தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம் ? தங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா ? அப்படி இல்லையென்றாலும் இக்காலகட்டத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள நினைப்பவரும், ஏற்கனவே புத்தகம் வாசிக்கும் ஆர்வமுள்ளவரும் தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் பங்களிக்கலாம். எவ்வாறு ? எப்படி ? வாருங்கள் பார்ப்போம்…
விக்கிமீடியா (wikimedia) திட்டங்களில் ஒன்றான விக்கிபீடியா (wikipedia), தமிழ் விக்கிபீடியா திட்டங்களை பலரும் அறிந்திருப்போம். இந்த விக்கிபீடியா திட்டங்களில் யாவரும் கட்டுரைகள் எழுதலாம், திருத்தலாம், புகைப்படங்களைச் சேர்க்கலாம் என்பது வெகுசிலருக்கேத் தெரியும். மிகச் சொற்பமானவரே அதனை செய்தும் வருகின்றனர்.
சமீபத்தில் விக்கிமீடியா மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து இந்திய மொழிகளுக்கிடையேயான வேங்கை திட்டம் 2.0 என்ற கட்டுரை போட்டியை தொடர்ந்து இரண்டாவது ஆண்டு நடத்தினர். கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) முதலிடத்தையும், தமிழ் இரண்டாமிடத்தையும் பிடித்தன. இந்தாண்டு 3 மாதங்கள் நடைபெற்ற போட்டியில் தமிழில் 62 விக்கிபீடியர்கள் மொத்தம் 2959 கட்டுரைகளை எழுதி முதலிடத்தைப் பெற்றுள்ளோம். பஞ்சாபி 1768 கட்டுரைகளுடன் இரண்டாமிடத்தையும், இந்தி 417 கட்டுரைகளுடன் 6ம் இடத்தையும் பிடித்தன.
விக்கிமூலம்
கட்டற்ற இலவச இணைய நூலகமான விக்கிமூலமும் விக்கிமீடியா திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் தொகுப்பாகும். அதாவது நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் (Nationalised / Public Domain) இருக்கும் நூல்களின் தொகுப்பை இத்தளத்தில் காணலாம். ஆங்கில விக்கிமூலம் (en.wikisource.org/) 2003ல் தொடங்கப்பட்டது.
நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் இருக்கும் நூல்கள், அந்தந்த மொழிகளுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, ஒளி எழுத்துணரி (OCR) மென்பொருள் மூலம் எழுத்துக்கள் உணரப்பட்டு, தொகுத்தலுக்கு (Editing) ஏற்ப மாற்றப்படுகின்றன. இவ்வாறு மென்பொருள் மூலம் மாற்றப்பட்ட புத்தகத்தில் ஒரு சில பிழைகள் இருக்கலாம். பின்னர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தன்னார்வலர்களால் மெய்ப்பு (Proof reading) மற்றும் சரிபார்க்கப்படுகிறது (Validate). ஒரு நூலின் மொத்தப் பக்கங்களும் மெய்ப்பு/சரிபார்க்கப்பட்ட பின்பு அப்புத்தகம் பல்வேறு கருவிகளுக்கு ஏற்றவாறு (கைபேசி/கணினி/டேப்லட்/கிண்டில்) பல்வேறு வடிவங்களில் (epub/mobi/pdf/odt) மின்னூலாக வெளியிடப்படுகின்றன. இவ்வாறு வெளியிடப்படும் மின்னூல்கள் அனைத்தும் பொதுக்கள உரிமத்தின் கீழ் வெளியிடப்படுவதால் இம்மின்னூல்களை யாவரும் கட்டற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் வெளியிடப்படும் மின்னூல்களில் பல்வேறு திரை அளவுகளுக்கேற்ப எழுத்துருவை மட்டும் பெரிதாக்கி பார்க்கும் வசதி, ஏதேனும் வார்த்தையை எளிதாக தேடி கண்டு பிடிக்கும் வசதி என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
பக்கத்தின் நிலைமை
பச்சை – மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்தது
மஞ்சள் – மெய்ப்பும் மட்டும் முடிந்தது
சிவப்பு – இன்னும் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆங்கில விக்கிமூலத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 2164773. இதில் மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 1133935.
தமிழ் விக்கிமூலம்
2007 ல் தமிழ் விக்கிமூலத்திற்கான இணையதளம்(ta.wikisource.org/) துவங்கப்பட்டது. இதுவரையில் 2000+ நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டு மெய்ப்பு பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் தமிழ் விக்கிமூலத்தில் எவ்வளவு தமிழ் நூல்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டு மின்னூல்களாக வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரியுமா ? ஒரு 500 முதல் 1000 புத்தகங்கள் இருக்குமா ?
நேற்றைய தேதிவரையில் வெறும் 200 புத்தகங்கள் மட்டுமே மெய்ப்பு பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்தும்50-100க்கும் குறைவான தன்னார்வலர்களால் மட்டுமே கடந்த 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதே வேகத்தில் சென்றால் 2000 புத்தகங்களையும் மின்னூலாக வெளியிட இன்னும் ஒரு 10முதல் 20 வருடங்கள் ஆகலாம்.
தமிழ் விக்கிமூலத்தில் எவ்வாறு பங்களிப்பது ?
தமிழ் விக்கிமூலத்தில் (ta.wikisource.org/) புதிய பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளவும். அதன் முதற் பக்கத்தில், ‘மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்’ என்ற பகுதியில் ‘மெய்ப்புப் பார்க்கப்படாத மின்னூல்கள்’ என்பதை சொடுக்கவும். இதில் ஏதேனும் தங்களுக்கு விருப்பமான ஒரு நூலை தேர்ந்தெடுத்து மெய்ப்புப் பணியைத் தொடரலாம்.
கீழ்க்கண்ட காணொளிகள் தங்களுக்கு உதவும்.
விக்கிமூலம் அறிமுகம் – www.youtube.com/watch?v=VPDoe5oz128
புதிய கணக்கு / மெய்ப்பு பார்த்தல் – www.youtube.com/watch?v=XDOiaaZ71Tg
மெய்ப்பு உதவி :
www.youtube.com/watch?v=DE2D1iTnpJI
www.youtube.com/watch?v=Wb6DGu_jzto
www.youtube.com/watch?v=a_FWm3aXKgM
www.youtube.com/watch?v=D4T9OgWG2fM
மேலும் தொகுத்தல் உதவிக்கு ta.wikisource.org/s/3pctஎன்ற இணைப்பில் காணலாம்.
இது தவிர வேறு ஏதேனும் உதவிக்கு ta.wikisource.org/s/3ytஎன்ற இணைப்பில் தங்களது கேள்விகளை கேட்கலாம்.
விக்கிமூலம் சில புள்ளிவிவரங்கள்
உலகளவில் மொத்தப் பக்கங்கள் அடிப்படையில் தமிழ் விக்கிமூலம் 6 வது இடத்திலும், மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களின் அடிப்படையில் 10வது இடத்திலும் உள்ளது (tools.wmflabs.org/phetools/statistics.php). இதுவே இந்திய மொழிகளில், மொத்தப் பக்கங்களில் தமிழ் இரண்டாம் இடத்திலிலும் (பெங்காலி முதலிடம்), மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களின் அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளது (wikisource.org/wiki/Wikisource:Indic_Wikisource_Stats).
விக்கிமூலத்தில் தன்னார்வலர்களால் மெய்ப்புப் பார்க்கப்பட்டு வெளியிடப்படும் ஒவ்வொரு மின்னூல்களிலும் அந்நூல் மெய்ப்புப்பார்த்த தன்னார்வலர்களின் பெயர்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் பங்களிப்பதன் மூலம் தங்களுக்கு வி ருப்பமான (சிறுகதை/நாவல்/கவிதை/வரலாறு/அறிவியல்) நூல்களை வாசிப்பதோடு அந்நூல்கள் புதுவடிவம் பெற்று மின்னூலாக வெளியிடவும் உதவும்.
– லெனின் குருசாமி – guruleninn@gmail.com