லினக்ஸ் மின்ட் இயங்குதளத்தை பயன்படுத்த தொடங்கி இருந்தாலும் கூட, அதன் கட்டளை நிறைவேற்றியை(command line)பெரும்பாலும் நான் தொட்டு பார்த்ததில்லை. மெல்ல மெல்ல கற்றுக்கள்ளலாம் என்று சில மாதங்களை தள்ளி போட்டு விட்டேன். இனிமேலும் தள்ளிப் போட்டால் சரியாய் வராது என்று அப்படி இப்படி என பத்து கமெண்ட்களை(கட்டளை) கற்றுக் கொண்டு விட்டேன்.
இவற்றின் மூலம்,மிகவும் அடிப்படையான விஷயங்களை செய்ய முடியும். பெரிய அளவிலான காரியங்களை செய்யக்கூடிய கமெண்ட்களை வரும் நாட்களில் உங்களிடத்தில் கூறுகிறேன். சரி உள்ள அடிப்படை கட்டளைகளை ஒவ்வொன்றாக பார்த்துவிடலாம். நம் பொறுப்பாசிரியரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், கல்யாண சமையல் செய்வதற்கு முன்பு டீ போட கற்றுக்கொள்ள வேண்டியது அடிப்படையானது. எனவே இன்றைக்கு டீ போட கற்றுக்கொள்ளலாம்.
பட்டியல்
- sudo apt update
- sudo apt upgrade
- sudo apt search
- sudo apt list –upgradable
- sudo apt install
- sudo apt remove
- sudo apt pulger
- sudo apt clean
- sudo apt autoremove
- Sudo apt list –installed
1)sudo apt update
நிறுவப்பட்டிருக்கும் இயங்குதளத்தில் பெரியதாக மாற்றங்கள் வந்திருக்கிறதா? மற்றும் புதியதாக நிறுவ வேண்டிய கோப்புகள் குறித்து இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அடிக்கடி இந்த கட்டளையை பயன்படுத்துவது சிறப்பு. இதன் மூலம் உங்களுடைய இயங்குதளம் காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமலும் தடுக்க முடியும். ஆனால் இந்தக் கட்டளையின் மூலம் புதிய பதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள மட்டும்தான் முடியும். அதை நிறுவ முடியாது.
2)sudo apt upgrade
முந்தைய பகுதியில் கண்டறிந்த புதிய பதிப்புகளை நிறுவுவதற்காக பயன்படுத்தக்கூடிய கட்டளை தான் இது. இந்த கட்டளையை பயன்படுத்துவதன் மூலம், வந்திருக்கும் புதிய பதிப்புகளை உங்களுடைய கணினியில் நிறுவ முடியும். இது இயங்கு தளத்திற்கு மட்டுமல்ல! அதில் நிறுப்பப்பட்டிருக்கும் செயலிகளை கூட இதை பயன்படுத்தி முழுவதுமாக மேம்படுத்த பதிப்புகளை நிறுவ முடியும். எனவே,முதலில் கூறியிருக்கும் இந்த இரண்டு கட்டளைகளையும் அறிந்து கொள்வது கட்டாயமாகும்.
3)sudo apt list –upgradable
இந்த கட்டளையின் மூலம் எந்தெந்த பதிப்புகளுக்கெல்லாம் புதிய பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன என்று முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும். ஒட்டுமொத்த பட்டியலில் இதில் காட்டப்பட்டு விடும் என்பதால் ஒவ்வொன்றாக தேடி கண்டுபிடித்து புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே, புதிய பதிப்புகளை நிறுவுவதற்கு முன்பு இந்த கட்டளையை ஒரு முறை இயக்கி பார்த்து விடுவது நல்லது. ஏனெனில் பயன்படுத்தாத மற்றும் தேவை இல்லாத செயலிகள் அல்லது கோப்புகளை மீண்டும் மீண்டும் புதுப்பிப்பதில் பயன் இருக்காது. எனவே முதலிலேயே பட்டியலை பார்த்து விடுவது சிறப்பு.
4)Sudo apt search
புதியதாக ஒரு செயலியை நிறுவ வேண்டும்!. வழக்கமான இயங்குதளங்களில் தேடுதல் குறியை பயன்படுத்தி தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால் கட்டளை அமைப்பில் எப்படி தேடுவது? வெறும் செயலியின் பெயரை மட்டும் போட்டா தேட முடியும்? அப்படியே போட்டு தேடினாலும் சரியான பெயரை எப்படி கண்டுபிடிப்பது. ஒவ்வொரு தடவையும் செயலியை தயாரித்து இருக்கும் குழுவில் இணையதளத்தை சென்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சிக்கலில் நானும் சிக்கி தவித்திருக்கிறேன். இந்த கட்டளையை பயன்படுத்தி நீங்கள் தேட விரும்பும் செயலி அல்லது கோப்பை தேடிக் கொள்ளலாம்.
உதாரணமாக, sudo apt search vlc எனும் கட்டளையை வழங்கினால், vlc media player தொடர்புடைய கோப்புகளின் பெயர்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
5)sudo apt install
சரி செயலியை தேடி கண்டுபிடித்து விட்டேன். கண்டுபிடிக்க செயலியின் பெயரை எப்படி நிறுவுவது என்று கேட்டால், இந்தக் கட்டளையை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக செயலி அல்லது கோப்பை நிறுவ முடியும். முந்தைய கட்டளையின் மூலம் அறிந்து கொண்ட கோப்பு பெயரை இந்தக் கட்டளையைத் தொடர்ந்து இங்கே பிரதி செய்ய வேண்டும்.
அதன் மூலம் விரும்பிய செயலி அல்லது கோப்பை எளிமையாக நிறுவ முடியும்.
உதாரணமாக, sudo apt install vlc எனும் கட்டளையை பிறப்பிப்பது மூலம் vlc media player செயலியை நிறுவ முடியும்.
6)sudo apt remove
தேவையற்ற செயலியை நீக்குவதற்கு இந்த கட்டளையை பயன்படுத்தலாம். இந்த கட்டளையை தொடர்ந்து செயலி அல்லது கோப்பு பெயரை வழங்குவதன் மூலம் தேவையற்ற அந்த செயலியை எளிமையாக நீக்கிவிடலாம்.
உதாரணமாக,sudo apt remove vlc எனும் கட்டளையை பிறப்பிப்பது மூலம் vlc media player செயலியை நீக்க முடியும்.
7)sudo apt pulger
முன்னே பார்த்த கட்டளையை பயன்படுத்தி, என்னதான் செயலியை நீங்கள் தரவு நீக்கம் செய்திருந்தாலும் கூட, அதனோடு தொடர்புடைய கோப்புகள் அனைத்தும் தொடர்ந்து கணினியில் சேமிக்கப்பட்டு தான் இருக்கும். பின்னாளில் அதிகப்படியான சேவைகளின் கோப்புகள் சேரும்போது கணினியில் செயல்திறன் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கட்டளையை தொடர்ந்து செயலியின் பெயரை வழங்கும்போது, அந்த செயலியோடு தொடர்புடைய அனைத்து தரவுகளும் முற்றும் முழுதாக நீக்கம் செய்யப்படும்.
உதாரணமாக, sudo apt pulger vlc எனும் கட்டளையை பயன்படுத்தும் போது, vlc தொடர்புடைய அனைத்து கோப்புகளும் உங்களுடைய கணினியில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
ஆனால், ஒரு செயலி முற்று முழுதாக தேவையில்லை என்றால் மட்டுமே இதை செய்யுங்கள். விளையாட்டாக நீக்கிப் பார்க்கிறேன் என்கிற பெயரில் முக்கியமான தகவல்களை இழந்து தவிக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
8)sudo apt list –installed
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி உள்ளது. அதுபோல நம்முடைய கணினியில் எந்த செயலிகள் நிறுவப்பட்டு இருக்கிறது என்று தெரிந்தால் தானே அவற்றை நீக்க முடியும். அதுவே தெரியாமல் நான் முன்பு குறிப்பிட்ட கட்டளைகளை எப்படி இயக்க முடியும்? அதற்கு தான் இந்த கட்டளையை பயன்படுத்த வேண்டும்
இந்த கட்டளையின் மூலம் உங்கள் கணினியின் நிறுவப்பட்டு இருக்கும் அனைத்து செயலிகள் மற்றும் கோப்புகளின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கப்பட்டுள்ளது. அங்கே உள்ள பெயர்களை பார்த்து தேர்ந்தெடுத்து நீக்கிக் கொள்ளலாம்.
9)sudo apt clean
ஒவ்வொரு செயலிலும் cache தரவுகள் சேமித்து வைக்கப்படும். தற்காலிக தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் இந்த தரவுகள் பின் நாட்களில் பெரும் தலைவலியாக மாறுவதும் வாடிக்கைதான். குறிப்பாக மொபைல் கருவிகளில் இந்த தரவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ஒரு போன் கால் செய்வதற்கு ஒன்பது நாள் ஆகும். இதே நிலை உங்கள் லினக்ஸ் கணினிக்கும் வந்து விடக்கூடாது அல்லவா! அதற்காக இந்த கட்டளையை பயன்படுத்துங்கள் இதை பயன்படுத்தினால், உங்கள் கணினியில் இருக்கும் அனைத்து cache தரவுகளும் நீக்கம் செய்யப்படும்.
sudo apt autoremove
என்னால் ஒவ்வொரு தடவையும் தேவையற்ற தரவுகளை தேடி தேடி நீக்கிக் கொண்டிருக்க முடியாது. தன்னாலேயே நீக்கி விடுவதற்கு ஏதாவது கட்டளை இருக்கிறதா? என்று கேட்டால் மேலே வழங்கப்பட்டு இருக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பது மூலம் உங்கள் கணினியில் தேவை என்று இருக்கும் கோப்புகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படும். உதாரணமாக, vlc ஐ நீங்கள் முன்பே நீக்கி விட்டீர்கள்! ஆனால், அதனோடு தொடர்புடைய தரவுகள் கணினியில் இருக்கும். இந்த கட்டளையை இயக்குவதன் மூலம் தானாகவே அது போன்று இருக்கும் கோப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.
அவ்வளவுதான் எளிமையாக பத்து லினக்ஸ் mint கட்டளைகளை கற்றுக் கொண்டு விட்டீர்கள். கண்டிப்பாக இவற்றை பரிசோதித்துப் பாருங்கள். தொடர்ந்து இதுபோன்ற கட்டளைகள் மற்றும் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் லினக்ஸ் புராணம் எனும் பகுதியில் வாரம் தோறும் வந்து சேரும்.
மேலும், எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை விரைவில் வெளியாகும். மேலும் அந்த தொடருக்கு பின்பு, c மொழி தொடர்பாக தொடரும் புத்துயிர் பெற்று வரும் என்பதை கனிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com