குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

By | March 4, 2025

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நான் தற்போது எழுதி வரும் லாஜிக் கதவுகள் தொடர்பாக இந்த செயலியிலேயே சர்க்யூட் போட்டு பார்த்து விட முடியும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பம், வானியல், கோள்கள், நிறமாலைகள், வேதியியல் உள்ளிட்ட பலதரப்பட்ட அறிவியல் நுட்பங்களின் அடிப்படைகளை கூட இந்த செயலியின் மூலம் குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியும்.

மேலும், பொழுதுபோக்கிற்காகவும், அவர்களின் நுட்ப அறிவு வளர்க்கும் விதமாகவும் பல்வேறு விதமான விளையாட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. சில விளையாட்டுகளை பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவம் வைக்கப்பட்டு இருக்கிறது, அதே நேரம் பணம் கொடுத்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய பல செயலிகளை காட்டிலும் இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது.

இந்த செயலியானது, பல்வேறு இந்திய மொழிகளில் கூட உங்களுக்கு கிடைக்கிறது .ஆனால், நான் கவனித்த பொழுது தற்பொழுது வரை இதன் தமிழ் பதிப்பு வெளியாகவில்லை கட்டற்ற தமிழ் நுட்ப ஆர்வலர்கள் இந்த செயலியில் விரைவில் தமிழ் மொழியை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். மற்றபடி நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் இந்த செயலியில் இடம்பெற்று இருக்கிறது. இந்த விளையாட்டுகளின் மூலம் குழந்தைகள் புதுப்புது விஷயங்களை எளிமையாக கற்றுக்கொள்வார்கள்.

உங்களுடைய குழந்தை பத்து வயதிற்கு உள்ளாக இருந்தால், இந்த செயலியை தினம் தூறும் ஒரு பத்தில் இருந்து 20 நிமிடம் பயன்படுத்த கொடுக்கலாம். ஆனால், என்னதான் இருந்தாலும் அதிக நேரம் மொபைல் கருவிகளை குழந்தைகளை பயன்படுத்த அனுமதிப்பது சரியாக இருக்காது.

இந்த செயலியை நான் பயன்படுத்திய என் அனுபவங்கள் அடங்கிய சில ஸ்கிரீன்ஷாட்களையும் கீழே வழங்கி இருக்கிறேன். இந்த செயலியானது உங்களுக்கு கட்டற்ற வகையில் F droid (also available in Play Store)தளத்தில் காணக் கிடைக்கிறது.

பெரியதாக உங்கள் மொபைல் போனில் இந்த செயலி இடத்தை அடைத்துக் கொள்வதுமில்லை. மேலும், இன்னபிற செயலிகளை போல குழந்தைகளின் கற்றல் திறன் தொடர்பான தகவல்களை சேகரித்து, அதன் மூலம் விளம்பரம் செய்யும் பிரச்சினைகள் எல்லாம் இங்கு உங்களுக்கு இல்லை. பிறகு ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே ! இன்றைய குழந்தைகளை நாளைய தலைமுறை விடிவெள்ளிகளாக மாற்ற இந்த கட்டற்ற செயலியை கொண்டு கற்பிக்க தொடங்குங்கள்.

செயலியின் இணைப்பு:f-droid.org/en/packages/net.gcompris.full/

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com