எளிய தமிழில் CAD/CAM/CAE 11. பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்

பாகங்களை இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல்

நம்முடைய தயாரிப்பில் உள்ள பாகங்களை எல்லாம் 2D மென்பொருளில் உருவரைவு தயார் செய்துவிட்டோம். இந்த பாகங்களை எல்லாம் தயாரித்து துணைத் தொகுதிகளாகவும் முழுத் தொகுதியாகவும்  இணைக்கும் பொழுது சில பிரச்சினைகள் தெரியவரலாம். எடுத்துக்காட்டாக சில திருகாணிகள் முடுக்கியால் அணுக இயலாத இடத்தில் இருக்கலாம். 

நம்மால் 3D மாதிரியில் பாகங்களை இணைத்துப் பார்க்க முடிந்தால் இம்மாதிரி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டு பிடித்து ஓரளவாவது தவிர்க்கலாம் அல்லவா? இந்த வசதி சால்வ்ஸ்பேஸ் மென்பொருளில் சேர்ந்தேயுள்ளது. ஃப்ரீகேட் மென்பொருளில் A2+ என்ற வெளிப் பணிமேடை மூலம் கிடைக்கிறது.

சால்வ்ஸ்பேஸ் தொகுத்தல் பயிற்சி

சால்வ்ஸ்பேஸ் மென்பொருளில் 6 காடித்துவாரங்கள் உள்ள ஒரு பெட்டியை எவ்வாறு தொகுப்பது என்ற பயிற்சியை இந்த இணைப்பில் காணலாம். சால்வ்ஸ்பேஸ் மென்பொருளில் எந்த ஒரு பாகத்தையும் மற்ற எந்த ஒரு பாகத்தின் வடிவமைப்பிலும் நாம் இறக்குமதி செய்து கட்டுப்பாடுகள் அமைக்க முடியும். ஆகவே சில பாகங்களை சேர்த்து துணைத் தொகுப்புகளாக ஆக்க முடியும். அடுத்து இத்துணைத் தொகுப்புகளை முழுத் தொகுப்பாகவும் ஆக்கலாம்.

தொகுத்துப் பார்க்க ஃப்ரீகேட் A2+ பணிமேடை

ஃப்ரீகேட் மென்பொருளில் உடன் வரும் தொகுப்புப் பணிமேடைகள் எதுவும் கிடையாது. வெளிப் பணிமேடைகளில் A2+ பணிமேடை சிக்கலான தொகுப்புக் கட்டுப்பாடுகளையும் கையாளுகிறது. இதை தேர்வுப் பட்டியலில் Tools → Addon Manager மூலம் நிறுவலாம்.

முதலில் ஒரு பாகத்தை நிலையானதாக (fixed) வைத்துக் கொண்டு அடுத்த பாகத்தை இறக்குமதி செய்து கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டும். இம்மாதிரி தொகுப்பு செய்த மாதிரியையும் மற்ற மாதிரிகள் போன்ற கோப்பு வடிவத்திலேயே சேமித்து வைக்க முடியும்.

பொதுமூட்டு தொகுப்பு

பொதுமூட்டு தொகுப்பு

இந்தக் காணொளியில் பாகங்களை எவ்வாறு இறக்குமதி செய்வது, எவ்வாறு தொகுப்பது மற்றும் எம்மாதிரி கட்டுப்பாடுகள் அமைப்பது என்பதை விவரமாகக் காணலாம்.

பெரிய தொகுப்புகளைத் துணைத் தொகுப்புகளாகப் பிரித்தல் 

A2+ பணிமேடையில் சிக்கலைக் குறைக்க பெரிய தொகுப்புகளைத் துணைத் தொகுப்புகளாகப் பிரித்தல் நல்லது. எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு தொகுப்பில் மின்னியக்கி (motor) சேர்க்கவேண்டும் என்றால் அதைத் துணைத் தொகுப்பாக முதலில் தொகுத்துப் பின்னர் எந்திரத்துடன் தொகுக்கலாம். ஆனால் துணைத் தொகுப்புக்குள்ளிருக்கும் பாகங்களைத் தனித்தனியாக இயக்கிப் பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக மேற்கண்ட மின்னியக்கியில் சுழலியைச் (rotor) சுழற்றிப் பார்க்க வேண்டுமென்றால் அதைத் தனியான துணைத் தொகுப்பாக சேர்க்க வேண்டும்.

இணைப்புக்கான கட்டுப்பாடுகள் அமைத்தல்

இணைப்புக்கு கீழ்க்கண்ட மாதிரி கட்டுப்பாடுகளும் (Constraints) தீர்விகளும் (Solvers) உள்ளன:

  • பூட்டு
  • தளம் நேர்ப்படுத்தல் (Plane Alignment)
  • தளம் ஒன்றுபடுதல் (Plane Coincident)
  • அச்சு நேர்ப்படுத்தல் (Axial Alignment)
  • ஒரே திசையமைவு (Same Orientation)
  • பல இணை (Multi Parallel)
  • கோணம் மற்றும் செங்குத்து (Angle and Perpendicular)
  • புள்ளிகள் ஒன்றுபடுதல் (Points Coincident)
  • தளத்தில் புள்ளிகள்
  • வட்டத்தின் மேல் புள்ளிகள்
  • புள்ளிகளுக்கிடையே தூரம்
  • புள்ளிகளிலிருந்து தளத்துக்குத் தூரம்
  • புள்ளிகளிலிருந்து கோட்டுக்குத் தூரம்
  • சமச்சீர் (Symmetric)

ஃப்ரீகேட் கையாளுதல் (Manipulator) பணிமேடை

நீங்கள் பாகங்களை தொகுத்துப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் அவற்றைத் தேவையான இடத்திற்கு நகர்த்தித் தேவையான திசையமைவில் வைக்க வேண்டும். இம்மாதிரி வேலைக்கு பாகங்களை நகர்த்தவும், சுழற்றவும், நேரமைவு செய்யவும், அளவு பார்க்கவும்  ஃப்ரீகேட் கையாளுதல்  பணிமேடை மிகவும் தோதானதாக இருக்கிறது. இவ்வேலைகளை எளிதான வரைகலை பயனர் இடைமுகப்பு மூலம் செய்யலாம். இதன் தொடக்க நிலைப் பயிற்சி காணொளி இங்கே. சிக்கலான பாகங்களை எவ்வாறு நேரமைப்பது என்று காட்டும் காணொளி இங்கே.

நன்றி தெரிவிப்புகள்

  1. FreeCAD Tutorial – Universal Joint Assembly (PartDesign & Assembly A2+ Workbench) 

இத்தொடரில் அடுத்த கட்டுரை: இயக்கம் பாவனையாக்கல் (Motion simulation)

ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை. தொகுப்பை விரித்துக் காட்டும் தோற்றம் (Exploded view). ஃப்ரீகேட் A2+ பணிமேடையில் நிரல் எழுதி அசைவூட்டம் செய்தல். நகர்வு கட்ட வரைபடம் (Motion chart or curves) அல்லது எந்திர அமைப்பு இயக்க வடிவியல் (Mechanism kinematics).

ashokramach@gmail.com