எலக்ட்ரானிக் செயல்பாடுகளில் உற்ற துணைவன் ” Bread Board” | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 37

By | February 14, 2025

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வைத்து ஏதாவது செயல்பாடுகள் செய்து பார்க்க ஆசைப்படுவீர்கள்.

குறிப்பாக, உள்ளார்ந்த மின்சுற்றுகளை(IC)ப் பயன்படுத்தி எளிமையான மற்றும் அருமையான பல செயல்பாடுகளை செய்து பார்க்க முடியும். உதாரணமாக,.இருட்டில் தானாகவே எரியும் சிறிய மின் விளக்கு, வெப்பம் பட்டவுடன் வேலை செய்யும் அலாரம் போன்ற இணையத்தில் கிடைக்க கூடிய பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் மாதிரிகளை செய்து பார்க்கலாம்.

எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

ஆனால், இதை அனைத்தையும் செய்து பார்க்கும் போது ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை ஒருமுறை இவற்றை இணைத்து விட்டால் மீண்டும் பிரிக்க முடியாது. சால்டரிங் அயர்ன்(Soldering Iron)கொண்டு ஒரு போர்டின் மீது வைத்து அப்படியே சால்டரிங் செய்துவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதன் மூலம், ஒருமுறை பயன்படுத்திய எலக்ட்ரானிக்ஸ் மின்சுற்றுகளை மறு பயன்பாடு செய்ய முடியாது.

இது ஏதோ இன்றைக்கு முளைத்த பிரச்சனை அல்ல! எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி தொடங்கிய 1950 காலகட்டங்களிலே, மாதிரிகளை செய்து பார்ப்பதற்கு மாணவர்கள் மிகவும் திணறினார்கள். ஒருமுறை தவறாக சால்டரிங் வைத்து விட்டால், மீண்டும் அந்த எலக்ட்ரானிக் பொருளை பயன்படுத்த முடியாது.

அப்பொழுதுதான் 1970 களின் தொடக்கத்தில் திரு ரொனால்டோ J போர்ச்சுக்கல் அவர்கள், பிரட் போர்டு எனும் தீர்வோடு வந்தார். இதன் முக்கிய பயன்பாடு என்னவென்றால், சால்டரிங் செய்யாமலேயே உங்களால் இணைப்புகளை வழங்க முடியும். மேலும் உங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். ஒரே எலக்ட்ரானிக் பொருளை வைத்து மீண்டும் மீண்டும் பல்வேறு விதமான மாதிரிகளை செய்து பார்ப்பதற்கு இந்த பிரட் போர்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Arduino,rasberry போன்ற கட்டற்ற எலக்ட்ரானிக் மின்சுற்றுகளை கூட, உங்களால் இந்த பிரட் போர்டில் இணைத்து பயன்படுத்த முடியும். மேலும், ஒருமுறை மட்டும் செய்து காட்டக்கூடிய மாதிரிகளை தயாரிக்க இது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் .

மாதிரிகளை செய்து செய்து பார்க்கும் போது ஏற்படும் அதிகப்படியான எலக்ட்ரானிக் குப்பைகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்கு இந்த பிரட் போர்டுகளின் பங்கு மிக மிக முக்கியமானது.

சரி இந்த பிரட் தோடுகள் எப்படி தான் வேலை செய்கின்றன? என்று பார்த்து விடுவோமா!

ஒரு பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட செவ்வக வடிவ போர்ட் அமைப்புதான். இதில் பொதுவாக, 30 இணைப்புகளைக் கொண்ட பிரட் போர்டு மிகவும் பிரபலமானது. நடுப்புறம் மேலிருந்து கீழாக இணைக்கப்பட்டு இருக்கும், இணைப்புகளில் உங்களுக்கு ஐந்து ஓட்டைகள் இருக்கும். ஒவ்வொரு ஓட்டைக்கு உள்புறமாக உலோகம் கொண்டு இணைக்கப்பட்ட பட்டைகள், பொருத்தப்பட்டிருக்கும். நான் ஒரு சாதனத்தை இணைக்கும் போது அது நன்றாக இந்த பட்டைகளுக்குள் இறுகப் பிடித்துக் கொள்ளும். முதல் ஓட்டையில் எலக்ட்ரானிக்ஸ் சாதனத்தை இணைத்துவிட்டு அடுத்து உள்ள நான்கு ஓட்டைகளில் எந்த ஓட்டையில் இருந்து வேண்டுமானாலும் உள்ளீடை செலுத்தவோ அல்லது வெளியீடை பெறவும் முடியும். இது போலவே, வரிசையாக இருக்கும் 30 இணைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இத்தகைய இணைப்புகள் முனைய இணைப்புகள்(terminal strips)என அறியப்படுகிறது. பிரட் போர்டின் மேல் மற்றும் கீழ் புறங்களில், இடமிருந்து வலமாக ஓட்டைகள் வழங்கப்பட்டிருக்கும்.இந்த ஓட்டைகளில், மேலே 30 கீழே 30 என மொத்தம் 60 ஓட்டங்கள் இருக்கும்.

இதில் 15-15 ஆக நான்கு தொகுதிகளாக ஓட்டைகள் பிரித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த தொகுதிக்கு உட்பட்ட ஓட்டையில் இணைப்பை கொடுத்தால் மீதி உள்ள 14 ஓட்டைகளிலிருந்தும் வெளியீடை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது ஒன்றாவது ஓட்டையில் மின் இணைப்பை கொடுத்தால் 13ஆவது ஓட்டைகளிலிருந்து கூட மின் இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும். சிக்கலான எலக்ட்ரானிக் சுற்றுகளுக்கு இது மிகவும் பயனுள்ளது.

மேலும், பொதுவாக தரை இணைப்பு மற்றும் மின் இணைப்பு வழங்குவதற்கு இந்த மேற்புற ஓட்டைகள் பயன்படுத்தப்படும். இவை Bus strips என அழைக்கப்படுகிறது.

நீங்கள் வாங்கும் விலை மற்றும் தயாரிப்பை பொறுத்து பிரட் ஃபோர்ட்களின் தரம் மற்றும் வடிவங்கள் மாறுபடும். மிகச்சிறிய பிரட் போர்டுகள் முதல் மிகப்பெரிய பிரட் போர்டுகள் வரை உங்களுக்கு சந்தையில் காணக் கிடைக்கும்.

பிரட் போர்டு என பெயர் வருவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், இதில் இருக்கும் ஓட்டைகள் ரொட்டி தூண்டில் இருக்கும் ஓட்டைகளை போலவே இருக்கும். எப்படி நீங்கள் ரொட்டித் தூண்டில் குச்சிகளை குத்தி வைக்க முடியுமோ? அதுபோல இந்த பிரட் போர்டிலும் இணைப்புகளை வழங்க முடியும்.

இதற்கான பிரத்தியேகமான இணைப்பு வடங்கள் (Jumping wires)கூட உங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் கிடைக்கும். பிற்காலத்தில் 50 ரூபாய் முதல் உங்களால் பிரட் கூடுகளை வாங்க முடியும். பள்ளி மாணவர்களுக்கான சிறிய செயல்பாடுகளில் கூட இது போன்ற பெற்றோர்களை பயன்படுத்தலாம். மிகவும் சிக்கலான கணினி இணைப்புகளை கூட இரண்டு மூன்று தரமான பிரட் போர்டுகளை இணைத்து செய்துவிட முடியும்.

ஆனால் 240 வோல்ட் போன்ற நேரடி மின்சாரத்தை வழங்குவதற்கு பிரட் போர்டுகள் உகந்ததல்ல, ஏனெனில் ஒரு பெரும்பாலான நேரங்களில் அதிக வெப்பத்தை தாங்காத பிளாஸ்டிக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. எனவே எளிதில் உருகிவிடும் அல்லது தீப்பிடித்து விடும் அபாயம் இருக்கிறது.

அதேநேரம், குறைந்த மின்னழுத்தம் அல்லது மின்கலன்களைக் கொண்டு செய்யப்படும் செயல்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும். இத்தகைய பிரட் போர்டுகளை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்தும் உங்களுக்கு இணையத்தில் ஆயிரக்கணக்கான காணொளிகள் கூட காண கிடைக்கும்.

இவ்வளவு நாளாக உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கண்டுபிடிப்பாளரை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இதுதான். எலக்ட்ரானிக் துறை மீது ஆர்வம் கொண்டிருக்கும் நீங்கள், நிச்சயமாக ஒரு பிரட் போர்டை வாங்கி, சிறுசிறு உள்ளார்ந்த சுற்றுகளை கொண்டு எளிமையான செயல்பாடுகளை செய்து பார்க்கலாம்.

மேலும், நான் லாஜிக் கட்டுரைகளில் எழுதி வரும் லாஜிக் கதவுகளுக்கான உள்ளார்ந்த சுற்றுக்களை வாங்கி, அவற்றுக்கான லாஜிக் செயல்பாடுகளை செய்து பார்க்கலாம். ஒருவேளை இவ்வாறு செய்து பார்ப்பது என்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வரக்கூடிய ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகிறேன்.

இது போன்ற லாஜிக் கதவுகளை செய்து பார்க்கும் போது அது குறித்து எளிமையான புரிதல் கிடைப்பதோடு, எலக்ட்ரானிக்ஸ் துறையில் மென்மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும் உங்களுக்குள் ஏற்படும். எலக்ட்ரானிக்ஸ் துறையில் கற்றுக்கொள்ள துடிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளாக நான் பிரட் போர்டை குறிப்பிடுவேன். இப்படி ஒரு எழுத்தாளருக்கு நோட்டுப் புத்தகமும் பேனாவும் முக்கியமோ! அதுபோல ஒரு எலக்ட்ரானிக்ஸ் ஆர்வலருக்கு பிரட் போர்ட் முக்கியம்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் : srikaleeswarar@myyahoo.com

இணையம்: ssktamil.wordpress.com