எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், கடந்த மின் தூண்டிகள்(inductors )குறித்து பார்த்திருந்தோம்.
அகமின் தூண்டல் நிகழ்வு குறித்தும் அந்த கட்டுரையில் விவாதித்திருந்தோம்.
ஒரு கம்பிச்சுருளின் வழியாக மின்சாரம் பாயும் போது, அதில் காந்தப்புலம்(magnetic field)ஏற்படுகிறது.
இதன் அடிப்படையிலேயே, நாம் அனுதினமும் வீடுகளில் பயன்படுத்தும் மின் தூண்டல் அடுப்புகள் அதாவது இன்டக்ஷன் அடுப்புகள் செயல்படுகின்றன.
அதனுடைய செயல்பாடு விதம் குறித்து தெளிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி கட்டுரைகளை பார்வையிடவும்.
இன்றைக்கு சுமார் ஆயிரம் ரூபாயிலிருந்து இன்டக்ஷன் அடுப்புகள் கிடைக்க தொடங்கிவிட்டன.
நம் வீடுகளில் பெரும்பாலும் இதை கரண்ட் அடுப்பு என அழைப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால் உண்மையில் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும்(electric stove), இண்டக்ஷன் அடுப்புகளுக்கும் முதலில் வித்தியாசம் இருக்கிறது.
எலக்ட்ரிக் அடுப்புகள் என்பது தாமிர சுருள் கம்பியின் மீது நேரடியாக மின்சாரம் வழங்கப்படும் போது! அந்த கம்பி சூடாகி அந்த வெப்பமானது பாத்திரத்திற்கு கடத்தப்படுகிறது.
அதே நேரம், இன்டக்சன் அடுப்புகள் முழுக்க முழுக்க மின் தூண்டியின்(inductors) அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
உங்களுக்கு புரியும் படியாக சொல்ல வேண்டுமென்றால், எலக்ட்ரிக் அடுப்புகள் மின்தடையின்(resistor) அடிப்படையில் செயல்படுகின்றன.
அதேநேரம், இண்டக்ஷன் அடுப்புகள் மின் தூண்டியின் அடிப்படையில் செயல்படுகின்றன .
இன்றைய கட்டுரையில், நாம் இண்டக்ஷன் அடுப்புகள் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.
இப்பொழுது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான இன்டக்சன் அடுப்புகளில், எலக்ட்ரானிக் மின்சுற்றுகளே(electronic circuits) பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, இவற்றில் பாதுகாப்பு அதிகம். மேலும், தேவையற்ற மின்னதிர்ச்சிகளை தவிர்க்க முடியும்.
சரி! கம்பிச்சுருளின் ஊடாக மின்சாரம் பாயும் போது காந்தபுரம் ஏற்படுகிறது, என பார்த்திருந்தோம். அவ்வாறு, ஏற்படக்கூடிய காந்தபுலமானது அதன் அருகில் இருக்கும் பொருட்களோடு வினைபுரிய தொடங்குகிறது.
அருகில் ஒரு இரும்பு பாத்திரம் இருந்தால், அந்த இரும்பு பாத்திரத்திற்கும் காந்தப்புலம் கடத்தப்படும்.
ஆம்! மின்மாற்றிகள் குறித்து கூறியிருந்தேன் அல்லவா? ஒரு மின்சுற்று ஊடாக மின்சாரம் பாயும் போது, அதே அளவான மின்சாரம் எவ்வித தொடர்பும் இன்றி அடுத்த சுற்றுக்கு கடத்தப்படுகிறது! என்று. அதேபோல தான், கம்பிச்சுருளில் உருவாக கூடிய காந்தபுலம் பாத்திரத்திற்கு கடத்தப்படுகிறது.
நீங்கள், இன்டக்சன் அடுப்புகளை கடைகளில் சென்று வாங்கும்போது கடைக்காரர்கள் சொல்வார்கள்? “அலுமினிய பாத்திரங்களை, மண்பானைகளையோ இந்த இன்டக்சன் அடுப்புகளில் பயன்படுத்த முடியாது” என்று.
ஆம்! நீங்கள் கணித்தது சரிதான் அலுமினிய பாத்திரங்கள் காந்தத்தில் ஒட்டுவதில்லை. காந்தத்தோடு ஒட்டக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை மட்டுமே இண்டக்ஷன் அடுப்புகளில் பயன்படுத்த முடியும்.
இல்லையென்றால், குறைந்தபட்சம் அந்த பாத்திரத்தின் அடிப்பாகமாவது அத்தகைய பொருட்களால் பூச்சு(coating) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதனால்தான், துரு புடிக்காத இரும்பு(stainless steel) மற்றும் உருக்கு இரும்பு( cast iron)ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பெரும்பாலும் இண்டக்ஷன் அடுப்புகளில் பயன்படுத்துகிறோம்.
இண்டக்ஷன் அடுப்புகளில் இருக்கும், சென்சார் போன்ற அமைப்பு அடுப்பின் மேலே பாத்திரம் வைக்கப்பட்ட பிறகே செயல்பட தொடங்கும்.
மிகவும் அதிவேகத்தில், காந்தப்புலம் அடுப்பில் இருந்து வெளியேற்றப்படும். அடுப்பின் மேல் புறத்தில் செராமிக் அல்லது உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்ட தகடு இருக்கும். அதையும், கடந்து கொண்டு பயணிக்கும் காந்தப்புலம், நேரடியாக பாத்திரத்தோடு வினைபுரிய தொடங்குகின்றன.
இதன் மூலமாக பாத்திரத்தில் ஒரு காந்தப்புலம் ஏற்படும்.
அதேநேரம், பாத்திரம் ஆனது அதிகப்படியான மின்தடை மதிப்பை கொண்டு இருந்தால் மட்டுமே மிகவும் எளிமையாக சமைக்க முடியும். உதாரணமாக, மிகவும் மெல்லியதான பாத்திரத்தை பயன்படுத்துவதை காட்டிலும், தடிமனான இரும்பு பாத்திரத்தில் மிகவும் வேகமாக சமையல் செய்து விட முடியும்.
இவ்வாறு வினைபுரியக்கூடிய காந்தப்புலமானது பாத்திரத்தில் இருக்கும் நீரோடும் வினைபுரிகிறது! இதனால் நீர் கொதிக்க வைக்கும் போது மிகவும் சீக்கிரமாக கொதித்து விடுகிறது.
அதேநேரம், பாத்திரம் அடிபாகத்தோடு மட்டுமே காந்தப்புலம் தொடர்பு கொள்ளும். இதனால், பாத்திரத்தின் ஓரங்களில் பெரும்பாலும் சூடு தெரிவதில்லை.
ஒருவேளை முழுவதுமாக பாத்திரம் கொதித்துப் போக வேண்டும் என்றால்! நீங்கள் பாத்திரத்தில் வைத்திருக்கும் நீர் ஆவியாகும் நிலையை கடந்திருக்க வேண்டும்.
தற்கால இன்டக்சன் அடுப்புகளில் அதற்காக கூட, சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.இதன் மூலம், மிக அதிகப்படியாக சூடாவது தடுக்கப்படுகிறது.
ஆனால், என்னதான் இருந்தாலும் மின்சாரத்தோடு விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும் . ஆம்! இன்டக்ஷன் அடுப்புகளில் இருந்து கூட மின்னதிர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேலும், இண்டக்ஷன் அடுப்பின் அடிபுரத்தில் இருக்கக்கூடிய விசிறி சரியாக சுற்றுகிறதா? என்று ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்துக் கொள்வது சிறப்பு
அவ்வாறு, அந்த விசிறி செயல்படவில்லை என்றால் இன்டக்ஷன் அடுப்பின் மின்சுற்று அனைத்தும் எரிந்து விடும்.
மேலும், இன்டக்சன் அடுப்புகளுக்கு மிக அருகில் உங்களுடைய மொபைல் ஃபோன்களை வைப்பதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், உங்களுடைய மொபைல் ஃபோன்களோடு காந்தப்புல தொடர்பை இன்டக்சன் அடுப்புகள் ஏற்படுத்திக் கொள்ள அரிதாக வாய்ப்புகள் இருக்கின்றன.
கவனமாக பயன்படுத்தினால்! நிச்சயமாக, திரவ எரிவாயு(LPG) சிலிண்டர்களை விடவும் பாதுகாப்பாக இன்டக்சன் அடுப்புகளில் சமையல் செய்து விட முடியும்.
மேலும், எரிவாயு சிலிண்டர்களை ஒப்பிடும்போது மின்சாரத்தின் விலையும் குறைவாகவே உள்ளது.
நான் எப்பொழுதும் கூறுவது போல, பயன்படுத்தும் போது! பாதுகாப்பை கையாளுவது எப்பொழுதும் முக்கியமானது.
எலக்ட்ரானிக்ஸை விளையாட்டாக கற்றுக் கொள்ளுங்கள்! ஆனால் விளையாட்டாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை தொடர்பான தகவல்களை பல இணையதளங்களில் இருந்து சேகரித்து இருக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து, உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர்.செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில்-02),
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
Website: ssktamil.wordpress.com