறது. இங்கிருந்து அங்கு என மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவுகளை சேமித்து வைக்க வேண்டிய தேவை இல்லை.
மேலும், தொடர்ந்து 5 மணி நேரம் வரை மடிக்கணினியை பயன்படுத்தும் அளவிற்கு,மிகக் குறைவான பேட்டரி அளவை மட்டுமே எடுத்துக் கொள்கிறது linux mint.
லேப்டாப் சுவிட்சை தட்டினால் போதும், ஐந்து வினாடிகளில் செயல்பட தொடங்கி விடுகிறது(low booting time). தேவை இன்றி இன்டர்நெட்டையும் செலவு செய்வதில்லை. மேலும், விண்டோஸில் வருவது போல கண்டபடி விளம்பரங்கள், அப்டேட்டுகள் போன்ற தொல்லைகளும் இந்த இடத்தில் இல்லை. உண்மையிலேயே சற்றும் எதிர்பார்க்காத ஒரு அனுபவத்தை லினக்ஸ் மின்ட் கொடுத்திருக்கிறது.
இதனால் தான் கடந்த இரண்டு மாத காலமாக, விண்டோஸ் இயங்கு தளத்திற்குள் நான் உள் நுழையவே இல்லை. ஆம் இப்பொழுது முழுக்க முழுக்க ஒரு லினக்ஸ் பயனராக மாறிக் கொண்டிருக்கிறேன். நாம் இதோடு நின்று விட்டால் போதுமா? இனிமேல் அவ்வப்போது லினக்ஸ் புராணம் என்கிற பெயரில் வாய்ப்பு கிடைக்கும் சிறிய சிறிய லினக்ஸ் வெளியீடுகளை பரிசோதித்து அல்லது இவை தொடர்பான தகவல்களை சேகரித்து ஒரு தொடராக உங்களுக்கு வழங்க இருக்கிறேன்.
லினக்ஸ் எனும் மிகப்பெரிய கடலில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. Linux இன் அடிப்படைகளை கூட நான் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. லினக்ஸ் உண்மையான ஆற்றலை நான் இன்னும் கண்டுணறவில்லை. ஆனால், வந்தோரை எல்லாம் வாரியணைத்து, வாழ்த்தி கற்றுக் கொடுக்கும் கட்டற்ற கடல் லினக்ஸ் என்பதை என்னைப் போன்ற பிற நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த கட்டுரை எழுதி இருக்கிறேன்.
இனிமேல் அவ்வப்போது லினக்ஸ் புராணம் வெளியாகும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com