எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான அன்றாட எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் குறித்து நாம் விவாதித்து வருகிறோம்.
அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவியானது, நம் அன்றாட வாழ்வில் மிக மிக முக்கியமானது. நாம் அடிக்கடி மறக்கக்கூடிய, பேட்டரி வாங்கி போட சோம்பேறித்தன படக்கூடிய அனைவர் கைகளிலும் அன்றாடம் புழங்கும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான் ரிமோட்(Remote control).
வீட்டில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என அறிந்து கொள்வதற்கு யார் கையில் அதிக நேரம் ரிமோட் இருக்கிறதோ! அவர்தான் செல்வாக்கு மிக்கவர் என்ற ஒரு கருத்தும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக நிலவியது. பின்பு மொபைல் கருவிகளின் அசுர வளர்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி துறை சற்று டல்லாக தான் போய்க்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், டிவி ரிமோட்டு களுக்காக அனுதினம் பல குடும்பங்களிலும் உலகப் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேடிக்கைகள் மறுபுறம் இருக்கலாம். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் கண்டுபிடிப்புகளிலேயே மிக மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக டிவி ரிமோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
குடும்பங்களில் நடக்கும் உலகப் போர் மட்டுமல்ல! உண்மையில் இந்த ரிமோட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணமே இரண்டாம் உலகப்போர் தான். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நேசப்படைகளை தாக்குவதற்காக அச்சு நாடுகள் அகச்சிவப்பு ஒளி அலைகளைக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் தொழில்நுட்பத்தை தயாரித்து அதை கப்பல்களில் பொருத்தி நேசநாட்டு படை கப்பல்களை வீழ்த்தி இருப்பதாக வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அகச்சிவப்புக் கதிர்களை மீண்டும்,மீண்டும் எரிய வைத்து அதை சமிக்ஞைகளாக மாற்றி அனுப்புவதன் மூலம், அதற்குரிய ரிசீவர் அலைகளை ஏற்று அதற்குரிய செயலை செய்து விட முடியும்.
இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அந்த கோபுரத்தில் இருக்கக்கூடிய சிவப்பு,மஞ்சள்,பச்சை நிற விளக்குகளை எரிய வைப்பது தான் உங்களது வேலை. நான் கோபுரத்தின் கீழே நின்று கொண்டிருக்கிறேன். நான் இங்கிருந்து சொல்வது உங்கள் காதுகளுக்கு வந்து சேராது. அதற்கு பதிலாக என் கையில் இருக்கும் ஒரு டார்ச் லைட்டை ஒருமுறை எரிய வைத்து அனைத்தால்,சிவப்பு விளக்கை போட வேண்டும்.இரண்டு முறை எறிய வைத்து அணைத்தால் மஞ்சள் விளக்கு போட வேண்டும். மூன்று முறை அணைய வைத்து அணைத்தால் பச்சை விளக்கை போட வேண்டும் என்று முன்பே உங்களிடம் சொல்லி வைத்து விடுகிறேன். புற சூழல்களுக்கு ஏற்ப எந்த விளக்கை போட வேண்டுமோ அதற்கு ஏற்ற சமிக்ஞையை டார்ச் லைட் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை பார்த்து அதற்குரிய விளக்கை போடுகிறீர்கள்.
இங்கே நான்தான் ட்ரான்ஸ்மிட்டர்(Transmitter)நீங்கள்தான் ரிசீவர்(Receiver). நான்தான் ரிமோட் கருவி, நீங்கள் தான் தொலைக்காட்சி பெட்டி. படிப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும்,எளிமையாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அகச்சிவப்பு ஒளிகளை பூஜ்ஜியம், ஒன்று என மாற்றி மாற்றி சமிக்ஞைகளாக அனுப்பும் போது, அதை புரிந்து கொள்ளக்கூடிய தொலைக்காட்சியில் இருக்கும் ரிசீவர்கள் அதற்கு ஏற்றவாறு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுகிறது. நம்முடைய டிவி ரிமோட்டுகளில் ஒரு சிறிய பல்பு போல இருக்கும். ஆனால் எவ்வளவுதான் பட்டனை மாற்றி மாற்றி அழுத்தினாலும் அதிலிருந்து வெளிச்சம் வராது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!உண்மையில் அதிலிருந்து வரக்கூடிய அகச்சிவப்பு ஒளிக்கதிர்களை உங்கள் வெறும் கண்களால் பார்க்க முடியாது.

உங்கள் கையில் இருக்கும் மொபைல் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, கேமராவுக்கு நேராக வைத்து ரிமோட்டில் இருக்கும் பட்டன்களை தட்டினால் உங்களால் அகச்சிவப்பு நிற கதிர்களை பார்க்க முடியும். இதை வைத்து உங்களுடைய பழைய ரிமோட்டில் பேட்டரி இருக்கிறதா? அல்லது அதை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டதா? என்று கூட புரிந்து கொள்ளலாம்.

மற்றபடி இந்த சமிக்ஞைகளை முறையாக அனுப்புவதற்கான ஒரு உள்ளார்ந்த மின்சுற்றானது(Integrated chip)ஒவ்வொரு ரிமோட் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும். தற்காலத்தில் வரும் ரிமோட்டு கருவிகளை நாமாகவே புரோகிராம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமா, நான் சமீபமாக பயன்படுத்தி வரும் ஒரு டிடிஹெச்(DTH) ரிமோட் கருவியில், உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவி ரிமோட்டின் செயல்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதனால் செட்டாப் பாக்ஸ்க்கு தனி ரிமோட்டு டிவிக்கு, தனி ரிமோட் என கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை.
ஆனால், இந்த அகச்சிவப்பு நிறக்கதிர்களில் சிக்கலும் இருக்கிறது. உதாரணமாக நான் கோபுரத்தை நோக்கி டார்ச் லைட்டை அடிக்கிறேன் என்றால் அது உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.அதை விடுத்து நான் ஏதோ ஒரு திசையில் டார்ச் லைட்டை அடித்தால் உங்களுக்கு எப்படி தெரிய வரும். ஒரே நிலை தான் டிவி ரிமோட்டுகளுக்கும் அகச்சிவப்பு ஒளிகளை டிவியில் இருக்கும் ரிசீவருக்கு நேராக அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போது தான் சரியான சமிக்ஞையை பெற்று அதற்குரிய செயலானது நடைபெறும்.
ஆனால், தற்காலத்தில் இருக்கும் ரிமோட்டு கருவிகள் ப்ளூடூத்(Bluetooth remote)தொழில்நுட்பத்தில் கூட இயங்க தொடங்கி விட்டன. இந்த இடத்தில் தகவலானது ரேடியோ அலைகளாக பகிரப்படுகிறது. இதனால் சுவற்றுக்குள் ஊடுருவி கூட சமிக்ஞைகளை கொண்டு செல்ல முடியும். மேலும் அகச்சிவப்பு கதிர்கள் 30 அடி தூரம் சிறப்பாக பயணிக்கும் என்றால், இந்த ப்ளூடூத் அலைவரிசைகள் 100 அடிக்கும் அதிகமான தூரம் சுவற்றை ஊடுருவி கூட சென்று விடும். மேலும், நேராக தான் வைத்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையில்லை.

இதனால் இன்னும் சில ஆண்டுகளில் நான் முன்பு குறிப்பிட்ட அகச்சிவப்பு கதிர்களை(IR remote)அடிப்படையிலான டிவி ரிமோட்டுகள் மற்றும் இன்ன பிற ரிமோட் கருவிகள் காணாமல் போகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்காலத்திலேயே உங்களுடைய மொபைல் ஃபோன்களை கூட டிவி,ஏசி போன்ற கருவிகளுக்கு ரிமோட் ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், என்னதான் இருந்தாலும் அகச்சிவப்பு கதிர்களை கொண்டு பயன்படுத்தப்படக்கூடிய ரிமோட் தொழில்நுட்பமானது இன்ன பிற இடங்களில் கூட பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தெர்மல் இமேஜிங் கேமராக்களில் இந்த அகச்சிவப்பு ஒளிக்கதிர்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும்,வானியல் சார்ந்த துறைகளில் கூட இதன் பயன்பாடு நீடிக்கிறது. சரி என்ன தான் இருந்தாலும், ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதேநேரம் அடுத்த தடவை உங்களுடைய டிவி ரிமோட் வேலை செய்யவில்லை! என்றால் தேவையின்றி அதோடு குத்து சண்டை போடுவதை விட்டுவிட்டு, உங்கள் மொபைல் போனை எடுத்து கேமராவை ஓபன் செய்து ரிமோட் பட்டன்களை அடித்து பாருங்கள். பேட்டரி தீர்ந்து விட்டது என்பதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்.
மற்றும் ஒரு சுவாரசியமான அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன். (லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையும், விரைவில் வெளியாகும்)
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com