தானுந்து மின்னணுவியல் (Automotive Electronics)
இரு சக்கர ஊர்திகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்களின் (tractors) உற்பத்தி எண்ணிக்கையில் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயணிகள் ஊர்திகளிலும், பேருந்து (bus), சரக்குந்து (truck/lorry) போன்ற வணிக ஊர்திகளிலும் நான்காம் இடத்தில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் இவையும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் ஊர்திகள் தயாரிப்பின் மொத்தச் செலவில் சுமார் 1 % இருந்த மின்னணு சாதனங்கள் சில ஊர்திகளில் 30 % வரை ஏறிவிட்டன. இந்த ஆண்டு (2023) வெளியிட்ட புதிய மாதிரி சீருந்துகளை (car) மின்னணு அம்சங்களை முன்னிலையில் வைத்துத்தான் விளம்பரம் செய்கிறார்கள். ஆகவே நாம் தானுந்து மின்னணுவியல் தொழில்நுட்பங்களை நன்கு அறிந்துகொள்வது வேலை வாய்ப்புக்கும், வேலையில் முன்னேற்றம் அடையவும், ஊர்திகளை வாங்கவும், பராமரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் முக்கியமாக சீருந்து மின்னணுவியலைப் பற்றிப் பார்ப்போம். இவற்றில் பல அம்சங்கள் மற்ற ஊர்திகளுக்கும் பொருந்தும்.
முதன்முதலில் பொறிக் கட்டுப்பாடு
காரில் கணினியை முதன்முதலில் பயன்படுத்தியது பொறிக் (engine) கட்டுப்பாட்டிற்குத்தான். 1968 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனம் எரிகலப்பிக்குப் (carburetor) பதிலாக மின்னணு எரிபொருள் உட்செலுத்தியை (Electronic Fuel Injection – EFI) அறிமுகம் செய்தார்கள். இது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத் தரநிலையின்படி போஷ் (Bosch) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது பொறிக் கட்டுப்பாட்டகம் (Engine Control Unit – ECU) என்று அழைக்கப்பட்டது.
காரிலுள்ள மின்னணு அமைப்புகள் மனித உடலில் நரம்பு மண்டலம் போல முக்கியமானவை
இம்மாதிரி முதன்முதலில் பொறிக் கட்டுப்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் அதைத் தொடர்ந்து காரின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் வந்துவிட்டன. ஆக மின்னணு அமைப்புகள் இப்போது எந்தவொரு ஊர்திக்கும் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகிவிட்டன. இவற்றின் முக்கியத்துவம் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை ஒத்ததாகிவிட்டது.
மின்னணுவியல் மற்றும் மென்பொருள் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது
இப்போதே ஒரு புதிய காரை வாங்கும் போது வாங்குபவர்களுக்கு மிக முக்கிய அம்சமாக காரின் மின்னணு செயல்திறன் விளங்குகிறது. வருங்காலத்தில் இது இன்னும் அதிமுக்கியத்துவம் பெறும். ஊர்திகள் இயந்திரவியல் சாதனங்களாக இருந்தது போய் மென்பொருளால் இயக்கப்படும் மின்னணு சாதனங்களாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன. இந்தப் போக்கு மூலம், மின்னணு சாதனங்கள் மட்டுமல்ல மென்பொருள் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. கார் மின்னணுவியல் வடிவமைப்பாளர்களுக்கு கணினிகளின் சிக்கலானது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. பொறியாளர்கள் புதிய இணைப்புத் தீர்வுகள், புதிய பயணிகளின் வசதி பயன்பாடுகள் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளைத் தொடர்ந்து சேர்க்க வேண்டி வருகிறது. மேம்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் இயல்புணர்வுடன் பயன்படுத்தக்கூடிய பயனர் இடைமுகம் ஆகியவற்றில் தங்கள் ஊர்தியே சிறந்தது என ஒவ்வொரு தயாரிப்பாளரும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் செய்கின்றனர்.
தானுந்துத் துறை மின்னணு சாதனங்களின் தரநிலை
மின்னணுவியல் சாதனங்களின் தீவிர வெப்பநிலை தாங்கும் சக்தி அடிப்படையில் தானுந்து துறையின் தரநிலை படைத்துறை (military) அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு அடுத்ததாக உள்ளது:
- வர்த்தகத்துறை: 0°C to 85°C
- தொழில்துறை: -40°C to 100°C
- தானுந்துத் துறை: -40°C to 125°C
- படைத்துறை: -55°C to 125°C
இந்தக் கட்டுரைத் தொடரில் மின்சார மற்றும் கலப்பின (hybrid) ஊர்திகள் போன்ற பசுமை ஊர்திகளுக்கான மேம்பட்ட மின்னணுவியல் பற்றி மிகச்சுருக்கமாக மட்டுமே பார்ப்போம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னணுக் கட்டுப்பாட்டகம்
பொறிக்குள் பெட்ரோல் காற்றுக் கலவையைத் தேவையான விகிதத்தில் அனுப்பவேண்டும். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் உகந்த காற்று எரிபொருள் கலவையை உறுதி செய்யும் சாதனம். பொறி மட்டுமல்லாமல் மற்றும் பல மின்னணுக் கட்டுப்பாட்டகங்கள். ஒரு சில்லு நுண்கணினி (single-chip microcomputer). முதலடுக்கு வழங்குநர்கள் (Tier 1 suppliers).