எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட திறந்தவெளி எண்ணிம அறிவுசார் துறையாகும்.
ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம் ஜனவரி 21ஆம் தேதி முற்பகல் 8 முதல் நண்பகல் 12 வரை (கிழக்கு நேர வலயம்) எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கை நடத்துகிறது. இந்த இணையவழிக் கருத்தரங்கம் எங்கள் ஆய்வுகள் மற்றும் சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், தமிழ் மொழி சேகரிப்புகள் மற்றும் எண்ணிமத் தமிழியல் ஆய்வின் பரிமாணங்கள் பற்றி உரையாடும் நோக்குடனும் நடைபெறுகிறது.இந்த இணையவழிக் கருத்தரங்கத்திற்கான பங்கேற்பு இலவசம். இக்கருத்தரங்கம் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் சூம் தளத்தின் வழியாக நடைபெறும்.
நிகழ்வுகளின் அட்டவணை
குறிப்பு: எல்லா நேரங்களும் கிழக்கு நேர வலயத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன. நிகழ்வு விளக்கங்கள் கீழே உள்ளன.
நேரம் | நிகழ்வுகள் |
8-8.30 | எண்ணிமத் தமிழியல் குழுவின் வரவேற்புரை மற்றும் நிகழ்வின் தொழில்நுட்பங்கள் குறித்த குறிப்புகள் (பவானி ராமன் & கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்) |
8.30-10.15 | வளர்ந்து வரும் பொது எண்ணிம வளங்கள்
எண்ணிமத் தமிழியல் மையத்தை (Digital Tamil Studies Hub) அறிமுகப்படுத்துதல் (நற்கீரன் இலட்சுமிகாந்தன் & கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்)இலங்கை முஸ்லிம் குறுங்கால ஆவணங்கள் சேகரம் (எம்.ஐ. முகமது சாகிர்) தமிழ் சோவியத் சேகரம் (சீனிவாசன் டி & லெனின் குருசாமி) தெற்காசிய கனடிய எண்ணி ஆவணக் காப்பகத்தின் தமிழ் சேகரிப்புகள் (தமிழினி யோதிலிங்கம்) |
10.15- 10.30 | இடைவேளை |
10.30- 11.15 | எண்ணிமத் தமிழ் ஆய்வுகளின் ஆராய்ச்சி எல்லைகள்
எங்களின் ஆய்வாளர்கள் தங்களுடைய தற்போதைய ஆய்வுப் பணியை முன்வைத்துக் கருத்துரைகளை வழங்குவார்கள், தங்களின் கேள்விகளை முன்வைத்து, துறையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கலாம். • சித்தார்த் ஸ்ரீதர், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம் • மார்கு பலம்போர்த், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம் • சண்முகப்பிரியா, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம் |
11.15- 12.00 | பயிலரங்கம்:கியூ.ஜிஸ் (QGIS) மென்பொருள் உதவியுடன் வரலாற்றியல்/எதிர் விவரணையாக்கம் (Mapping) செய்தல். |
திட்டமிட்ட கருத்துரைகள்
எண்ணிமத் தமிழியல் மையத்தை (Digital Tamil Studies Hub) அறிமுகப்படுத்துதல்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ வளாக நூலக எண்ணிமத் தமிழியல் மையம், அறிஞர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமிழ்மொழி சேகரிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான இருமொழி இடைமுகத்தை வழங்குகிறது. சேகரிப்புகள், என்னென்ன இருக்கின்றன, எவ்வாறு இவற்றுக்குப் பங்களிப்பது என்பது பற்றியது இக்கருத்துரை.
இலங்கை முஸ்லிம் குறுங்கால ஆவணங்கள் சேகரம்
கிழக்கு இலங்கையின் முஸ்லிம் சமூகங்களில் உள்ள மஹல்லாக்களில் விநியோகிக்கப்பட்ட குறுங்கால ஆவணங்களைப் பாதுகாத்து, இணைய வெளியில் அணுகக்கூடிய தரவுகளாக இலங்கை குறுங்கால ஆவணங்கள் சேகரம்உள்ளது. இத்தொகுப்பில் கொண்டாட்டம்/அனுதாபக் கவிதைகள், பொது அறிவிப்புகள், செய்திகள், கடிதங்கள், விளம்பரங்கள், அரசியல்/தேர்தல் அறிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சுய விவரக் கடிதங்கள் ஆகியன அடங்கும். இந்தத் தொகுப்புகளின் உள்ளடக்கம் பன்முகத்தன்மை கொண்டது. மேலும், இவை வரலாறு, சமூகவியல், இலக்கியம் மற்றும் அரசியல் உட்பட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது, இதனால் ஒப்பீட்டளவில் விரிவான, பிரதிநிதித்துவ, கூட்டு சமூக நினைவுகள் மற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் வரலாறுகளை இத்தொகுப்புப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, தமிழ் முஸ்லீம்களின் வளமான மற்றும் நீண்ட எழுத்து மரபுகள், அவர்களின் பல்வேறு பிராந்தியப் பேச்சுவழக்குகள், எழுத்துமுறை பயன்பாடு மற்றும் நடைமுறைகளின் மொழியியல் தொடர்ச்சிகளுக்கு இந்த ஆவணங்கள் புது வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும்.
தமிழ் சோவியத் சேகரம்
தமிழ் சோவியத் சேகரம் என்பது சோவியத் பதிப்பகங்களான ராதுகா பதிப்பகம் மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் போன்ற பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட படைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வெளியீடுகள் பெரும்பாலும் தமிழில் பல வகைமைகளின் முன்னோடிகளாக இருந்தன, இதில் குழந்தைகளுக்கான சித்திரக் (விளக்கப்படக்) கதைகள், அறிவியல் எழுத்துக்கள் மற்றும் ரஷ்ய-தமிழ் மொழிபெயர்ப்புகள் ஆகியன அடங்கும். ஒரு காலத்தில் இப்பதிப்புகள் அனைத்துமே பரவலாகக் கிடைக்கப் பெற்று வாசிக்கப்பட்டன, இப்போது அப்பதிப்புகளைக் கண்டுபிடிப்பதே கடினம். இந்த நிலையில் எண்ணிம முறையில் மேற்குறிப்பிட்ட படைப்புகளைப் பாதுகாத்து அவற்றை,
திறந்த முறையில் அணுகும் சூழலை அனைவருக்கும் உருவாக்குவதைத் தமிழ் சோவியத் தொகுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தொகுப்புப் பொதுமக்களுக்கும், அறிவியல் தமிழ் மற்றும் சோவியத்/ரஷ்ய தமிழ் ஆய்வுகளில் ஆர்வமுள்ள அறிஞர்கள்/கல்வியாளர்கள் அனைவருக்கும் பயன்படும்.
தெற்காசிய கனடிய ஆவணகத்தின் (SACDA) தமிழ் சேகரிப்புகள்
தெற்காசிய கனடிய எண்ணிமக் காப்பகம் (SACDA), ஃப்ரேசர்வாலி பல்கலைக்கழகத்தில் (University of the Fraser Valley) உள்ள தெற்காசிய ஆய்வு நிறுவனத்தின் முன் முயற்சியாகும். இது கனடாவில் உள்ள தெற்காசிய புலம்பெயர்ந்தோரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஒரு கனடிய எண்ணிமக் காப்பகமாகும். தெற்காசிய கனடிய புலம்பெயர் மக்களால் உருவாக்கப்பட்ட அல்லது அம்மக்களுடன் தொடர்புடைய பாரம்பரியப் பொருட்களை எண்ணிமமயமாக்க இக்காப்பகம் விழைகிறது. அத்துடன் அவற்றை விவரிக்க மற்றும் திறந்த அணுக்கத்தில் வழங்கக்கூடிய வகையில் நினைவக நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து தெற்காசிய கனடிய எண்ணிமக் காப்பகம் (SACDA) உருவாக்கப் பட்டுள்ளது. இக்காப்பகம், விரிவான அளவில் சமூகங்களை ஈடுபடச் செய்து அவற்றின், சமூக மற்றும் காண்பிய வரலாறுகள், வாய்மொழிப் பண்பாடுகள் மற்றும் உள்ளார்ந்த அறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், தெற்காசிய கனடிய ஆவணகம் (SACDA) தற்போதுள்ள அறிவுசார் உள்கட்டமைப்புகளை மாற்றி அமைக்கவும் அறிவின் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை வளர்க்கவும் முயல்கிறது. இந்த கருத்துரையானது எண்ணிமத் தமிழாய்வுச் சமூகத்தின் வளர்ச்சியில் உள்ள இலக்குகள் மற்றும் சேகரிப்புகளை அறிமுகப்படுத்தும்.
பயிலரங்கம்: கியூ.ஜிஸ் (QGIS) மென்பொருள் உதவியுடன் வரலாற்றியல்/எதிர் விவரணையாக்கம் (Mapping) செய்தல்.
வரலாற்றியல் மற்றும் எதிர்- விவரணையாக்கம் (Mapping) என்பது எண்ணிமத் தமிழ் ஆய்வுகளுக்குப் பயன்மிக்க கருவிகள் ஆகும். கியூ.ஜிஸ் (QGIS) மென்பொருள் குறித்த நேர்முகப் பயிற்சியை இந்தப் பயிலரங்கம் வழங்கும். புவியியலை மையமாகக் கொண்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். கியூ.ஜிஸ் மென்பொருளில் புவியியல் தரவுகளை பதிவிறக்கம் செய்தல், திருத்துதல், பதிவேற்றம் செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை இந்தப் பயிலரங்கம் பயிற்றுவிக்கும். அனைத்துப் பின்னணியில் இருந்தும் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இப் பயிலரங்கில் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். மேலும், புவியியல் தகவலமைப்பு (GIS) குறித்த எந்த முன்னறிவும் பங்கேற்பாளர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பயிலரங்கத்தின்பயிற்றுமொழி தமிழ் ஆகும்.
கருத்துரையாளர் குறித்தக் குறிப்புகள்
பவானி ராமன்
பவானி ராமன் ரொறன்ரோ பல்கலைக்கழகம், வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் ஆவார். தொடக்ககாலக் காலனித்துவ இந்தியாவில் அதிகாரக் கட்டமைப்பு, கல்வி, தமிழ் உரைநடைமுறை மற்றும் எழுத்தர் பண்பாடு ஆகியன இவரது ஆய்வுத்தளங்கள்.
கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்
கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட் ஒரு நூலகர் மற்றும் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாக(UTSC) எண்ணிம அறிவுசார்பிரிவின் தலைவர் ஆவார். இப்பிரிவு எண்ணிம மனிதவியல், எண்ணிம தரவு சேகரிப்புகள், அதை பாதுகாத்தல் மற்றும் அறிவுசார் தகவல் தொடர்புகள் ஆகிய தளங்களில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாக எண்ணிமப் புலத்திற்க்கான ஆதரவை வழங்கி வருகிறது.
லெனின் குருசாமி
லெனின் குருசாமி காரைக்குடியில் சன் கிரியேஷன்ஸ் தொழில்நுட்ப மையத்தை நடத்தி வருகிறார். கணியம் அறக்கட்டளை மற்றும் ப்ரீதமிழ்புக்ஸ்.காம் (FreeTamilbooks.com) ஆகிய அமைப்புகளின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் கணினித் திட்டங்களிலிலும் கட்டற்ற மென்பொருட்கள் (open source software) திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறார். “தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் தொடர்பான மெய்நிகர் வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுசார் தகவல்கள் அனைத்தையும் அனைவரும் இலவசமாகவும், தங்குதடைகள் இன்றி எளிமையாகவும் அணுகக் கூடிய சூழலை” உருவாக்கும் நோக்கில் கணியம் செயல்படுகிறது. லெனின் தென் தமிழகத்தில் GNU/லினக்ஸ் மிஷன் மற்றும் ஏனைய கணினித் திட்டங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார், மேலும் தொடர்ந்து கணினி மென்பொருள் தொடர்பானப் பயிலரங்கங்களை நடத்தி வருகிறார்.
மார்கு பலம்போர்த்
மார்கு பலம்போர்த் சமூக அறிவியல் மற்றும் மனிதவியல் ஆய்வு மையத்தின்(SSHRC) உதவியுடன் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகத்தில் வரலாற்று மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில் முதுமுனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கிறார். இவரது ஆய்வானது தெற்காசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கிடையிலான வரலாற்றுச் சந்திப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகனை பகுப்பாய்கிறது. மார்கு தற்போது ’இலங்கைத் தமிழ் வரலாற்றில் பஞ்சமர்: அடிமைத்தனம், சாதி மற்றும் மானுடவியல்’ என்ற புத்தகத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இத்திட்டம் தெற்காசியாவில் நீடித்த, அடிமைத்தன வாழ்க்கையின் ஒரு பகுதியான ஒடுக்கப்பட்ட-சாதிகளின் விவசாய வரலாற்றையும், அவற்றின் எழுச்சியையும் மறுபரிசீலனை செய்கிறது. மேலும் இவர், தமிழ் அடிமை மரபுகள் குறித்த ஆய்வுப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தேடல் வசதியுடனான இலங்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அடிமைப் பதிவேட்டினை எண்ணிம மனிதவியலின் பதிப்பாக உருவாக்கும் முயற்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். பிரிட்டிஷ் நூலகம் மற்றும் ஆர்காடியாவின் நிதியுதவியுடன் அழிந்து வரும் ஆவணக்காப்பகங்கள் திட்ட மானியத்தின் உதவியால் இலங்கையின் சாதி, தொழிலாளர் மற்றும் விவசாய வரலாற்றின் ஆதாரங்களைச் சேகரித்து எண்ணிமமயமாக்கும் திட்டத்தின் முதன்மை ஆய்வாளராகவும் உள்ளார்.
எம்.ஐ. முகமது சாகிர்
எம்.ஐ. முகமது சாகிர் இலங்கையின் சம்மாந்துறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் மருத்துவ ஆய்வக அலுவலர் ஆவார். இலங்கை முஸ்லிம் எபிமெராத் திட்டத்தின் ஆவணமாக்கலுக்கு அவர் இணைத் தலைவராக உள்ளார். அவர் நூலகம் அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினராகப் பணியாற்றுவதுடன், முஸ்லிம் ஆவணக் காப்பகத் திட்டம் சார்ந்த தரவு சேகரிப்புகள் மற்றும் மட்டக்களப்பு அலுவலக நிர்வாகத்திற்கான வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை செய்துவருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்கிலாப்(Inqilaab) ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். இவரது ஆய்வுத் தளங்களாக உள்ளூர் வரலாறுகள், நாட்டுப்புறவியல், இடம்பெயர் வரலாறு, மற்றும் கவிதைகள் உள்ளன. இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வக அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
சாகிர் ‘சம்மாந்துறை: பெயர் வரலாறு’ என்றத் தலைப்பில் 2012 இல் சம்மாந்துறை என்ற தனது கிராமத்தின் இடம்பெயரைப் பற்றிய வரலாற்றாய்வுப் புத்தகத்தை எழுதியுள்ளார். தற்பொழுது ’சம்மாந்துறை வழக்குச் சொல் அகராதி’ மற்றும் ’சம்மாந்துறை நூல் விவரப் பட்டியல்’ என்றத் தலைப்புகளில் இரண்டு புத்தகங்களை எழுதி வருகிறார். மேலும், ’சம்மாந்துறையின் பாரம்பரிய, சமகால மருத்துவம் மற்றும் மருத்துவர்கள்’, ’சம்மாந்துறையின் கலை மற்றும் இலக்கிய வரலாறு’ மற்றும் ’சம்மாந்துறையின் ஆரம்பகால வரலாறு’ என்ற மூன்று அத்தியாயங்களை 2019-இல் ரமீஸ் அப்துல்லாவால் தொகுக்கப்பட்ட ‘சம்மாந்துறை: வரலாறு மற்றும் மரபு’ என்ற நூலில் இவர் எழுதியுள்ளார்.
நற்கீரன் இலட்சுமிகாந்தன்
நற்கீரன் இலட்சுமிகாந்தன் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ வளாக நூலகத்தின் எண்ணிமப் புலமைப் பிரிவில் மென்பொருள் உருவாக்குனாராக உள்ளார். அவர் கட்டற்ற பன்மொழி எண்ணிம களஞ்சியங்கள், எண்ணிமப் புலமை மென்பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பினை உருவாக்குதல், மேம்படுத்தல், பராமரித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நற்கீரன் சமூக ஆவணப்படுத்தல் மற்றும் நூலகம், கணியம் மற்றும் விக்கிமீடியா போன்ற இலவச மற்றும் இணையப் பொதுவளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான காப்பகத் திட்டங்களுக்கு பங்களிப்பை வழங்கி வருகிறார். நூலகங்கள் மற்றும் காப்பகங்களில் விடுபட்ட குரல்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும், அவர்களுக்கும் சேவை செய்வதற்குமான எண்ணிமக் கருவிகள், வளங்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அவர் பங்களித்தத் திட்டங்களில், இலங்கைத் தமிழ்ப் பெண்கள் ஆவணகம், மலையக ஆவணகம், தமிழ் ஒலி நூற்கள், பல்லூடக தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் ஆகின அடங்கும். ஆரம்பகாலத் தமிழ்ப் படைப்புகள், ஓலைச் சுவடிகளை அட்டவணப்படுத்துதல் மற்றும் எண்ணிமமயமாக்கல் மூலம் அவற்றை இணைய பொதுவளங்களாக உருவாக்குதலும் அடங்கும்.
தமிழினி யோதிலிங்கம்
தமிழினி யோதிலிங்கம், ஃப்ரேசர் பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் தெற்காசிய கனடிய எண்ணிம ஆவணக் காப்பகத்திற்கான எண்ணிம வளங்கள் காப்பாளர் ஆவார். தமிழினியின் ஆராய்ச்சி மற்றும் காப்பகக் காப்பாளர் பணி, கலை மற்றும் மானுடவியல் துறைகளின் இணைவுப் புள்ளியில் செயல்படுகிறது, இவரது ஆய்வுத் தளம், பாலினம், நினைவகம், பண்பாட்டு பாரம்பரியம், காட்சி வரலாறுகள் மற்றும் அறிவுசார் நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. தமிழினி, நூலகம் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ்ஏஞ்சல்ஸ்(UCLA) நூலகத்தின் அழிந்து வரும் ஆவணக் காப்பகத் திட்டத்தின் மூலம் மலையகத் தமிழ் ஆவணக்காப்பக ஆவணங்களின் கணக்கெடுப்பு மற்றும் எண்ணிமப் பாதுகாப்புத் திட்டத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன், இவர் இலங்கை முஸ்லிம் எபிமெரா ஆவணப்படுத்தலுக்கானத் திட்டத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் அழிந்து வரும் ஆவணக் காப்பகங்கள் திட்டத்தின்வழி, பிரிட்டிஷ் நூலகம் உதவியுடன் இலங்கைத் தமிழ் ஓலைச்சுவடிகளை அட்டவணைப் படுத்துதல் மற்றும் எண்ணிமமயமாக்கல், அத்துடன் விக்கிமீடியா அறக்கட்டளையின்வழி கிழக்கு, வடக்கு மற்றும் மலையக இலங்கையின் பாரம்பரிய வர்த்தகங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றினைப் பல்லூடகங்கங்களில் ஆவணப்படுத்துதல் பணிகளில் பணியாற்றியுள்ளார்.
சண்முகப்ரியா
எண்ணிம மனிதவியல், எண்ணிம சுற்றுச்சூழல் மனிதவியல் மற்றும் எண்ணிம இலக்கியம் ஆகிய துறைகளின் ஒரு பல்துறை சார்ந்த கவனத்தை சண்முகப்ரியாவின் ஆய்வு மற்றும் கற்பித்தல் தளங்கள் கொண்டுள்ளன. குறிப்பாக இவரது ஆய்வு ஆர்வம் மனிதவியல் ஆய்வுக்கான எண்ணிமக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதில் உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்தூரில் முனைவர் பட்ட ஆய்வை முடித்த சண்முகப்ரியா, 2019இல் லான்சாஸ்டர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஒரு வருகைதரு ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் லண்டன்(UK), லான்சாஸ்டர் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மனிதவியல் ஆய்வு மன்றத்தில்(AHRC) முதுமுனைவர் ஆய்விணையராகப் பணியாற்றினார். தற்போது இவர் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராக ஆய்வுப் பணியாற்றி வருகிறார். சண்முகப்ரியா, DSH, DHQ மற்றும் EBR போன்ற தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் இவர், DHARTI அமைப்பின் இடைக்காலச் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்பரோ வளாகத்தில் எண்ணிமத் தமிழ் ஆய்வுகளில் பிரெண்டாபெக் காப்பகத்தின் தரவுகள் குறித்த தரவுகளைக்(metadata) இவர் கவனித்து வருகிறார்.
ஸ்ரீனிவாசன் டி
ஸ்ரீனிவாசன் டி, சாமா தொழில்நுட்பம் எனும் தனியார் நிறுவனத்தில் மூத்த கிளவுட் ஆர்கிடெக்ட் ஆவார். அவர் கணியம் அறக்கட்டளை மற்றும் ப்ரீதமிழ்புக்ஸ்.காம் (FreeTamilbooks.com) ஆகியவற்றின் நிறுவனர்களில் ஒருவர். இணையப் பொதுவளங்கள்(open source) மற்றும் தமிழ் கணினித் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாளராக இருந்து வருகிறார். “தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் தொடர்பான மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுசார் தகவல்கள் அனைத்தையும் அனைவரும் இலவசமாகவும், தங்குதடைகள் இன்றி எளிமையாகவும் அணுகக்கூடிய சூழலை” உருவாக்கும் நோக்கில் கணியம் செயல்படுகிறது. அவர் லினக்ஸ், விக்கிமீடியா, ஒபென்ஸ்டிர்ட்மேப், மொஸில்லா திட்டங்களிலும் பங்களித்து வருகிறார். இவரது பங்களிப்புகள் தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா), தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றம் மற்றும் விகடன் வெளியீடுகள் உட்பட பல அமைப்புகளின் விருதுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
சித்தார்த் ஸ்ரீதர்
சித்தார்த் ஸ்ரீதர் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஐந்தாவது வருட முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார். இவரின் முனைவர் பட்ட ஆய்வு பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர்க்காலச் சூழலில், ரப்பர் தொழில் மற்றும் அதன் தொடர்புடைய வணிகங்கள், தொழிலாளர் மற்றும் அதிகார வலைப்பின்னல்களின் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியம் எவ்வாறு தனது நிலையை வங்காள விரிகுடாபகுதியில் மறுஉருவாக்கம் செய்தது என்பதை ஆராய்கிறது. சித்தார்த் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணிம மனிதவியல் குறித்தத் திறனாய்வு முன்முயற்சியில்(Critical Digital Humanities Initiative) பட்டதாரி ஆய்வாளராக உள்ளார்.
சித்தார்த்தின் ஆய்வேடு, 1930களில் வங்காள விரிகுடாவின் தொழிலாளர் சந்தையின் நிர்வாகத்தினை, ஒழுங்குபடுத்தப்பட்ட தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தியின் பின்னணியில், காலனித்துவ அதிகார வரம்புகளுக்குள் தொழிலாளர் இடம்பெயர்வைக் கட்டுப் படுத்துவதற்கான அழுத்தங்களை கருத்தில் கொண்டு பகுத்து ஆராய்கிறது. எண்ணிம மனிதவியல் பட்டதாரி ஆய்வாளராக, சித்தார்த், வங்காள விரிகுடா தொழிலாளர் சந்தையில் கொள்கை மாற்றங்கள் மற்றும் இராஜதந்திர தலையீடுகள், இடம்பெயர்வு நகர்வுகளின் வரைபடம் மற்றும் புள்ளிவிவரக் காட்சிகளை உருவாக்கும் குறிக்கோளுடன், இவர் பிரிட்டிஷ் இந்தியா, சிலோன் மற்றும் மலாயாவில் காலனித்துவ அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரத் தரவுகளை எண்ணிமமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.