நுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த 1996 முதல் 2010 வரை பிறந்தவர்களை இணைய அல்லது எண்ணிம தலைமுறை என்றே சொல்லலாம். இந்த இளைய தலைமுறையின் குழந்தைப் பருவம் அவர்களுடைய பெற்றோர்களுடையதை விட மிகவும் வித்தியாசமானது.
தொழில்நுட்பம் இளம் இந்தியாவை முற்றிலும் மாற்றிவிட்டது. முன்னால் ஆடம்பரமாகக் கருதப்பட்ட சாதனங்கள் வெகு விரைவில், கல்வியிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும், இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. டாடா நிறுவனத்தின் இணைய தலைமுறைக் கருத்தாய்வில் 15 நகரங்களில் சுமார் 12,000 மாணவர்கள் கேள்விகளுக்கு விடைகொடுத்தார்கள். திறன்பேசி (75%) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சாதனம். அடுத்து மடிக்கணினிகள் (67%) மிகவும் பின்னால் இல்லை. கைக்கணினிகள், மின்னூல் படிப்பிகள், விளையாட்டு முனையங்கள், திறன் கைக்கடிகாரங்கள் மற்றும் மெய்நிகர் உண்மை தலைக்கவசம் ஆகியவை பெருநகர்களிலும் மற்ற நகரங்களிலும் அந்த வரிசையில் பின்பற்றப்படுகின்றன. பெண்களுக்கு மின்னூல் படிப்பிகள் முன்னால் உள்ளன, ஆண்களுக்கு விளையாட்டு முனையங்கள் முன்னால் உள்ளன. பதிலளித்தவர்களில் 26% தினமும் குறைந்தது ஒரு மணிநேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். 27% இளைஞர்கள் தங்களுக்கு வந்த தகவல்களுக்கு 5 நிமிடங்களுக்குள் பதிலளிப்பதாகச் சொல்கிறார்கள்.
15 வயதுக்குக் கீழே உள்ள தலைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!
நகர்ப்புறங்களில் 15 வயதுக்குக் கீழே உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமானோரிடம் கைப்பேசி உண்டு. மேலும் 11 மில்லியன் பேர் குடும்ப உறுப்பினர்களின் கைப்பேசியைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தலைமுறைக்கு திறன்பேசி இல்லாமல் வாழ்க்கை என்ன என்றே தெரியாது. இவர்கள் எப்போதுமே இணையத்திலுள்ளனர். தங்களுக்கு எம்மாதிரி எதிர்காலம் வேண்டுமென்றும், அந்த எதிர்காலத்தை உருவாக்க எந்த வழியில் செல்ல வேண்டுமென்றும் தெரியுமென்று இவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் திறன்பேசியுடனே வளர்ந்த முதல் தலைமுறையாகும். இணையம் இவர்களது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இவர்கள் இணையத்துடன்தான் தூங்கச் செல்கிறார்கள், இணையத்துடன்தான் எழுந்திரிக்கிறார்கள். மில்லேனியல்களுக்கோ அவர்கள் குழந்தைப் பருவத்தில் கைபேசிகள் இல்லை. தேவைப்படும்போது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்ட மேசைக் கணினியில் இணையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. எண்ணிம தலைமுறையோ ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள அல்லது தேட விரும்பினால், உடனடியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் முக்கியமாக நிழல்படங்களில் இருந்துதான் தகவலைச் சேகரிக்கிறார்கள். கூகிளை விட யூடியூபை ஒரு தேடுபொறியாகப் பயன்படுத்துகிறார்கள். யூடியூபில் உள்ள பல்லாயிரக் கணக்கான நிகழ்படப் பயிற்சிகளைப் பாருங்கள்.
இவர்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் பொறுமை கிடையாது. ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு உள்ள நேரடிப் பாதையையே எல்லா நேரங்களிலும் விரும்புகின்றனர். அமெரிக்காவில் பகுதிநேர வேலை தேடுவோர் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமென்று எழுதியிருப்பதை ஒரு முழு நிமிடம் படிக்கக்கூடப் பொறுமை கிடையாது. மேலும் 97% பேர் விண்ணப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்வதில்லை.
இளைய தலைமுறைகளைப் பற்றி நல்ல விதமாகச் சொல்ல எதுவுமே இல்லையா?
உண்டு! சமீபத்தில் இங்கிலாந்தின் வர்கி அறக்கட்டளை பல்வேறு நாடுகளிலிருந்து இளைய தலைமுறையினர் 20,000 பேர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். இவற்றில் ஆயிரம் பேர் இந்தியர்கள். உலகளாவிய மட்டத்தில் இந்தத் தலைமுறையில், தன்னை மற்றும் தன் குடும்பம் மற்றும் நண்பர்களை மட்டுமே கவனிக்காமல், சமுதாயத்தில் ஒரு பரந்த பங்களிப்பை செய்வது மூன்றில் இரண்டு மடங்கானவர்களுக்கு (67%) முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பள்ளி, கல்லூரி என்ற முறைப்படியான கற்றல் சூழலில் இருந்து விடுபட்டு இணைய கற்றலில் ஈடுபாடு கொள்வது இந்தியாவில் பதின்ம வயது இளைஞர்களுக்கு காணப்படும் ஒரு சுவாரசியமான போக்கு. ஆகவே தனக்குத்தானே மற்றும் கூடிக் கற்றல் இவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் மொழியை எல்லா எண்ணிம ஊடகங்களிலும், எல்லா சாதனங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
நடைமுறை எடுத்துக்காட்டு – ஒடியா விக்கிபீடியா
ஒடியா விக்கிபீடியா எப்படி அந்த மொழியின் இணையப் போக்கை மாற்றியது என்று சுபாஷிஷ் பாணிக்கிராகி விவரிக்கிறார். உங்கள் மொழி எவ்வளவு பழமையானது என்பது முக்கியமல்ல, ஆனால் எல்லா ஊடகங்களிலும் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது மட்டும்தான். அவற்றின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தையும் காரணமாகக் கொண்டு மொழிகள் வளர்வதில்லை. இந்த மரபு நிச்சயமாக ஒடிய மொழிக்கு எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. மக்களுக்கு மொழியை எடுத்துச் சென்ற எண்ணிமக் கருவிகள்தான் உதவின.
ஆனால் இதுமட்டும் போதாது. மெய்நிகர் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை, இயத்திரக் கற்றல், ஆழமான கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவையே மூச்சுக் காற்றாக இருக்கும் இந்த உலகில், அச்சு வெளியீட்டை மட்டுமே நம்பி மொழிகளை வளர்க்க முடியும் என்று கனவு காண்பது பைத்தியக் காரத்தனம் இல்லையா? குழுத் தொகுப்பில் இணையத்தில் வெளியிடும் போது அந்த உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையில் சிறிய ஐயப்பாடு உள்ளதுதான். ஆனால் ஒரு சமூகத்தின் அறிவை ஆவணப்படுத்துவதற்கு மக்களின் ஒரு பெரிய பிரிவை ஈடுபடுத்த மிக விரைவான, எளிதான மற்றும் சம உரிமை வழி இதுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா பல மொழிகளுக்கு புத்துயிர் கொடுப்பதில் வெற்றி பெற்றதன் முக்கிய காரணம் அதன் தேர்ந்தெடுத்த உள்ளடக்கத்தை கூட்டுசேகரத்தில் உருவாக்கும் மாதிரிதான் (curated content-crowdsourcing model). சிலசமயங்களில், சிறிய மொழிகளுக்கு வழக்கமான அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தை உருவாக்க மிகவும் செலவு செய்ய வேண்டும். இலவச செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பைசா கூட செலவழிக்காமல் மில்லியன் கணக்கானவர்களுக்கு உள்ளடக்கத்தை எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த கருவியாகும்.
தாய்மொழியைப்பற்றி அடுத்த தலைமுறையின் மனப்பாங்கு என்ன?
உங்களுக்கு புதிய தலைமுறையின் தாய்மொழி பற்றிய மனப்பாங்கு ஓரளவு தெளிவாகத் தெரிய வேண்டுமா? இந்த யூடியூப் நிழல்படத்தைப் பாருங்கள். இதை 5 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்கள். இதைவிட முக்கியமாக இதன் கிழே உள்ள கருத்துரைகளைப் படியுங்கள்.
- என் பாட்டி என் அப்பாவிடம் பேசும் போது அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியாது என்பதை என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
- தாய் மொழியில் பேசுவதற்கான திறமை வீட்டிலேயே தொடங்குகிறது. நாங்கள் வளரும் பருவத்தில் வீட்டில் தாய் மொழியில் பேசாவிட்டால் அப்பா எங்களிடம் பேச மறுத்து விடுவார். அதற்கு நான் இப்போது மிகவும் நன்றியாக உணர்கிறேன்.
- அமெரிக்கா பல கலாச்சாரங்களின் கலப்பு என்பதால் உங்கள் தாய் மொழியையும் பேசி வளர்ந்த உங்களுக்கு வாழ்க்கையில், உங்கள் சக அமெரிக்கர்களுக்கு இல்லாத, சில நன்மைகள் உண்டு.
- நான் தாய் மொழியைக் கற்றுக்கொள்ள மறுத்தால் என் பாட்டிக்குக் கடும் கோபம் வரும். ஒவ்வொரு இரவும் அவள் என்னை பயிற்சி செய்யக் கட்டாயப் படுத்தும் போது எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நான் என்னுடைய தாய்மொழியைப் பேச முடிகிறது என்று இப்போது மகிழ்ச்சியடைகிறேன்.
- நான் என் தாய் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வதனால் என் குடும்பத்தைப் பெருமைப்படுத்துகிறேன். இந்த அருமையான மொழியை என் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
புதிய தலைமுறைக்கு தமிழில் ஆர்வம் வளர்ப்பது எப்படி?
புதிய தலைமுறையை எண்ணிம ஊடகங்கள் மூலம்தான் அணுக இயலும். அமெரிக்காவில் கடைகளில் சாளரத்தில் “உதவி தேவை” என்று எழுதி வைப்பார்கள். இவர்கள் அதைக் கவனிக்க மாட்டார்களாம். வரி விளம்பரங்களையும் படிப்பதில்லையாம். இந்தத் திரைப் பழக்க அடிமைகளின் கவனத்தை ஈர்க்க, நீங்கள் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திலும் இடுகையிடவும் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
இரண்டாவது, இவர்களுக்கு இணையத்தில் பயிற்சி நிழற்படங்கள் கொடுத்தால், தானே கற்றுக் கொள்வார்கள் மற்றும் பங்களிப்பார்கள். இந்த அடிப்படையிலுள்ள குழுவிலிருந்துதான் அடுத்த தலைமுறைக்கான எண்ணங்கள், ஈடுபாடுகள் மற்றும் தலைவர்கள் உருவாக வேண்டும். ஆகவே இந்த இளைய தலைமுறைக்கு தமிழ் மொழியைக் கொண்டு செல்வதும் ஆர்வம் வளர்ப்பதும் எப்படி என்பதுதான் இப்போதைய சவால்.
—————————
இத்தொடரில் அடுத்த கட்டுரை: உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா?
தாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது. மொழியும் பண்பாடும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தாய்மொழியை இழந்தால் நாம் கலாச்சாரமற்ற இயந்திர மனிதர்கள் ஆகிறோம். பிள்ளைகள் தமிழ் பேச புலம்பெயர்ந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?