மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது
பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர் மேலும் கவனமாக ஓட்ட வேண்டும். முக்கியமாகப் பின்னோக்கிச் செல்லும்போது மிகக் கவனமாக ஓட்ட வேண்டும்.
கியர் மாற்றுதல்
தானியங்கி கியர் உள்ள பெட்ரோல் டீசல் கார்களில் வழக்கமாகத் தரிப்பு (Parking – P), பின்செலுத்தல் (Reverse – R), நடுநிலை (Neutral – N), முன்செலுத்தல் (Drive – D) என்ற கியர் நிலைகள் இருக்குமல்லவா? அதே போலவே மின்னூர்திகளிலும் முன்பின் நகர்த்தும் அல்லது வட்ட வடிவ சுவிட்சுகள் (Dial) உண்டு.
மின்னூர்திகளில் தரிப்பு (Parking – P) என்ற கியர் நிலையைத் தேர்வு செய்தால் மின்னணுத் தரிப்பு பிரேக்கைப் (Electronic Parking Brake) பிடிக்கும். ஏற்ற இறக்கமான சாலைகளில் வண்டி தானாகவே நகர்வதை இது தடுக்கும். நடுநிலை (Neutral – N) என்ற கியர் நிலையைத் தேர்வு செய்தால் இந்த மின்னணுத் தரிப்பு பிரேக்கைப் பிடிக்காது. ஆகவே வண்டியைத் தள்ளி நகர்த்த வேண்டுமானால் இதில் போடலாம்.
ஓட்டும் முறைகள் (Drive Modes)
பல மின்னூர்திகளில் நகரம் (City), சிக்கனம் (Eco), விளையாட்டு (Sport) என்று மூன்று ஓட்டும் முறைகள் உண்டு. இவற்றில் நகரம்தான் இயல்புநிலைப் பயன்முறை. ஒவ்வொரு முறையும் நாம் காரைத் துவக்கும் போதும் தானாகவே இந்த முறையில்தான் இருக்கும். மின்கலத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக தூரம் செல்வது முக்கியம் என்றால் Eco வுக்கு மாற்றிக் கொள்ளலாம். விரைவான முடுக்கமும் மிகவும் துல்லியமான கையாளுதலும் தேவையென்றால் Sport க்கு மாற்றிக் கொள்ளலாம்.
வலுவற்று வீடு திரும்பல் (Limp Home Mode)
மின்கலத்தில் மின்சாரம் மிகவும் இறங்கி விட்டாலோ அல்லது சில வகையான பழுதுகள் ஏற்பட்டாலோ, பிரச்சினை மேலும் பெரிதாகாமல் இருக்க, இந்த நிலைக்குத் தானாகவே சென்று விடும். இதில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் உண்டு:
- குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் ஓட்ட முடியாது
- முடுக்கம் குறைந்துவிடும்
- அதிகம் மேடு ஏற முடியாது
- காற்றுக் குளிர்விப்புக் குறைந்துவிடும்
இந்த நிலையில் நிதானமாக ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர மட்டுமே முடியும்.
கட்டி இழுத்தல் (Towing)
சாலையில் வண்டி பழுதாகி நின்றுவிட்டால் N (Neutral) கியரில் போட்டு வண்டியைத் தள்ளி சாலையைவிட்டு ஓரமாகப் பாதுகாப்பாக நிறுத்தலாம். ஆனால் N (Neutral) கியரில் போட்டால் கூட சக்கரத்திலிருந்து மோட்டாரின் இணைப்பைத் துண்டிக்க முடியாது. பணிமனைக்குக் கட்டி இழுத்துச் செல்லவேண்டியிருந்தால் சமதள வண்டியில் (flatbed truck) முழுவதுமாக ஏற்றிக் கொண்டு செல்லலாம். அல்லது ஓட்டும் சக்கரங்களை (driven wheels) மேலே தூக்கி மற்ற இரண்டு சக்கரங்கள் மட்டும் சுழலுமாறு கட்டி இழுத்துச் செல்லலாம். மாறாக கட்டி இழுத்துச் செல்லும்போது ஓட்டும் சக்கரங்கள் வேகமாக நெடுநேரம் சுழன்றால் மோட்டார் சேதம் ஆகிவிடும்.
மின்னூர்தியை நிழலில் நிறுத்துவது அவசியம்
அதிக வெப்பநிலை மின்கலத்தின் ஒட்டுமொத்த ஆயுளைக் குறைக்க வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, சூரிய ஒளியில் நேரடியாக இருப்பதைக் குறைக்க, கூறை போட்ட இடங்களில் அல்லது நிழலான இடங்களில் ஊர்தியை நிறுத்துவது நல்லது. நீண்ட நேரத்திற்கு மின்கலம் முழு மின்னேற்றத்தில் வெப்பமான நிலையில் இருக்கக் கூடாது. ஏனெனில் இது மின்கலத்தில் அழுத்தத்தை (stress) ஏற்படுத்தும். சில மின்னூர்திகள் வெப்ப மேலாண்மை அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை மின்கலத்தின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி அதன் தாக்கத்தைக் குறைக்க உதவும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னூர்திகளின் தரநிலைகள்
இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (Automotive Research Association of India – ARAI). ஓடுதூரம் சோதிக்கும் செயல்முறை. ஊடுருவல் பாதுகாப்பு (Ingress Protection – IP) உறைகள்.