வருங்காலத்தை  ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 46

By | April 15, 2025

கடந்த கட்டுரையில் வருங்காலத்தில் ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாக பார்த்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சி தான் இது.

IOT & Remote Networks

இணையத்தோடு இணைந்த சாதனங்கள் என அறியப்படும் IOT (Internet of things)தொழில்நுட்பமானது, கடந்த சில தசாப்தங்களில் அளப்பரிய வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் மற்றும் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய கருவியை இணையத்தின் ஊடாக இணைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை ஆகும்.

ஆரம்பகால மாதிரிகளில் அதிகப்படியான மின்சார தேவையும் சக்தி வாய்ந்த இணைப்புகளும் தேவைப்பட்ட நிலையில், தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி இணைய சேவை வசதிகள் போன்றவற்றால், அனைவரும் அணுகக் கூடிய நுட்பமாக மாறி இருக்கிறது இணையத்தோடு இணைந்த சாதனங்கள்.

இதன் அடுத்த கட்டங்களாக பெரும் கருவிகளை இயக்குவது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டே மெய்நிகர்(Virtual reality)நுட்பங்களைக் கொண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது! போன்றவை கூட வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் ஒரு மருத்துவரால்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கு சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சையை கூட மேற்கொள்ள முடியும். ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமும், அதிவேக இணைய நுட்பமும் இணையும் போது இது சாத்தியப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்காலத்திலேயே வீடுகளில் இருந்து பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மீப்பெரும் அளவில் அதிகரித்து வருகிறது.

வரும் காலங்களில் அதற்கு உகந்த சூழல்கள் ஏற்படும். மேலும், அதிக நுட்பம் மற்றும் திறமை கொண்ட பணியாளர்கள், இருக்கும் இடத்திலிருந்து கொண்டே பல்வேறு நாடுகளில் இருக்கும் நுட்பங்களை இயக்கக்கூடிய வசதிகள் இதன் மூலம் சாத்தியப்படும்.6G தொழில்நுட்பம் வந்த பிறகு, இதன் வேகம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மேலும், வரும் சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் இத்தகைய இணையத்தோடு இணைந்த கண்காணிப்பு கேமராக்களால் நிறைக்கப்படும். இரவு நேரங்களில் நடைபெறும் குற்றங்கள் பிரச்சனைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும். ஏற்கனவே, நகரங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் உருவாக்கப்படும். மேலும், நடக்கும் குற்றத்தை செயற்கை நுண் அறிவு கொண்டு கண்டறிந்து, அதன் மூலமே தானியங்கி புகார்களை பதிவு செய்யும் நுட்பங்களை கூட ஏற்படுத்த முடியும்.

இவை அனைத்திற்கும் பின்னால் அதிகப்படியான தொடர்புகளை கையாளக்கூடிய மிகவும் நுட்பமான எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி புதைந்திருக்கிறது.

மொபைல் கருவிகள் மற்றும் கைக்கடிகாரங்கள்

தற்காலத்திலேயே வளையக்கூடிய திரைகளைக் கொண்ட மொபைல் கருவிகள் வரத் தொடங்கிவிட்டன. மேலும், மேககணிமை (cloud computing) போன்ற நுட்பங்களின் மூலம் சக்தி வாய்ந்த கணினிகளை கூட நம்முடைய மொபைல் கருவிகளால் இயக்க முடிகிறது. தற்காலத்தில் இது தொடக்க நிலையில் இருந்தாலும் கூட, வரும் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அளப்பரியதாக இருக்கும். தற்போது இருப்பதை போல வீடுகளில் கணினிகளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு பதிலாக, ரிமோட் டெஸ்ட் டாப் முறையானது(remote desktop & cloud desk)பெரும்பாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொண்டு, மிகச்சிறிய கருவிகளைக் கொண்டு சக்தி வாய்ந்த கணினிகளை இயக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், பணிகளின் வேகமும் துரிதப்படுத்தப்படும்.

ஏற்கனவே, கைகடிகாரங்களில் அழைப்புகளை பேசிக்கொள்வது, இதயத்துடிப்பை கண்டறிவது போன்ற நுட்பங்கள் பொதிந்து விட்டன. இதனோடு, சேர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஒரு சில தருணங்களில் மொபைல் கருவிகள் மறைந்து போய் கைகடிகாரங்களே மொபைல் கருவிகளை பதிலீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் நம்புகின்றனர். மேலும், கைகளிலேயே மடித்து அணிந்து கொள்ளக்கூடிய மொபைல் கருவிகளும் ஆங்காங்கே சோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும், தற்போது இருப்பதை காட்டிலும் சக்திவாய்ந்த நுட்பமான வசதிகளைக் கொண்ட மொபைல் கருவிகள் வரத் தொடங்கும்.6G தொழில்நுட்பம் வந்த பிறகு , மிக மிக வேகமான இணைய வசதியைக் கொண்டு தற்போது இருப்பதை விடவும் சக்தி வாய்ந்த இணைய செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். சக்தி வாய்ந்த சில்லுகளை பயன்படுத்தி சிக்கலான நுட்ப பணிகளை கூட மொபைல் கருவிகளால் கையாளக்கூடிய சூழல் ஏற்படும்.

அதேபோல, கைக்கடிகார தொழில்நுட்பமும் தொடர்ந்து வளர்ந்து, அதன் உச்சபட்ச நீட்சியை அடையும். மேலும், அத்தோடு செயற்கை நுண்ணறிவு புலன்களும் இணைந்து செயல்படும். மனித உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கண்டறிந்து திடீரென ஏற்படும் இதய நோய் தொடங்கி நீண்ட நாட்களாக இருந்து பாதிக்கக்கூடிய புற்றுநோய் வரை கண்டுபிடிப்பதற்கான நுட்பங்கள் கை கடிகாரங்களுக்குள்ளேயே பொதிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவை நடப்பதற்கு இன்னும் சில தசாப்தங்கள் நாம் பொறுத்து இருக்க வேண்டும்.

காட்சி படத்துறை

ஒரு காலத்தில் மை டியர் குட்டிச்சாத்தான் போன்ற திரைப்படங்கள் திரைத்துறையின் சாதனையாக பார்க்கப்பட்டன. முதலில் இந்தியாவில் வெளியான முப்பரிமாண திரைப்படமும் அதுதான். தற்காலத்தில், திரைத்துறையில் அபரிவிதமான தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படுகிறது. வருங்காலத்தில், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைக் கொண்டு மனிதர்களே நடிக்காமல் கூட திரைப்படக் காட்சிகளை வடிவமைத்து விட முடியும். அனிமேஷன் துறையிலும் கூட மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

ஜப்பானிய அனிமேஷன் குழந்தை தொடரான டோரிமான் கதையில் வருவது போலே, நம் கணினித்திரையில் வரையும் படங்கள் திரைப்படமாக மாறி நம் கண் முன் வந்து சேரும் நாளும் வெகு தொலைவில் இல்லை. மேலும், தற்போது இருப்பதை காட்டிலும் அதிகமான உணர்திறன் கொண்ட உணர்விகள்(higher sensing rate camera sensors)தயாரிக்கப்படும். இதன் மூலம், காட்சிப்பட தரமானது நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை அடையும்.

குறிப்பாக, வரும் காலத்தில் ஒரு பொருளின் மணத்தை(smell) வெளிப்படுத்தக்கூடிய வகையிலான திரைகளும், கேமரா கருவிகளும் கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட, சில பொதுவான வேதிப்பொருட்களை வாசனை திரவிய வடிவில் சேமித்து வைத்து, திரையில் காட்டப்படும் படத்திற்கு ஏற்ப அதனுடைய வாசனைகளையும் முதலிலேயே பதிவு செய்து வைத்து, காட்சி ப்படுத்தப்படும் திரையில் அத்தோடு நறுமணமும் வீசும்.

உதாரணமாக, அமேசான் காடுகளில் கிடைக்கும் ஒரு அரிய வகை மலரின் மணமானது நம் வீட்டு டிவி திரைக்குள் இருந்து வெளிப்படும். இதற்கு தேவையான கேமரா நுட்பங்களும் ஏற்கனவே சோதனை நிலைகளில் உள்ளன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அத்தோடு செய்யறிவு தொழில்நுட்பமும் இணைவதால், முன்பு இருப்பதை விடவும் இருளிலேயே சிறப்பாக காட்சிகளை பதிவு செய்ய முடியும். மேலும், கண்காணிப்பு கேமரா துறையிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இருப்பதை விடவும் மிகக் குறைவான ஆற்றலை கொண்டே இயங்கும் வகையில் கேமரா கருவிகள் வடிவமைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதேபோல, மொபைல் கேமரா துறை வளர்ச்சியும் படு வேகமாக இருக்கும். இதன் மூலம், தெளிவான நுட்பமான புகைப்படங்களை அனைவராலும் எடுக்க முடியும். முன்பே சொன்னது போல இந்த நுட்பங்கள் சோதனை நிலையில் இருப்பதால் வரும் தசாப்தங்களில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம்.

மருத்துவம்:-

முன்பே குறிப்பிட்டது போல, மருத்துவத்துறையில் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் தற்காலத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உயிர்காக்கும் கருவிகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டவை தான். அந்த கருவிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எனவே வரும் ஆண்டுகளில் மிக சிக்கலான உடல் வியாதிகளுக்கு கூட தீர்வு காணும் வகையில் கருவிகளை வடிவமைக்க முடியும். இதன் மூலம், மனித ஆயுள் காலம் குறிப்பிடும் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், உடனுக்குடன் நோய் கண்டறியும் நுட்பங்களும் வளரும் என்பதால், முன்பு போல நீண்ட கால நோய்களால் பாதிக்கப்படும் நிலை குறைந்து போகும். புற்றுநோய் போன்ற நீண்டகால மற்றும் சில மரபு வழி நோய்களுக்கும் கூட முன்பே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்கான நுட்பக் கருவிகள் வடிவமைக்கப்படும். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே கார்பனின் தனிமப்புறவேற்றுமை வடிவங்கள் (fullerene, nanotube)மருந்துகளை சுமந்து செல்லும் drug delivers வேலைகளைக் கூட செய்கின்றன. மேலும், மனித மூளை நரம்புகளை கட்டுப்படுத்தும் வகையிலான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வடிவமைக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இதன் மூலம் சிக்கலான நரம்பியல் பிரச்சனைகளை கூட கண்டறிந்து துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும். இவையும் வரும் தசாப்தங்களில் சாத்தியப்படும். ஆனால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சிக்கல்கள்:-

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொன்னாலும், அதற்குப் பின்பும் கூட சில சிக்கல்கள் களையப்பட வேண்டி தான் இருக்கும். அப்படி பார்க்கின்ற போது எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சியிலும் கூட சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடிப்படையாக பயன்படுத்தப்படும் சிலிக்கா,ஜெர்மனியம் மற்றும் மின்கலன்களாக பயன்படுத்தப்படும் அரிய தனிமங்களான லித்தியம் போன்றவை மண்ணில் இருந்தே பெறப்படுகின்றன. இவற்றை அதிகமாக தோண்டி எடுப்பதால் புவி மாசு ஏற்படுகிறது. மேலும், உலகளாவிய அளவில் உற்பத்தி செய்யப்படும் தற்போதைய மின்சாரத்தின் அளவீடானது, பெரும்பாலும் புதைப்படிவ எரிபொருட்களை நம்பியே இருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசும், புவி வெப்பமாதலும் அதனோடு சேர்ந்த இயற்கை சிக்கல்களும் நம்மை வாட்டி வதைக்க தொடங்கி விட்டன.

எனவே, மாசி ஏற்படுத்தாத மூலங்களிலிருந்து இதுபோன்ற எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சூரிய மின்தகடுகள் போன்றவற்றின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது. தசாப்தங்கள்தோறும் நமக்கு தேவையான ஆற்றல் அளவிடானது பன்மடங்கு உயர்ந்து கொண்டுதான் செல்கிறது.

இது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, வளர்ந்து வரும் நுட்பங்களில் இருக்கும் எதிர்மறை சிக்கல்களான இணையவழி மிரட்டல்கள், ஏமாற்று வேலைகள்,ஒருதலை பட்ச செயல்பாடுகள், விழிப்புணர்வின்மை போன்றவையும் களையப்பட்டு எளிய மக்களின் கையில் வளர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சென்று சேர வேண்டிய கட்டாயம் காலத்தின் கைகளில் இருக்கிறது.

வருங்கால எலக்ட்ரானிக்ஸ் நுட்பங்கள் குறித்து உங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை கூட தயங்காமல் மின்மடலுக்கு அனுப்புங்கள்.

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com