எளிய தமிழில் Electric Vehicles 17. வணிக மின்னேற்றிகள்

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் பயன்படுத்தும் 3 kW வீட்டு மின்னேற்றி முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது என்று பார்த்தோம். ஆனால் நாம் வெளியூர் செல்லும்போது வழியில் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. ஆகவே மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேறு என்ன வழிகள் உள்ளன என்று பார்ப்போம்.

காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட்

CCS2-socket

காரில் CCS2 மின்னேற்ற சாக்கெட்

பெரும்பாலான கார்கள் CCS2 (Combined Charging System 2) என்ற தரநிலைப்படி மின்னேற்ற சாக்கெட் வைத்து வருகின்றன. ஏனெனில் நாம் செல்லுமிடங்களில் மையங்களிலுள்ள மின்னேற்றச் செருகி இவற்றில் பொருந்தவேண்டும்.

வணிக AC மின்னேற்றம்

CCS2-AC-Charging-Connector-Plug

வணிக AC மின்னேற்றச் செருகி

வணிக AC மின்னேற்றிகள் 7 முதல் 20 kW வரை இருக்கக்கூடும். திறன் அதிகமாக ஆக மின்னேற்றம் துரிதமாக நடக்கும். எனினும் AC ஐ DC ஆக மாற்றுவது உள் மின்னேற்றியிலுள்ள நேர்மாறாக்கிதான் (inverter). ஆகவே உள் மின்னேற்றியின் ஆற்றல் அளவிற்கு மேல் துரிதமாக வேலை நடக்காது. உள் மின்னேற்றியின் ஆற்றல் அளவைப் பொருத்து இது சுமார் 4 மணி நேரத்தில் மின்னேற்றம் செய்யக் கூடும்.

வணிக DC அதிவேக மின்னேற்றம்

CCS2-DC-Fast-Charging-Connector-Plug

வணிக DC அதிவேக மின்னேற்றச் செருகி

மேற்கண்ட வணிக AC மின்னேற்றியை விடத் துரிதமாக மின்னேற்றம் செய்ய வேண்டுமென்றால் வணிக DC அதிவேக மின்னேற்றியால்தான் முடியும். ஏனெனில் இது DC என்பதால் உள் மின்னேற்றியிலுள்ள நேர்மாறாக்கியைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மின்கலத்தில் மின்னேற்றம் செய்ய முடியும். பொதுவாக இது சுமார் ஒரு மணி நேரத்தில் மின்னேற்றம் செய்ய முடியும். சந்தையில் 15 முதல் 100 க்கு மேல் kW உள்ள DC அதிவேக மின்னேற்றிகள் வந்துள்ளன. எனினும் kW ஏற ஏற மின்கலம் அதிகமாக சூடாகும். தவிரவும் மின்கலக்கூறுகளின் பாதுகாப்பை உத்தேசித்து ஊர்தியிலுள்ள மின்கலம் மேலாண்மையகம் (Battery Management System) மின்னேற்றும் வேகத்தை மட்டுப் படுத்தக் கூடும்.

மின்னேற்றக் கட்டங்கள் (charging stages) 

லித்தியம் அயனி மின்கலங்கள் மூன்று கட்டங்களாக மின்னேற்றம் செய்யப்படுகின்றன. இதன் முதல் கட்டம் நிலையான மின்னோட்டம். அதிகபட்ச மின்னழுத்த வரம்பை அடையும் வரை, சீராக அதிகரிக்கும் மின்னழுத்தத்தம் கொடுக்கப்படும். இரண்டாவது சமநிலைப் படுத்தல். மின்கலக் கூறுகள்  சமநிலையற்றதாக இருந்தால் மட்டுமே இது தேவை. கடைசியாக நிலையான மின்னழுத்தம். மின்னோட்டம் படிப்படியாகக் குறைந்து கடைசியில் முற்றிலுமாக நின்று விடும்.

நன்றி

  1. Tata Nexon EV Review
  2. 200A CCS 2 EV PLUG OR CONNECTOR GUN FOR DC FAST CHARGING –  JT Mobility
  3. CCS2-AC Connector Plug

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மீளாக்க நிறுத்தல்

வழக்கமாக வண்டியின் நிறுத்த மிதியை (brake pedal) அழுத்தினால் என்ன நடக்கிறது. மீளாக்க நிறுத்தல் (Regenerative braking). மீளாக்க நிறுத்தல் செயல்முறையின் சில முக்கிய அம்சங்கள். மீளாக்க நிறுத்தல் எவ்வாறு மின்கலத்தில் மின்னேற்றுகிறது? மீளாக்க நிறுத்தல் பற்றி நினைவில் கொள்ளவேண்டிய சில முக்கியக் குறிப்புகள். ஆற்றலை வீணாக்காமலிருக்க ஓட்டுநருக்குப் பரிந்துரைகள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: