AWS உருவானகதை
அமேசான் இணையச்சேவைகள் தொடங்கப்பட்டு பதினைந்தாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அதுகடந்துவந்த பாதையினை சற்றே திரும்பிப்பார்க்கலாம்.
2003ம்ஆண்டு: அமேசானின் தொழில்நுட்பக்கட்டமைப்பு (Infrastructure) எப்படியிருக்கவேண்டும் என விவரித்து, கிறிஸ் பின்க்ஹ்மன், பெஞ்சமின் பிளாக் என்ற இருபொறியாளர்கள், தொலைநோக்குப்பார்வையுடன் ஒரு கட்டுரை எழுதினர். இதைத்தொடர்ந்து இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை, ஒரு சேவையாக வழங்குவதற்கும், அதாவது விற்பதற்கும், பரிந்துரைக்கப்பட்டது. இது அமேசான் மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கவே, அதனைச் செயல்படுத்தும் திட்டத்தில் அமேசான் இறங்கியது.
2004ம்ஆண்டு: அமேசானின் முதல் சேவையாக எளிய வரிசைச்சேவை (Simple Queue Service – SQS) அறிமுகப்படுத்தப்பட்டது. தனித்து இயங்கும் இருவேறு செயல்களுக்கிடையேயான (processes / background jobs) தகவல் பரிமாற்றத்திற்கு SQS பயன்படுகிறது. இதுபற்றி விரிவாக வேறொரு பதிவில் அறியலாம்.
2006ம்ஆண்டு: EC2, S3, SQS ஆகிய சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அமேசான் இணையச்சேவைகள் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. படிப்படியாக மேலும் பல சேவைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
2010ம்ஆண்டு: Amazon.com இன் உட்கட்டமைப்பு முழுவதும் அமேசான் இணையச்சேவைகளைப் பயன்படுத்துவதற்கேற்ப மாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேலும் பல பிரிவுகளில், பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ நூறு சேவைகளை, 19 பிரிவுகளின்கீழ், அமேசான் வழங்குகிறது. இன்றைய கணினியுலகின் தேவைகளையறிந்து (எ.கா: பொருள்களின் இணையம் – Internet of Things, பொறிகற்றல் – Machine Learning) அதன் ஆழ அகலங்களை அளப்பதற்கான சேவைகளை வழங்குகிறது.
இன்றளவில் அமேசானால் வழங்கப்படும் சேவைகளின் பட்டியலை கீழேயுள்ள படத்தில் காணலாம்.
ஆண்டுதோறும் re:Invent என்ற மாநாட்டையும் அமேசான் நடத்திவருகிறது. மேலும், புதிய சேவைகளைத் தொடங்குவதிலும், ஏற்கனவேயுள்ள சேவைகளை இற்றைப்படுத்துவதிலும் அமேசான் முனைப்புடன் செயல்படுகிறது. 2011ம் ஆண்டு 82ஆக இருந்த புதிய / இற்றைப்படுத்தப்பட்ட சேவைகளுக்கான அறிவிப்பு, 2017ம் ஆண்டு 1300க்கும் அதிகமாக வளர்ந்திருப்பதே, இதற்குச்சான்று.
உலகளாவிய உட்கட்டமைப்பு
அமேசானின் சேவைகளைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னதாக உலகளவில் அதன் உட்கட்டமைப்பு (Global infrastructure) எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, அதன் கூறுகள் என்னென்ன என அறிந்துகொள்ளலாம்.
அமேசானின் உட்கட்டமைப்பு நான்கு முக்கிய கூறுகளால் ஆனது. அவை:
- மண்டலம் (Availability zone)
- பிராந்தியம் (Region)
- முனையம் (Edge location)
- பிராந்திய முனையப்பதுக்ககம் (Regional edge cache)
மண்டலம்: அமேசானின் உட்கட்டமைப்பின் அடிப்படைக்கூறு மண்டலம் ஆகும். இங்கேதான் அமேசானின் தரவுநிலையங்கள் (datacenter) அமைக்கப்பட்டுள்ளன. நாம் கோரும் மெய்நிகர் வளங்களுக்கான (Virtual resources) உண்மையான இருப்பிடம் இத்தரவுநிலையங்களில் தான் உள்ளது. நமது செயலிகளும், சேவைகளும் இம்மண்டலங்களிலிருந்தே இயக்கப்படுகின்றன.
பிராந்தியம்: அருகருகே அமைந்துள்ள, குறைந்தபட்சம் இரண்டு மண்டலங்களைக்கொண்டுள்ள பகுதிக்கு பிராந்தியம் என்று பெயர். இம்மண்டலங்கள் அருகருகே அமைந்திருந்தாலும், இயற்கைப் பேரிடர்களின்போது ஒரு பிராந்தியத்தின் அனைத்து மண்டலங்களும் பாதிக்கப்படாதவாறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் மும்பை நகரில், 2016ம் ஆண்டு ஒரு பிராந்தியம் அமைக்கப்பட்டது. இப்பிராந்தியம் இருவேறு மண்டலங்களை உள்ளடக்கியது.
முனையம்: உலகின் முக்கியமான, அதிக மக்கள்தொகையுள்ள நகரங்களில் அமேசான் முனையங்கள் இயங்குகின்றன. நமது செயலிகளோ, சேவைகளோ முனையங்களிலிருந்து இயக்கப்படுவதில்லை. ஆனால், கடைநிலைப் பயனர்களுக்குத்தேவையான வலைத்தள பக்கங்களையும், படங்களையும் விரைவாக வழங்குவதில் இம்முனையங்கள் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் ஒரு பிராந்தியத்திலிருந்து இயக்கப்படுகிற நமது செயலியை, தமிழகத்திலுள்ள ஒருவர் அணுகுவதாக வைத்துக்கொள்வோம். அவரது கோரிக்கைகளும் பதில்களும் (requests and responses), புவியின் பாதிநிலப்பரப்பைக் கடந்துசென்றாகவேண்டும். இவற்றில் ஒருசில பகுதிகள் (வலைத்தளத்தின் முகப்புப்படங்கள், ஜாவாஸ்கிரிப்ட்டு, CSS கோப்புகள்) ஆகியன ஒவ்வொரு கோரிக்கைக்கும், பதிலுக்கும் மாறாமல் நிலையானதாக இருக்கும். இவையும், புவியின் ஒருபாதியைக் கடப்பதைத் தவிர்ப்பதற்காக, இவை முனையங்களிலிருந்து வழங்கப்படுகின்றன.
மண்டலங்களைவிட அதிக எண்ணிக்கையில் முனையங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் சென்னை, மும்பை, புதுதில்லி ஆகிய நகரங்களில் முனையங்கள் உள்ளன.
பிராந்திய முனையப்பதுக்ககம்: இவை பிராந்தியங்களுக்கும், முனையங்களுக்கும் இடையே அமைந்துள்ளன. நிலைமாறா வளங்களை (Static resources), முனையங்களைவிட அதிககாலத்திற்கு இவை சேமித்துவைக்கின்றன. முனையங்களிலுள்ள தரவுகள் காலாவதியானபிறகு (cache-expiry), இப்பதுக்ககங்களிலிருந்து இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் மும்பையில் ஒரு பிராந்திய முனையப்பதுக்ககம் இயங்குகிறது.
பயனரின் பார்வையிலிருந்து அமேசானின் உட்கட்டமைப்புக்கூறுகளின் அமைப்பையும் வரிசையையும் கீழ்காணும் படத்தில் காணலாம்.
கணக்கீட்டுச்சேவைகளைப் பற்றியும், அதில் முதலாவதாகத் தொடங்கப்பட்ட சேவையான EC2 பற்றியும் அடுத்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.