மின்-ரிக்ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர்.
தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து இங்கே தொகுத்து விற்பனை செய்தனர். தற்போது மற்ற பாகங்கள் யாவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மோட்டாரும் அதன் கட்டுப்பாட்டகமும் (inverter) ஓரளவு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மற்றபடி பெரும்பாலும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.
பெரும்பாலான மின் ரிக்ஷாக்களில் ஈய-அமில மின்கலங்கள்தான்
விலை குறைவாக இருப்பதால் பெரும்பாலான மின் ரிக்ஷாக்களில் ஈய அமில மின்கலங்களைத்தான் பொருத்துகிறார்கள். நான்கு 12 வோல்ட் மின்கலங்களைத் தொடராகப் (series) பொருத்தினால் 48 வோல்ட் வரும். இதன் ஆற்றலளவு 120 முதல் 150 ஆம்பியர் மணி வரை இருக்கும். அதாவது 1.2 kW மோட்டார் என்றால் முழுச் சுமையில் 25 ஆம்பியர் (1200/48) மின்னோட்டம் தேவைப்படும். நடைமுறையில் 8 மணி நேரம் மின்னேற்றம் செய்தால் 70 கிமீ வரை ஓடும். இவற்றில் சில லித்தியம் மின்கலம் வைத்தும் வருகின்றன. இவற்றின் விலை அதிகம். 5 மணி நேரம் மின்னேற்றம் செய்தால் 100 கிமீ வரை ஓடும். ஆகவே இவை நகரங்களில் கடைகள் நிறைந்த நெருக்கமான சந்துகளில் குறுகிய தூரம் செல்வதற்குத் தோதானவை.
முழுவதும் வடியக்கூடிய (Deep cycle) மின்கலங்கள் தேவை
பெட்ரோல் டீசல் காரிலுள்ள மின்கலங்கள் வண்டியைக் கிளப்பும்போது ஓரளவு வடியும். ஆனால் வண்டி ஓடத் தொடங்கியவுடன் மின்னேற்றமும் தொடங்கிவிடுவதால் பெரும்பாலான நேரம் முழு மின்னேற்றத்திலேயே இருக்கும். இவை முழுவதும் வடியக்கூடிய மின்கலங்கள் அல்ல. ஆனால் மின்னூர்திகளில் பயன்படுத்தும் இழுவை மின்கலங்கள் ஒவ்வொரு முறையும் அனேகமாக முழுவதும் வடிந்து விடும். வழக்கமான மின்கலங்களை இம்மாதிரி அடிக்கடி முழுவதும் வடியவைத்தால் அவற்றின் ஆயுள் மிகவும் குறைந்துவிடும். ஆகவே மின் ரிக்ஷாக்களில் முழுவதும் வடியக்கூடிய மின்கலங்களைப் பயன்படுத்தவேண்டும். ஆனால் வடியக்கூடிய மின்கலத் தயாரிப்பாளர்கள் கூட 75% க்கு மேல் வடியவிட வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்கள். ரிக்ஷா ஓட்டுநர்கள் இதை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கண்ணாடியிழைத் (fiberglass) தகடால் ஆன உடல்பகுதி
உடல்பகுதி எடைக் குறைவாக இருந்தால் நல்லது. ஆனால் நம்மூரின் சாலை நிலைகளுக்கும், ரிக்ஷா ஓட்டும் வகைகளுக்கும், மிகைச்சுமைக்கும் தாக்குப்பிடிக்க வேண்டும். அடிச்சட்டம் (chassis) மென் எஃகுக் குழாய்களைப் பற்றவைத்துத் (welded) தயாரிக்கப்படுகிறது. உடல்பகுதி இரும்பு அல்லது அலுமினியத் தகடால் முன்னர் செய்யப்பட்டது. ஆனால் கண்ணாடியிழைத் (fibreglass) தகடு பரவலாகப் பயன்பாட்டில் வந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இதில் எளிதில் ஒடுக்கு விழாது, நீடித்து உழைக்கும், எடை குறைவு மேலும் எளிதில் பராமரிக்கக் கூடியதாகவும் உள்ளது.
வண்டியின் மேல் சூரிய மின் தகடுகள் (solar panels) பொருத்தி கூடுதல் மின்னேற்றம்
வண்டியின் மேல் சூரிய மின் தகடுகள் பொருத்தினால் முழுவதும் வண்டியை ஓட்டும் அளவுக்கு மின்னேற்றம் கிடைக்காது. ஆனால் இதன் மூலம் பகலில் ஓரளவு மின்னேற்றம் கிடைக்கும். இது மின்கலத்தின் மூலம் கிடைக்கும் ஓடுதூரத்தை அதிகப் படுத்தி ரிக்ஷா ஓட்டுநரின் தினப்படி வருவாயை அதிகரிக்க உதவி செய்யும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: சக்கரத்திலேயே மோட்டார்
சுற்றகம் (rotor) வெளிப்புறம் இருக்கும். சக்கரம் போன்ற அதே அதிர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் மோட்டாரும் உள்ளாகிறது. பிரேக்குகளை எங்கு வைப்பது என்பதில் சிக்கல். சக்கர மோட்டார்கள் அதிவேகமாகச் சுழல்வதில்லை.