மூன்று சக்கர மின்னூர்திகள் இரண்டு வகை. குறைந்தத் திறன் கொண்ட மின்-ரிக்ஷாக்கள் (E-Rickshaw) ஈய அமில மின்கலம் வைத்து வருகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஈய அமில மின்கலத்தைவிட லித்தியம் அயனி மின்கலம் அதிக ஆற்றல் கொண்டது. ஆகவே எடை குறைவு. துரிதமாக மின்னேற்றம் செய்யவும் முடியும். ஆனால் விலை அதிகம். இங்கு லித்தியம் அயனி மின்கலம் பொருத்திய அதிகத் திறன் கொண்ட மின்-ஆட்டோக்கள் (E-Auto) பற்றிப் பார்ப்போம்.
மோட்டார்
இவற்றில் பெரும்பாலும் தொடியற்ற நேர்மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். சில மின்-ஆட்டோக்களில் தூண்டல் மோட்டார்களும், நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்களும் பொருத்தப்படுகின்றன. மின் மோட்டாரின் ஆற்றலைப் பொருத்து மூன்று சக்கர மின்னூர்திகளை மூன்று அளவீடுகளாகப் பிரிக்கிறார்கள். சிறியவை 1000W வரை, இடைநிலையில் 1000W முதல் 1500W வரை, பெரியவை 1500W க்கு மேல்.
திறன் பொறித்தொடர் (Power train)
பல மின்சாரக் கார்கள் முன் சக்கரத்தை ஓட்டும் (front-wheel-drive) வகை என்று முன்னர் பார்த்தோம். மின்-ஆட்டோக்கள் யாவும் பின் சக்கரத்தை ஓட்டும் (back-wheel-drive) வகை. மோட்டார், எப்போதும் இணைந்தே இருக்கும் ஒற்றை குறைவேகப் பல்லிணை (reduction gear), வேறுபாட்டுப் பல்லிணை (differential), ஓட்டும் அச்சு (axle) ஆகியவை அடங்கிய திறன் பொறித்தொடர் பின் சக்கரங்களை இயக்குகிறது.
சரக்கு வண்டிகள்
இணையத்தில் பொருட்களை வாங்குவது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. ஆகவே நகரத்துக்குள்ளேயே பொருட்களை விநியோகம் செய்தலும் அதிகரித்து வருகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று சக்கர சரக்கு வண்டிகளே தோதானவை. இருப்பினும் இரவில் மின்னேற்றம் செய்தால் நாள் முழுதும் ஓட்டுவதற்குத் திறன் இருக்குமா என்று பார்க்க வேண்டும். இல்லாவிடில் கூடுதல் மின்கலங்கள் வைத்துக்கொண்டு, இடையில் கழற்றி மாற்றீடு செய்து கொள்ள வேண்டும்.
பயணி வண்டிகள்
தொடக்கத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் முன்பக்கம் எஞ்சின் வைத்தே வந்தன என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவற்றில் பயணித்தால் எஞ்சினின் இரைச்சலும் அதிர்வும் அதிகமாக இருக்கும். பின்னர் பின்பக்க எஞ்சின் வைத்து ஆட்டோக்கள் வந்தன. இவற்றில் பயணிகளுக்கு இரைச்சல் குறைவாக இருக்கும். மின் ரிக்ஷாக்களில் இரைச்சலும் அதிர்வும் இல்லாமல் சொகுசாகப் பயணிக்கலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்-ரிக்ஷா
பெரும்பாலான மின் ரிக்ஷாக்களில் ஈய-அமில மின்கலங்கள்தான். முழுவதும் வடியக்கூடிய (Deep cycle) மின்கலங்கள் தேவை. கண்ணாடியிழைத் (fiberglass) தகடால் ஆன உடல்பகுதி. வண்டியின் மேல் சூரிய மின் தகடுகள் (solar panels) பொருத்தி கூடுதல் மின்னேற்றம்.