கடந்த கட்டுரையில் லாஜிக் கதவுகளின் வகைகள் குறித்து விரிவாக பார்த்திருந்தோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்முதலாக கற்பிக்கப்படும் லாஜிக் கதவு எதுவென்று கேட்டால், AND கதவு தான்.
என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
பெருக்கலை அடிப்படையாகக் கொண்ட லாஜிக் கதவு தான், இந்த AND கதவு.
பூலியன் இயற்கணிதத்தின் AND வகைப்பாட்டின் அடிப்படையில், இந்த கதவு வேலை செய்கிறது
இந்த AND கதவின் விதியின்படி, இரண்டு உள்ளீடுகளும் ஒன்றாக இருக்கும்போது நமக்கு வெளியீடு கிடைக்கும்.
இதை எளிமையாக விளக்குவதற்கு இரண்டு ஸ்விட்ச்களும், ஒரு எல்இடி விளக்கும்போதும்.
உங்கள் இடத்தில் ஒரு மின்கலம் இருக்கிறது. அதை நேர் மின்முனையில் இருந்து, இரண்டு சுவிட்சைகளை தொடர்வரிசையில் பொருத்தியிருக்கிறீர்கள்!
மின்கலத்தின் எதிர்முனையானது, நேரடியாக மின்விளக்கின் மற்றொரு முனையோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு ஸ்விட்ச்சிகளும் தொடர் வரிசையில் இணைக்கப்பட்ட முனையானது, மின்விளக்கின் முதல் முறையோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
படித்துப் பார்ப்பதற்கு சற்றே குழப்பமாக இருந்தால், கீழே ஒரு விளக்கப்படம் வழங்கி இருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது, இரண்டு சுவிட்ச்களில் முதலாவது ஸ்விட்ச்சை A என்றும் இரண்டாவது சுவிட்ச்சை B என்றும் கொள்ளலாம். முதலாவது ஸ்விட்சை மட்டும்(1 0), போட்டால் விளக்கு எரியாது.
பின்பு முதலாவது ஸ்விட்சை அணைத்துவிட்டு(0 1), இரண்டாவது ஸ்விட்சை மட்டும் போட்டாலும் விளக்கு எரியாது.
இரண்டு ஸ்விட்ச்களையும் போடாவிட்டாலும்(0 0), விளக்கு எரியாது.
இரண்டு ஸ்விட்ச்சிகளும், ஒரே நேரத்தில் போடப்பட்டு இருக்கும்போது மட்டும் தான்(1 1) இந்த மின்சுற்றின் வழியாக மின்சாரம் பாய்ந்து விளக்கு எரியும்.
அவ்வளவுதான்! கேட்பதற்கே மிகவும் எளிமையாக இருக்கிறது அல்லவா?
இந்த லாஜிக், பெரும்பாலும் மிகவும் உள்ளார்ந்த மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகிறது! ஏன் உங்களுடைய மொபைல் கருவிகளில் கூட இது பயன்படுத்தப்படுகிறது! இரண்டு இடங்களில் இருந்தும் ஒரே மாதிரியான உள்ளீடு கிடைக்கும் போது மட்டுமே விளக்கு எரியும்.
உதாரணமாக, இரண்டு ஆற்றங்கரையிலும் ஒரே அளவு வெள்ளம் பாயும் போது மட்டும், அதிலிருந்து மடை திறந்து வயலுக்கு நீர் பாய்ச்ச! ஒரு சென்சாரை இதன் அடிப்படையாகக் கொண்டு செய்து விட முடியும்.
இவ்வாறு உண்மையிலேயே செய்கிறார்களா? என்று கேட்டு விடாதீர்கள்! என்னுடைய சிந்தையில் உதித்ததை, அவ்வப்போது உங்களோடு இப்படி பகிர்ந்து கொள்வேன்.
இதை டையோடுகளைக் கொண்டும் செயல் வடிவாக செய்து காட்ட முடியும்.
அதற்கான விளக்கப் படத்தையும் கீழே வழங்கி இருக்கிறேன்.

சரி இந்த AND கதவின் குறியீட்டு வரைபடம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று கேட்டால்? சில நேரங்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் நீள் வட்ட வடிவிலான மாத்திரையை பாதியாக உடைத்து வைத்ததைப் போல, பார்ப்பதற்கு காட்சி தரும்.


IC 7408 எனும் உள்ளார்ந்த மின்சுற்றை நீங்கள் வாங்கும் போது, நான்கு AND கதவுகள் அதன் உள்ளே இருக்கும்.


இதை பயன்படுத்தி, நீங்களே AND கதவின் பூலியன் இயற்கணிதத்தை மேற்கொண்டு பார்க்கலாம். அதற்கான விளக்கக் காணொளிகள் இணையத்தில் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த AND கதவிற்கான பூலியன் இயற்கணித உண்மை அட்டவணை( TRUTH TABLE)கீழே வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு தெரிந்த அடிப்படையான தகவல்களை தொகுத்து, AND கதவு குறித்து எழுதி இருக்கிறேன். இதுகுறித்து, மேலும் உங்களுக்கு தெரிந்திருந்தால் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
அந்த தகவல்களை வரும் கட்டுரைகளில் இணைத்து கொள்கிறேன்.
மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்! உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :