ஆகஸ்டு 25, 1991 ல் லினஸ் டோர்வார்ட்சு பின்வரும் மின்னஞ்சலை அனுப்பினார்.
இது ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
அப்போது ரிச்சர்ட் ஸ்டால்மேன், GNU திட்டத்தை அறிவித்திருந்தார். GCC, Emacs ஆகிய கருவிகளையும் அளித்திருந்தார். மனிதர் யாவரும் பயனுறும் வகையில், மூல நிரலையும் பகிர்ந்தார். மூல நிரலை யாவரும் எங்கும் பகிரலாம், தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம், மாற்றங்களையும் பகிரலாம் என்ற உரிமையில் அவர் தொடங்கிய மென்பொருட்கள், மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன.
உலகெங்கும் இருந்து பலரும் இணைந்து, தமக்கும், பிறருக்கும் தேவையான பல்லாயிரம் மென்பொருட்களை உருவாக்கி, மூலநிரலுடன், பகிரும் உரிமையுடன், வழங்கத் தொடங்கினர். அப்போது, ஒரு முழு இயக்குதளம் உருவாகத் தேவையான அனைத்துமே கிடைக்கத் தொடங்கின. கெர்னல் எனும் ஒரு அடிப்படை பகுதி தவிர.
அப்போதுதான், லினஸ் எனும் கல்லூரி மாணவர், மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பினார். அவரது சிறு கெர்னல், மாபெரும் வரவேற்பைக் கண்டது. பலரும் இணைந்து, அதை மேம்படுத்த உழைத்தனர். மிக வரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையிலான கெர்னல் தயாரானது. அவர் ‘லினக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டார்.
அவரது லினக்ஸ் கெர்னலும் பிற GNU மென்பொருட்களும் இணைந்து ஒரு முழு இயக்குதளத்தை வழங்கின. அவையே தொடர்ந்து வளர்ந்து இன்று பல கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகின்றன.
இது மனித குல வரலாற்றில் மாபெரும் அறிவுப் புரட்சி ஆகும். கட்டற்ற மென்பொருட்கள், அலகின் பல கோடி மக்களுக்கு அறிவு, வேலை, சமூக பொருளாதார முன்னேற்றம் வழங்கி வருகின்றன.
குனு,லினக்ஸ் என்பது ஒரு இயக்குதளம் மட்டுமல்ல. இது ஒரு அன்புசார் வாழ்வியல் முறை. பிற மனிதர் மேல் பொழியும் மாபெரும் அன்பின் வெளிப்பாடே கட்டற்ற மென்பொருட்கள்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியை தொடங்கி, தொடர்ந்து வரும் ரிச்சர்டு ஸடால்மேன், லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் பல கோடி கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்.
சாதனை படைத்தவர்களை வாழ்த்தும்போது ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என வாழ்த்துவது தமிழ் மரபு. 14ம் நூற்றாண்டு தோன்றிய மணவாள மாமுனிகளை இருபத்தியோராம் நூற்றாண்டான இன்றும் ‘தண்தமிழ் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ எனப் போற்றி பாடிக்கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி உள்ளளவும் மணவாள மாமுனிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இது போல, கணினி உள்ள வரைக்கும், கட்டற்ற மென்பொருட்கள் இருக்கும். ‘இன்னும் பல்லாயிரம் நூற்றாண்டு இரும்’ என்று வாழ்த்துகிறோம்.