பல்வேறு பயனுள்ள கட்டற்ற செயலிகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். பலரும் நம்முடைய மொபைல் போனில் தற்போதைய இருப்பிடத்தை, யாராவது கண்டுபிடித்து விடுவார்களா? எனும் அச்சத்திலேயே இருப்பார்கள்.
உதாரணமாக, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? எங்கு பொருள் வாங்குகிறீர்கள்? எந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள்? போன்ற தகவல்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை உங்கள் மொபைல் கருவியில் நிறுவும் போது, உங்களுடைய இருப்பிட தகவல்கள் மிக எளிதாக வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது.
மேலும், சிலர் உங்களிடம் தற்போதைய இருப்பிடத்தை பகிரும்படி சொல்வார்கள். சில தர்ம சங்கடமான சூழல்களில், உங்களுடைய தற்போதைய இருப்பிடத்தை பகிர முடியாமல் போகலாம். நீங்கள் மற்றொரு இடத்தில் இருப்பதைப் போல பகிர வேண்டும் என கூட நினைக்கலாம்.
ஆனால், VPN போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது பெரும்பாலும் வெளிநாட்டு முகவரியை தான் காட்டும். நம்மூரில் இருப்பவர் எப்படி விநாடிப் பொழுதில் வெளிநாட்டுக்கு போய்விட்டார் எனும் சந்தேகம் ஏற்பட்டுவிடும். ஆனால், உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் சரி! உலகின் எந்த மூலையில் நீங்கள் இருப்பதாக வேண்டுமானாலும்(Anytime anywhere)காட்டிக் கொள்வதற்கு ஒரு செயலி இருக்கிறது.
என்னப்பா! கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா. இந்த செயலியின் பெயர்தான் ஃபேக் ட்ராவலர்(Fake traveler). இந்த செயலியானது கட்டற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் குறித்து பயப்பட வேண்டிய தேவை இல்லை.
ஆனால், இந்த செயலியை பயன்படுத்துவதற்கு உங்களுடைய மொபைல் கருவியின் டெவலப்பர் ஆப்ஷனை ஆன் செய்து(Developer option) வைத்திருக்க வேண்டும். அதில் மாக் லொகேஷன்(Mock location) எனும் அமைப்பில் சென்று இந்த செயலிக்கான அனுமதியை வழங்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கியவுடன், செயலியில் வந்து, உங்களுக்கு விருப்பமான முகவரியை உள்ளிட வேண்டும். பின்பு show கொடுத்தால் போதும். மதுரையில் இருப்பவர் மேன்சிஸ்டர் சிட்டியில் இருப்பதாக காட்டும். கூகுள் மேப் கூட இந்த செயலி இடம் தோற்றுப் போய்விடும். ஆம் !கூகுள் மேப் செயலி உங்களுடைய உண்மையான இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் திணறும்.

மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு தற்போதைய இருப்பிடத்தை பகிரும்போது அவர்களுக்கும் இந்த போலி இருப்பிட முகவரிதான் காட்டும். ஆனால் இதை ஒருபோதும் தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த மேப்பு வசதிக்காக கட்டற்ற ஓபன் ஸ்ட்ரீட் மேப் தான் பயன்படுத்தப்படுகிறது.




நண்பர்களோடு விளையாடுவதற்கும் அத்தியாவசியமான சூழல்களில் மட்டும் உங்களுடைய இருப்பிடத்தை மாற்றி கூறுவதற்கு இந்த செயலியை பயன்படுத்துங்கள். மற்றபடி தேவையின்றி ஏமாற்று வேலைகளுக்காக இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம். மேலும், அனைத்து நேரங்களிலும் இதுபோன்ற சேவைகள் சரியாக செயல்படும் என்று சொல்ல முடியாது. எனவே அமெரிக்காவில் இருக்கிறேன்! என சொல்லிக் கொண்டிருக்கும் போதே பண்ணும் ஏமாற்று வேலை தெரிந்து செருப்படி வாங்கும் நிலை ஏற்படலாம்.

எனவே விளையாட்டுக்காக மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.
App link : f-droid.org/en/packages/cl.coders.faketraveler/
மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com
Pingback: கட்டற்ற செயலி (15/03/2025) – SRI KALEESWARAR S