ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும்.
ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர் இதே நிரலாக்கத்தை பயன்படுத்தி தான் வேலைகளை தொடர வேண்டி இருக்கும்.
மேலும் என்னதான் இதை நீங்கள் நிரலாக்கத்திற்குள் எழுதினாலும், நிரலாக்கத்திற்கும், குறிப்புகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. நீங்கள் எத்தனை வரிகளுக்கு குறிப்பு எழுதினாலும், நிரலாக்கத்தோடு சேர்ந்து அவை இயக்கப்படுவதில்லை, வெளியீட்டிலும் காண்பிக்கப்படுவதில்லை. மாறாக,மூல பிரதியில்(source code)மட்டும்தான் குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். எனவே இதனால் எவ்வித சிக்கல்களும் கிடையாது. மேலும்,இந்த குறிப்புகள் பயனர்களுக்காக வழங்கப்படவில்லை. மாறாக, சக நிரலாக்க கலைஞர்களுக்காகவே வழங்கப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குப் புரிந்தது என்பதற்காக அதே வகையிலான நிரலாக்கம் அவருக்கும் புரிய வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய நுணுக்கங்கள் அவருக்கு புரியாது போகும் பட்சத்தில், நிறுவனம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும். ஏன்? நாம் கூட குறுகிய காலத்திலேயே எதற்காக இந்த வரியை எழுதினோம் என மறந்துவிடக்கூடும். பிறகு நாமே அதை தேடி கண்டுபிடித்து திருத்துவதற்கு ஒரு நாள் முழுவதும் விழிப்புதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தான், நிரலாக்க மொழிகளில் குறிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. முதன்மையான மற்றும் பழமையான நிரலாக்க முறையாக அறியப்படும் c மொழியில் நீங்கள் இரண்டு வகையில் குறிப்புகளை வழங்க முடியும்.
C மொழியின் 1999 ஆம் ஆண்டு பதிப்பு வரை, குறிப்பிட்ட ஒரு வகையில் மட்டுமே உங்களால் குறிப்புகளை பதிவு செய்ய முடிந்தது. தற்போது உங்களுக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.
ஒரு வரி குறிப்புகள் (single line comments)
ஒரு வரி குறிப்புகள் என்பது, ஒரு நிரல் ஆக்கத்தின் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வரி விளக்கம் தேவைப்படும் போது அதை வழங்குவதற்கு இது போதுமானது. உதாரணமாக, புதியதாக படிக்கின்ற மாணவர்களுக்கு இது போன்ற ஒருவரி குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட எந்த வரியில் இருந்து இந்த இதற்கான வெளியீடு கிடைக்கிறது என்று கூட ஒரு வரியில் எழுதி முடித்து விடலாம். // எனும் குறிதான்(double slace)ஒரு வரி குறிப்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக,
#include<stdio.h>
using namespace std;
int main()
{
// This is my name
printf(“my name is sri”);
return 0;
}
இந்த இடத்தில் ஒரு வரியில், இந்த நிரல் ஆக்கமானது என்னுடைய பெயரை அச்சிடுகிறது என்று கூறுவதற்காக குறிப்புகளை நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.
பல வரி குறிப்புகள் (multiline comments)
ஒரு வரி குறிப்புகளை எழுதும்போது தொடக்கம் மட்டும் போதும் அதை முடித்ததாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பல வரி குறிப்புகளை தொடங்கி அதுபோலவே முடிக்கவும் வேண்டும். /* எனத் தொடங்கும் பல வரி குறிப்புகள் */ என முடிய வேண்டும்.
#include<stdio.h>
using namespace std;
int main()
{
/* This is a multi line comment written by srikaleeswarar at kaniyam c article */
printf(“my name is sri”);
return 0;
}
இருந்த போதிலும் கூட, குறிப்புகள் எழுதும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறாக குறிப்புகள் எழுதி விட்டால் நீங்கள் எழுதி இருக்கும் ஒட்டுமொத்த நிரலாக்கமும் பிழை என ஆகிவிடும். மேலும், பல வரி குறிப்புகளை எழுதும்போது அதை முறையாக நிறைவு செய்தல் வேண்டும். மேலும், ஒவ்வொரு நிரலாக்க கலைஞரும் குறிப்புகள் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பிறருக்கு உதவுவதோடு சிக்கலான தருணங்களில் நிரல் ஆக்கத்தை பிரித்து வேலை பார்ப்பதற்கும் உதவும்.
மீண்டும் ஒரு சி கட்டுரையில் சந்திப்போம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com