Google செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய செயலிகள் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதுவதாக முன்பே தெரிவித்திருந்தேன். மேலும், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு தலைப்புகளின் இணைப்பாக, குரோம் உலாவிக்கு(Chrome browser)மாற்றாக உங்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த கட்டற்ற உலாவி குறித்து தான் இன்றைக்கு பார்க்க வருகிறோம்.
அடிப்படையில் குரோம், மைக்ரோசாப்ட் உலாவி, சபாரி போன்ற பல்வேறு விதமான உலாவிகள்(Browser)நம் கருவிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் ஃபயர் ஃபாக்ஸ்(Firefox)போன்ற கட்டற்ற உலாவிகளும் அடக்கம். இருந்த போதிலும், குரோம் உலாவியில் தான் மொபைல் கருவிகளுக்கு ஏற்றதாகவும் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் இருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.

Tor போன்ற தனிப்பட்ட தகவல்களை மிக நேர்த்தியாக பாதுகாக்க கூடிய கட்டற்ற உலாவிகளும் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. ஆனால் இந்த உலாவியானது, சாதாரணமாக பயன்படுத்துவதற்கு சற்றே கடினமானதாக இருக்கும்.
இது எல்லாவற்றிற்கும் மாற்றாக fdroid தளத்தில் உங்களுக்கு காணக் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான உலாவி தான் foss browser.
முழுக்க,முழுக்க கட்டற்ற முறையில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த உலாவியானது அடிப்படையான அனைத்து வசதிகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இந்த உலாவியில் உள்நுழைய வேண்டும்(no need to login)என்கிற கட்டாயம் இல்லை. மேலும் இந்த உலகில் நான் பார்த்ததிலேயே ஒரு சுவாரசியமான அம்சம் இருக்கிறது. நீங்கள் தேடுபொறியில் ஒரு இணையதளம் குறித்து தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இணையதளத்தின் தேடுதல் முடிவுகள் காட்டப்பட்ட உடனேயே, அதன் கீழேயே அனானிமஸ் வியூ(anonymous view)எனும் அமைப்பும் காட்டப்படும். இதன் மூலம், அந்த இணையதளத்தை நீங்கள் திறக்கும் போது உங்களுடைய தகவல்கள் எதுவும் இன்றி, எப்படி குரோம் incognito செயல்படுகிறதோ, அதுபோலவே உங்களால் ஒரு இணையதளத்தை பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், குரோம் உலாவியை காட்டிலும் இந்த வசதி இதில் மிக மிக எளிமையாக இருக்கிறது. மேலும், ஒரு இணையதளத்தின் தகவல்களை அச்சுப்பிரதியாக(print page as well as save as pdf)மாற்ற வேண்டுமென்றால், அது சற்றே கடினமாக ஒன்றாகத்தான் இருக்கும். பல நேரங்களில் குரோம் உலாவில் திறக்கப்பட்ட தளங்களை அச்சு செய்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
ஆனால், இந்த உலாவியிலோ மிக மிக எளிமையாக உங்களால் அச்சு வசதியை பெற முடிகிறது. மேலும் தானாகவே இது விளம்பரங்களை பெரும்பாலும் குறைத்து விடுகிறது. எனவே அச்சு செய்யும்போது ஆங்காங்கே தேவையற்ற விளம்பர படங்கள் இடம் பெறாது. விளம்பரங்கள் இன்றி, தொல்லைகள் இன்றி, அமைதியாக நீங்கள் தேட நினைத்ததை தேடி இணையத்தில் உலாவுவதற்கு ஒரு அருமையான உலாவியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.


என்னை பொறுத்த அளவிற்கு பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையாகவே இருக்கிறது. நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருக்கும் யாரும் இந்த உலாவியை எளிமையாக பயன்படுத்த முடியும் அனைத்து கருவிகளிலும் பெரும்பாலும் இந்த உலாவியானது பொருந்தும். பெரும்பாலும் இடத்தையும் அடைத்துக் கொள்வதில்லை.
தேவையின்றி ஒரு இணையதளத்தில் தேடி உங்களுடைய தகவல்களை வைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப விளம்பரங்களை அனுப்பி பாடாய்படுத்தும் பிரச்சினைகள் எல்லாம் இந்த உலாவியில் உங்களுக்கு ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.
App link:f-droid.org/en/packages/de.baumann.browser/
இந்த உலாவியானது fdroid தளத்திலேயே உங்களுக்கு கிடைக்கிறது.சுமார் 50 mb அளவில் இருக்கும் இந்த உலாவியில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு கருவிகளில் சிறப்பாக செயல்படும்.
பிறகு ஏன் நண்பர்களே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக இந்த உலாவியை பயன்படுத்திப்பாருங்கள். மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com