மின்தேக்கி(ஒரு அறிமுகம்):-
யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதிக்கு, உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தொடரின் முதல் கட்டுரை இது.
இன்றைய தலைப்பில் நாம் காண இருப்பது, மின்தேக்கி ( capacitor)!
பொதுவாக, மின்விசிறிகளுக்கு மட்டும் கப்பாசிட்டர்களை வாங்கியிருப்போம்.
உண்மையில், இவை எவ்வாறு இயங்குகின்றன? அது தொடர்பாக தான் அறிந்து கொள்ளவிருக்கிறோம்.
இயற்பியலில், “மின் ஆற்றலை தேக்கி வைக்க கூடிய பொருள் மின் தேக்கி என வரையறுக்கப்படுகிறது”.
மின் தேக்கியின் அலகு farad(பராட்) ஆகும்.
18 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட லேடன்ஸ்(LEYDENS JAR) குவளைகள் தான், மின் தேக்கியின் அடிப்படை வடிவமைப்பு ஆகும்.
இரண்டு மின் கடத்தும் பொருட்கள் நடுவில் மின் கடத்தா பொருளால் பிரித்து வைக்கப்படும் போது , அந்த கடத்திகளுக்கு இடையே மின்னாற்றல் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு சேமிக்கப்படும் மின் துகள்கள், நேர்திசை மின் துகள்கள் மற்றும் எதிர் திசை மின் துகள்களாக இருக்கும்.
இவைகளுக்கு இடையே ஒரு ஈர்ப்பு விசை இருக்கும். இதன் மூலம் அவை மின்தேக்கியை விட்டு வெளியே செல்லாமல் சேமிக்கப்படுகிறது.
பொதுவாக, நாம் கடைகளில் வாங்கும் மின் தேக்கிகளில், இரண்டு கடத்திகளும் அதற்கு நடுவே மின்கடத்தா பொருளும்(thin foil) பயன்படுத்தப்படுகிறது.
இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய, மிகச்சிறிய சார்ஜர்கள் முதல் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் வரை மின் தேக்கிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது.
ஒரு மின்சுற்றில் நிலையான மின்னழுத்தத்தை(stable voltage) பராமரிக்கவும் பயன்படுகிறது.
மின் தேக்கு திறன் C என்பது, “கடத்தியில் உள்ள மின் துகள்களுக்கும் மற்றும் கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடுக்கும் இடையேயான தகவு என வரையறுக்கப்படுகிறது”.
C = Q/V
C- மின் தேக்கு திறன்
Q- மின்துகள்களின் எண்ணிக்கை
V- மின்னழுத்த வேறுபாடு
இன்றளவில், மிகவும் சிறிய மின் தேக்கிகள் தொடங்கி சூப்பர் மின் தேக்கிகள் வரை நாம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.
ஒரு சிறந்த மின் தேக்கி என்பது, மிகவும் குறைவான நேரத்தில் மின் ஆற்றலை சேமித்து வைக்கவும்! மேலும் மிகவும் குறைவான நேரத்தில் அந்த மின் ஆற்றலை வெளியேற்றவும்! கூடியதாக இருக்கும்.
இதன் காரணமாகவே, மின்விசிறி இயங்குவதற்கு தேவையான தொடக்க மின்னழுத்த வேறுபாடு ( மின் ஆற்றல்) மின் தேக்கியிலிருந்து பெறப்படுகிறது.
தற்காலத்தில் விரல் அளவில் கூட முன் தேக்கிகள் கிடைக்கின்றன. மேலும், அவை மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கின்றன.
மின் தேக்கிகள் குறித்து பேசும் போது தான் நினைவுக்கு வந்தது! நம்முடைய மொபைல் ஃபோன்களை எடுத்துக் கொள்வோம்.
உங்களுடைய மொபைல் போன் ஒரு இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தாது, சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது! என்று வைத்துக் கொள்வோம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, நீங்கள் அந்த மொபைல் போனை ஆன் செய்யும்போது அதில் காட்டக்கூடிய நேரம்(TIME) பெரும்பாலும் சரியான நேரமாகவே இருக்கும்.
மேலும், நான் சிறுவயதில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தானாகவே மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்வதற்கான தானியங்கி முறையை(auto on/off)ஆன் செய்து வைத்திருந்தேன்.
எனக்கு அப்போதே ஒரு சந்தேகம் இருந்தது! எப்படி சரியாக ஏழு மணி ஆகும்போது மீண்டும் மின்னாற்றலை பெற்று மொபைல் போன் ஆன் ஆகிறது என்று!
ஆனால், அதற்குப் பின்பும் மின் தேக்கி தான் உள்ளது.
ஆம் உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மிகச்சிறிய மின் தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மொபைல் போன்கள் மட்டுமல்ல கணினிகள்,சார்ஜர்கள் இன்னும் எண்ணில் அடங்காத மின்னணுவியல் சார்ந்த கருவிகளில் மிகச் சிறிய மின்தேக்கிகளின் பங்கு அளப்பரியது.
சிலருக்கு மின்கலத்திற்கும் மின் தேக்கிக்கும் இடையே ஆன வேறுபாடு குறித்து, பல சந்தேகங்கள் இருக்கும் அது குறித்து அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக விவாதிக்கலாம்.
இந்தத் தொடரின் முதல் கட்டுரை இது.
எனவே, இந்த கட்டுரையில் ஏதேனும் பிழைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் தயங்காது என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவிக்கவும்! உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தெ.தி. இந்து கல்லூரி, நாகர்கோவில்),
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
மின் மடல் முகவரி: