நாம் டைப் செய்வது கணினிக்கு எப்படி தெரிகிறது? | ASCII CODE|லாஜிக் எலக்ட்ரானிக்ஸ் சங்கமம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 43

By | March 31, 2025

எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. தட்டச்சு பொறிகளில் நாம் உள்ளீடை வழங்கும்போது, அந்த உள்ளீடை எப்படி கணினி புரிந்து கொள்ளும் என்று எனக்கு நீண்ட காலமாக நீடித்த ஒரு சந்தேகம் இருந்தது. சிறுவயதில் எல்லாம் தட்டச்சு பொறிக்குள் M என்றால் அதற்குள்ளும் M என்கிற வடிவத்தில் எழுத்து இருக்கும், அந்த M வடிவத்திலேயே மின்சாரம் சென்று அதற்குரிய வெளியீடு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

ஆனால், அதற்கான பதிலை கடந்த கடைசி வார கல்லூரி வகுப்பில் தான் நான் தெரிந்து கொண்டேன். லாஜிக் கதவுகள் தொடர்பாக நாம் பல்வேறு கட்டுரைகளை பார்த்திருக்கிறோம். அடிப்படையில், லாஜிக் கதவுகளில் உள்ளீடுகள் பூஜ்ஜியம்(0) அல்லது ஒன்று(1) என்ற அடிப்படையில் தான் வழங்கப்படும். உண்மையில், லாஜிக் கதவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கணினிகளை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பார்க்கின்ற பொழுது, கணினிக்கு தெரிந்தது பூஜ்ஜியம் அல்லது ஒன்று மட்டும்தான்.

நீங்கள் சொல்லும் பைத்தான், ஜாவா, சி உள்ளிட்ட எந்த ஒரு மொழியும் கணினிக்கு தெரியாது. தற்கால குவாண்டம் சிப்புகள் வரை அவர்கள் பயன்படுத்துவது பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்னும் நிலை குறித்து மட்டும்(qubit states)தான்.

அப்படியானால், இந்த பூஜ்ஜியம் ஒன்றை மீண்டும் மீண்டும் போட்டு வைத்து தான் உள்ளீடை வழங்க முடியும். சரி ABCD அகர வரிசைக்கு என ASCII Code(American standard code for  information interchange)எனும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களால் தட்டச்சு பொறியை கொண்டு, கணினிக்கு எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை உள்ளீடாக வழங்க முடியும்.

இதற்கான அட்டவணையை நான் வழங்குகிறேன். அந்த அட்டவணையை பாருங்கள்.அதன் பின்பு கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

என்னப்பா அட்டவணை இது! எங்கு பார்த்தாலும் எண்களும் எழுத்துக்களுமாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லையே என புலம்பினால் வருத்தம் வேண்டாம், எளிமையாக விளக்குகிறேன்.

100 என்கிற பைனரி எண் ஆனது ஆங்கில தலைப்பு எழுத்துக்களை(capital letters)குறிக்கிறது. இந்த பைனரி எண்ணில் தொடங்கும் மதிப்புகள், ஆங்கில தலைப்பு எழுத்துக்களுக்கான உள்ளீடுகள் என நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து வரும், நான்கு பைனரி எண்கள் ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் முதல் எழுத்து என்ன ? A தானே! அப்படியானால் 100-0001 இந்த உள்ளீடை வழங்கினால் உங்களுடைய கணிப்பொறியில்,A எனும் எழுத்து அச்சாகும். நீங்கள் ஏன் எனும் பொத்தானை அழுத்தும் போது இந்த குறியீடு தான் கணினிக்கு வழங்கப்படுகிறது. இந்த குறியீடை புரிந்து கொள்ளும் கணினி ஆனது A என்னும் எழுத்தை திரையில் காட்டுகிறது. இந்த வேலையை தான் உள்ளார்ந்த மின்கடத்திகள்(integrated chips) பார்த்துக் கொள்கிறது.

சரி ! கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கென்று ஒரு செயல்பாடு தருகிறேன். உங்களுடைய பெயரை மேலே இருக்கின்ற அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, எழுதி என்னுடைய மின்மடல் முகவரிக்கு(email )அனுப்புங்கள். அத்தோடு, இந்த கட்டுரை குறித்த உங்களுடைய கருத்துக்களையும் அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர்களின் பெயர்களை, அடுத்த கட்டுரையில் தவறாமல் குறிப்பிடுகிறேன். எப்படி எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

உதாரணமாக, SRI என்றால் 101-0011 101-0010 100-1001 என்று எழுத வேண்டும். அதற்காக இணைய கருவிகளை பயன்படுத்தக் கூடாது. முயற்சித்துப் பாருங்கள் எல்லாம் ஒரு பயிற்சிதான். இதை மற்றும் கற்றுக் கொண்டால் உங்கள் நண்பர்களுக்கு மத்தியில் ரகசிய குறியீட்டு மொழியில் பேசிக்கொள்ளலாம்.

நாம் முன்பே ரிமோட் கருவிகள் எப்படி வேலை செய்கிறது? என்று ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம். அங்கு அகச்சிவப்பு நிற ஒளி கதிர்களை விட்டு விட்டு  அனுப்பும் போது,அதைப் பெற்றுக் கொள்ளும் உணர்வியானது(receiver )அதற்குரிய செயல்பாடை செய்கிறது.

அதேபோல, இங்கு விட்டு விட்டு மின்னழுத்தத்தை வழங்கும்போது அதற்குரிய செயல்பாடானது கணினியில் மேற்கொள்ளப்படுகிறது. இவை அனைத்தும் நாம் கண்ணிமைக்கும் நேரப் பொழுதுக்குள் நடந்து விடுவதால், அன்றாட வாழ்வில் நம்மால் இதை உணர முடிவதில்லை. ஒருவேளை, இதே உள்ளீடை நீங்கள் வழங்க வேண்டும் என்று நினைத்தால் கூட, மிகக் குறுகிய நேரத்திற்குள் நீங்கள் வெளியிலிருந்து ஏழு சசுவிட்ச்களைக் கொண்டு வழங்கினால் உங்களாலும் கணினித்திரையில் A என்னும் எழுத்தை பார்க்க முடியும்.

அடிப்படையில் கணினிகள் இயங்குவது இப்படி தான். அடுத்த முறை லினக்ஸ் முனையத்தில் கட்டளைகளை பிறப்பிக்க கீபோர்டை தட்டும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீ போர்டு என்பதும் விட்டு விட்டு வேலை செய்யக்கூடிய  சுவிட்சுகள் தான். சரி லாஜிக்கல் அடிப்படையில் கீபோர்டுகள் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துவிட்டோம். எலக்ட்ரானிக் அடிப்படையில் கீபோர்டு கருவிகள் எப்படி வேலை செய்ய முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் உள்ளீடுளானது கீ போர்டுகளுக்குள்ளேயே அதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக PCB board மூலம் பெறப்பட்டு அதற்குள்ளே வழங்கப்பட்டிருக்கும் உள்ளார்ந்த மின்சுற்றால் பரிசீலிக்கப்பட்டு கணினிக்கு அனுப்பப்படும். கணினியானது இந்த குறியீடை பயன்படுத்தி அதற்குரிய செயல்பாடு இயக்கும்.

ஆனால், இந்த குறியீட்டு முறையானது தற்காலத்தில் பெருமளவில் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. ஆம்  தற்கால தொழில்நுட்பத்தில் நிறுவனங்களுக்கு ஏற்றால் போல் கூட இந்த குறியீடுகள் பயன்படுத்தப்படுவதை அறிய முடிகிறது. மேலும், இணையத்தில் தேடும்போது பல்வேறு விதமான குறியீடு அட்டவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேற்படி நான் வழங்கியிருக்கும் குறியீடு அட்டவணையானது என்னுடைய பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் தேடி பார்க்கும்போது வெவ்வேறு விதமான குறியீட்டு அட்டவணைகளும் உங்களுக்கு காணக் கிடைக்கிறது.

எனவே குறிப்பிட்ட இந்த குறியீடு தான் என்று நிச்சயத்து சொல்ல முடியாவிட்டாலும்,அடிப்படையில் பைனரி எண்களின் தொகுப்பின் மூலமே தட்டச்சு பொறிகள் இயங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் கீ போர்டுகளுக்குள் தாமிர முலாம் பூசப்பட்ட மிகச்சிறிய பட்டைகளும் வழங்கப்பட்டிருக்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பட்டனை அமர்த்தும்போது, அதன் ஊடே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டளைகள் கணினிக்கு கடத்தப்படுகிறது.

இதே போல, தமிழ் மொழி உள்ளிட்ட இன்ன பிற மொழிகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. அந்தந்த குறியீடுகளுக்கு ஏற்றார் போல் நாம் உள்ளீடுகளை வழங்கும்போது கணினி திரையில் தோன்றும். எனவே, A என்கிற பட்டனை தட்டுவதால் மட்டும் அல்ல அதற்குரிய குறியீடு வழங்குவதால் தான் அந்த உள்ளீடு கணினிக்கு செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால், தற்கால செய்யறிவு யுகத்தில் நாம் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது. ஆனாலும், கணினி மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று இன்றி எதுவும் இல்லை.

இந்த இடத்தில் வெறும் இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான், ஒன்று நீங்கள் ஓட வேண்டும் (1) அல்லது ஓய (0) வேண்டும்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com