கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு,

கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு,

வணக்கம்.

உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை.

ஒரு பத்து சதம் பேருக்குதான் InfoSys, TCS, CTS போன்ற பெரு நிறுவனங்களில் Campus Interview ல் வேலை கிடைக்கிறது. மீதி 90% பேருக்கு SME என்ற Small Medium Enterprises, குறு, சிறு நிறுவனங்களே வாய்ப்பளிக்கின்றன.

இந்த மாதிரியான குறு, சிறு, மத்திய நிறுவனங்களில் Fresherகளை வேலைக்கு எடுப்பதால் வரும் சில பிரச்சனைகளைப் பார்ப்போமா?

1. பயிற்சி

 

பெரு நிறுவனங்கள் போல இவை Fresherகளின் பயிற்சிக்கென 6 மத காலம், இடம், ஆசிரியர்களைத் தர முடியாது.

ஓரிரு வாரங்கள் தருவதே கடினம்.

NIIT போன்ற பெரிய தனியார் கணிணி பயிற்சி நிறுவனங்களில் 6 மாத படிப்பிற்கு ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டும் மாணவர்கள், அதை விடுத்து சிறு நிறுவனங்களில் சேர்ந்தால், அதே பயிற்சிக்கு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்.

 

இலவச பயிற்சி, நகரின் மத்தியில் கட்டிடம், குளிர் சாதனம், கணிணி, இணையம், தடையற்ற மின்சாரம் தந்து, சம்பளமும் தருவதற்கு, நிறுவனங்கள் ஒன்றும் தொண்டு அமைப்புகள் இல்லையே.

 

சரி. அப்படியே சில மாத இலவசப் பயிற்சி அளித்தாலும், இந்த மாணவர்கள் தமது திறனை வெளிப் படுத்த, இன்னும் 6 மாதம் ஆகிறது. இப்படியே ஒரு வருடம் ஓடி விடுகிறது.

 

ஒரு வருடம் கழிந்த பின், நீங்கள் பெரு நிறுவனங்களில் வேலை செய்யம் நண்பரோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்.

 

“அவனுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கும் அதே அளவு சம்பளம், வெளிநாட்டு வாய்ப்புகள் வேண்டும்”

 

என்று கூறி, வேலையை விட்டு நீங்கி, வேறு நிறுவனம் போகின்றீர்.

 

உங்களை நம்பி, வாடிக்கையாளரிடம் புதிய பணிகளை ஏற்றுக் கொண்ட நிறுவனம், மீண்டும் பணியாளரை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதே போல் பலரும் செய்வதால்தான், நிறுவனங்கள் Fresher ஐ வேலைக்கு எடுக்க பயப்படுகின்றன.

 

ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள ஆட்களை வேலைக்கு எடுத்தால், ஓரிரு வாரங்கள் பயிற்சி மட்டுமே போதும். மூன்றாம் வாரத்திலேயே வேலை செய்யத் தொடங்கி விடுவர். நிறுவனத்திற்கும் உற்பத்தி கிடைத்துவிடும். இவர் ஒரே ஆண்டில் வேலையை விட்டாலும், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு இல்லை. ஒரு ஆண்டில் தந்த ஊதியத்திற்கு, தேவையான உழைப்பு கிடைத்திருக்கும்.

 

இதுவே Fresher ஐ வேலைக்கு எடுத்தால், பயிற்சியும் தந்து, சம்பளமும் தந்து, மிகவும் குறைந்த உற்பத்தி பெறும் நிலையே ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்வீர்கள்?

 

நாளை நீங்களே ஒரு நிறுவனம் தொடங்கினால், உங்களுக்கும் இதே நிலை தானே ஏற்படும்? எப்படி சமாளிப்பீர்கள்?

 

“எல்லாம் சரிதான். வேலை கிடைத்தால்தானே அனுபவம் பெறுவது. வேலையே கிடைக்காமலும், அனுபவம் இல்லாமலும் இருக்கிறோமே!” என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

 

2. அறிவும் திறமையும்

அறிவும் திறமையும் அனுபவமும் வேலையில் சேர்ந்த பிறகு மட்டுமே வருவது அல்லவே. நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியது. சரிதானே?

 

பெரும்பாலான மாணவர்கள் சொல்வது என்ன? “எனக்கு ஒரு வேலை கொடுங்கள். பிறகு நான் தேவையானதைக் கற்றுக் கொள்கிறேன். அதற்குப் பிறகு, திறமையை வளர்த்துக் கொள்கிறேன்”. உண்மைதானே.

 

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர் செல்ல கார் வாங்குகிறீர்கள். நல்ல கார் ஓட்டுனர் தேட்கிறீர்கள். நான் உங்களிடம் நேர்முகத் தேர்விற்கு வந்துள்ளேன். கார் டிரைவிங் வகுப்பு சென்றுள்ளேன். ஆனால் கார் ஓட்டிய அனுபவம் இல்லை.

 

“நான் பயிற்சி முடித்துள்ளேன். சான்றிதழ் வைத்துள்ளேன். ஆனால் அனுபவம் இல்லை. என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புது காரை என்னிடம் கொடுங்கள். முடிந்தால் சில மாதம் பயிற்சியும் கொடுங்கள். நன்கு கற்றுக் கொண்டு, பழகிய பின், பிறகு உங்கள் குடும்பத்தினரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்கிறேன்.”

 

இப்படி சொன்னால் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா? ஆனால் இப்படித் தானே நீங்களும் நிறுவனங்களிடம் சொல்கிறீர்கள்?

 

கார் ஓட்டிப் பழகவாவது சில லட்சங்களில் கார் வாங்க வேண்டும். கணிணியில் திறமையை வளர்க்க உங்களிடம் உள்ள கணிணியே போதுமே.

 

கிரிக்கெட்டில், மட்டையை சும்மாவே வைத்திருந்தால், சச்சினாக இருந்தாலும் நமக்கு கோபம் வருகிறதே. தொடர்ந்து ரன் எடுக்கவும், அடிக்கடி 4, 6 என அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் மட்டும் கணிணியை வைத்துக் கொண்டு, மென்பொருள் எதுவும் உருவாக்காமல், பாட்டு கேட்டு, படம் பார்த்து, விளையாடிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் அரட்டை அடிப்பீர்கள். என்ன நியாயம் இது?

 

3. நேர்முகத் தேர்வு

என் நிறுவனத்திற்கு ஒரு 100 Fresher வேண்டும் என விளம்பரம் செய்தால், குறைந்தது 1000 பேராவது Resume அனுப்புகின்றனர். எல்லா Resume களிலும் பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்.

 

“எனக்கு C, C++, Java, Oracle, HTML, CSS, Javascript, VB, DotNet, ASP, Photoshop, Windows போன்றவை தெரியும்.”

 

இவ்வாறு பல நுட்பங்கள் தெரிந்த Fresherகளை வைத்து எந்த வகை மென்பொருட்களையும் எளிதாக உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்போம்.

 

“வணக்கம் தம்பி!”

 

“வணக்கம் சார்!”

 

“உங்களுக்கு என்னென்ன தெரியும்?”

 

“கணிணியில் எல்லா நுட்பங்களும் தெரியும். C, C++, Java, DotNet, Oracle…இத்யாதி!”

 

“ஓ! மிக்க மகிழ்ச்சி! என்ன Project செய்துள்ளீர்கள்?”

 

“அதுவா சார்!. போன மாதம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினார்களே. அதற்கு தேவையான மென்பொருள் ஒன்று செய்தேன். Cloud Computing ல் Fuzzy Logic ம் Artificial Intelligence ம் சேர்த்து Android, iOS ல் இயங்கும்

 

ஒரு மென்பொருளை செய்துள்ளேன்.”

 

“மிக்க மகிழ்ச்சி! என் கடைக்குத் தேவையான ஒரு வரவு/செலவு மென்பொருளை நீங்களே செய்து தர முடியுமா?”

 

“நானேவா? அது கஷ்டம் சார். இன்னும் நிறைய படிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுங்கள். பிறகு படித்து பிறகு செய்து கொடுக்கிறேன்.”

 

“ஏன் உங்களால் முடியாது? நீங்களேதானே உங்கள் பெரிய Project ஐ செய்தீர்கள்? அதைப்பற்றி கூட விரிவாக விளக்கினீர்களே.”

 

“அதுவா சார். அது வந்து… அது வந்து… பிராஜெக்ட் நான் செய்யவில்லை.”

 

“பின்னே? யார் செய்தார்கள்?”

 

“தியாகராய நகரில் ஒரு பிராஜெக்ட் சென்டரில் 10,000 ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால் அது பற்றி எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை கொடுங்கள். தேவையானவற்றை நன்கு கற்று, பிறகு செய்து கொடுக்கிறேன்.”

 

இப்படித்தான் 100க்கு 95 பேர் சொல்கின்றனர். வெகு சிலரே தாமாக சொந்த பிராஜெக்ட் செய்து, புது மென்பொருள் உருவாக்கும் திறனையும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

 

இவ்வாறு அடிப்படை திறன் கூட இல்லாதவருக்கு எப்படி வேலை தருவது?

 

மருத்துவம் படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவரிடம் எப்படி நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்கள்?

 

அதே போல் தானே கணிணி படிப்பும்?

 

கல்வியில் மிகவும் அடிநிலை என்பது ITI. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால் கூட ITI சேரலாம். ITIல் வெல்டிங் பற்றி இரு ஆண்டுகள் படித்து முடித்த மாணவரிடம், நமது வீட்டிற்கு ஒரு இரும்பு கதவு செய்து தரச் சொல்லலாம். அவரும் மறுக்காமல் செய்து தருவார்.

 

12வது முடித்து, 3 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகள் கணிணி பற்றி விரிவாகப் படித்து வரும் கணிணி மாணவருக்கு மட்டும் ஒரு குட்டி மென்பொருள் கூட சுயமாக உருவாக்கத் தெரியாது.

 

எதுவுமே தெரியாமல் வரும் மாணவருக்கு வேலை தர நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. Reference, Campus Interview, Off Campus என வேலை கிடைப்போர் பத்து சதம் மட்டுமே. மீதியுள்ளோர் தமது திறமை மூலம் மட்டுமே வேலை தேட வேண்டியுள்ளது.

 

4. அனுபவம்/திறமை பெறுவது எப்படி?

ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டு, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவது. “இந்திய கிரிக்கெட் குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்!.. பிறகு விளையாட்டை கற்றுக் கொண்டு, பிறகு சிறப்பாக விளையாடி, பிறகு இந்தியாவிற்கு கோப்பை வாங்கித் தருகிறேன்.” என்று யாருமே சொல்வதில்லை.

 

கிரிக்கெட்டில் திறமை பெற, மட்டையை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். கணிணியில் திறமை பெற, பயிற்சி செய்தாலே போதுமே.

 

கணிணி மென்பொருள் உருவாக்கும் அனுபவம் பெறத் தேவையானவை ஒரு கணிணியும், இணைய இணைப்பும் மட்டுமே.

 

பின்வரும் எல்லாவற்றையும் செய்தாலே அனுபவம் தானாய் கிடைக்கும்.

 

1. Syllabus தாண்டி கற்றுக் கொள்க.

GNU/Linux, PHP, Python, Ruby, MySQL என பல நுட்பங்களை கற்றுக் கொள்க.

 

2. Tech குழுக்களில் சேர்க.

ஊரில் உள்ள Tech குழுக்களில் சேர்க. குழு இல்லையென்றால் தொடங்குக. அடிக்கடி சந்தித்து புது விஷயஙுகளை கற்றுக் கொள்க.

 

3. GNU/Linux பயன்படுத்துக.

உலகமே GNU/Linux ஐ விரும்பி வரவேற்கிறது. உங்களிடம் உள்ள விண்டோஸை அழித்துவிட்டு, உபுண்டு, டெபியன், ஃபெடோரா என ஏதாவது ஒரு லினக்ஸை நிறுவுங்கள். Commandline பயன்படுத்தும் போது எக்கச்சக்க புது விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

 

4. மென்பொருள் மூல நிரல் படியுங்கள்.

குனு/லினக்ஸில் எல்லா மென்பொருட்களுக்கும் source code கிடைக்கும். அவற்றை பதிவிறக்கம் செய்து சும்மாவேனும் திறந்து படித்துப் பாருங்கள்.

 

5. மென்பொருள் உருவாக்குங்கள்.

சின்ன கால்குலேட்டர் செய்யுங்கள். முகவரிப் புத்தகம் ஒன்று. இணைய இணைப்பை சோதனை செய்யும் கருவி, ஒரு அலாரம், ஒரு Backup செய்யும் மென்பொருள், Web scrapping மென்பொருள் என குட்டி குட்டியாக பல மென்பொருள் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஓரிரு நாளே ஆகும்.

 

பிறகு உங்களை சுற்றியுள்ளோரிடம் கேட்டு, அவர்களுக்கு தேவையான மென்பொருளை செய்து கொடுங்கள். கடைகளுக்கு தேவையான Billing, Accounts, Attendance என பல மென்பொருட்கள் தேவைப்படும். அவற்றை இலவசமாகவே செய்து கொடுங்கள்.

 

6.Version Control கற்றுக் கொள்க.

Source Code ஐ பலருடனும் இணைந்து பகிர்ந்து வேலை செய்ய Version Control System பயன்படுகிறது. Subversion (SVN), GIT கற்றுக் கொள்ளுங்கள். github.com -ல் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி, உங்கள் மென்பொருட்கள் யாவற்றையும் இங்கு சேருங்கள். பிறர் உருவாக்கிய மென்பொருட்களுக்கும் பங்களியுங்கள். உங்கள் Facebook Profile ஐ விட github Profile ஏ உங்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும்.

 

7. கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களியுங்கள்

உங்களுக்கு பிடித்தமான கட்டற்ற மென்பொருளுக்கு பங்களியுங்கள். ஒரு வரி நிரல் தந்தாலும் அது பெரிய விஷயமே. நிரல் மட்டுமின்றி ஆவணமாக்கம், படம், IRC, Forum, Mailing list ஆகியவற்றில் உதவி, Packaging, பரப்புரை செய்தல், மொழிமாற்றம் செய்தல் என ஏதாவது ஒரு வகையில் பங்களியுங்கள். “How to contribute to Open Source Software?” என்று தேடுங்கள். பிடித்த மொழியில், பிடித்த மென்பொருளுக்கு உதவுங்கள்.

 

8. வலைப்பதிவு எழுதுங்கள்

நீங்கள் செய்ய்ம் எல்லாவற்றையும் உங்கள் வலைப்பதிவில் எழுதுங்கள். தினமும் விடாமல் எழுதுங்கள். உங்களின் மிகச்சிறந்த Visiting Card ஆக உங்கள் வலைப்பதிவு அமையும்.

 

9. Resume-ல் இவை எல்லாவற்றையும் சேருங்கள்.

உங்கள் வலைப்பதிவு, உங்கள் github முகவரி, நீங்கள் பங்களிக்கும் கட்டற்ற மென்பொருட்கள், Syllabus தாண்டி நீங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்கள், இவற்றையெல்லாம் உங்கள் Resume-ல் சேருங்கள்.

 

10. வேலை கேட்காதீர்கள், Project Work கேளுங்கள்.

உங்களுக்கு தெரிந்தோரிடமெல்லாம் வேலை கேட்டு நச்சரிக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவைப்படும் மென்பொருளை செய்து தருவதாய் சொல்லுங்கள். Project Work ஆக செய்யுங்கள்.

 

படித்து முடித்து, பின் சும்மாவே வேலை மட்டும் தேடிக் கொண்டிருந்தால், ஒரு வருடம் ஓடியே விடும். அதற்குள் அடுத்த ஆண்டு மாணவர்கள் வெளியே வந்து Fresher ஆகி விடுவர். நீங்கள் Fresher ஆகவும் இல்லாமல், வேலையும் இன்றி, அனுபவமும் இன்றி மிகவும் குழம்பி நிற்பீர்.

 

இந்த ஒரு ஆண்டில், மாதம் ஒரு Project என பத்து, பன்னிரண்டு Projectகளை நீங்களே செய்து விட்டால், அதையே ஒரு ஆண்டு அனுபவமாக சொல்லலாம். Freelancer என்று தைரியமாக உங்கள் Resume ல் அறிவிக்கலாம்.

 

ஒரு ஆண்டு அனுபவம் உள்ளது என்றே அறிவித்து வேலை தேடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை. நிஜமாகவே அனுபவம் இருப்பதால், நேர்முகத்தேர்வும் மிக எளிதாகவே இருக்கும்.

 

பல Project கள் செய்யும் போது, வணிக ரீதியான மென்பொருட்களை உருவாக்கி பணமும் சம்பாதிக்கலாம். நல்ல குழுவினர் கிடைத்தால், தனியாக நிறுவனமும் தொடங்கலாம்.

 

உழைப்பும் திறமையும் இருந்தால் போதும். வானமே உங்கள் எல்லைதான்.

 

எனதருமை சச்சின்களே. 50களையும் 100களையும் சச்சின் குவித்தது போல, மென்பொருட்களை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களித்து, உங்கள் திறமையால், சுடர்விடும் சூரியனாய் மிளிருங்கள்.

 

வாழ்த்துக்கள்.

 

இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

 

ilugc.in

 

fsftn.org

 

opensource.com/life/13/4/ten-ways-participate-open-source

 

teachingopensource.org/index.php/How_to_start_contributing_to_or_using_Open_Source_Software

 

blog.smartbear.com/programming/14-ways-to-contribute-to-open-source-without-being-a-programming-genius-or-a-rock-star/

 

goinggnu.wordpress.com/2012/05/11/what-to-do-after-learning-python-programming/

 

உங்கள் கருத்துகளை இங்கே தெரிவியுங்கள்.

 

த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

17 thoughts on “கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

  1. Pingback: Mudukulathur » கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

  2. சிவம் சக்திவேல்

    அண்ணா, அருமை அருமை, நல்ல தெளிவான அலசல், விரிவான பார்வை, தன்னுடைய மைனஸ் என்ன என்றே தெரியாமல் தான்தோன்றித்தனமாக திரிபவர்கள் இந்த கட்டுரையை ஒருமுறை படித்தால்தான் அவர்கள் எங்கு தவறிழைத்து உள்ளார்கள் என்பது புரியும்… நன்றி அண்ணா…

    Reply
  3. srikanthlogic

    அருமையான பதிவு. என்னால் முடிந்த இன்னும் கொஞ்சம் இலவச அறிவுரை.

    நான் 4 ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science and Engineering) கற்ற பொழுது பாடத்திட்டத்திலும் / கல்லூரிக் கல்வியிலும் கண்ட குறை என்பது, நம் பாடதிட்டம் ஒரு மாணவரை நோக்கில்லாமல் கற்றுக் கொள்ள வைக்கின்றது. கற்றுத்தரும் ஆசிரியர்களும் (உரிய மதிப்புடன்), பாடத்தின் உலக வாழ்க்கை முக்கியத்துவத்தைச் சொல்லி பாடம் நடத்துவது குறைவே. நம் பாடதிட்டம் ஒரு கலவை.

    1. நிரலாளராக்கும் பாடங்கள் : C, C++, Java, C#, Web Programming மற்றும் Mobile Programming போன்ற பாடங்கள் நிரல் மொழிகளையும், Data Structures, Analysis of Algorithms போன்ற பாடங்கள் நிரல் யுத்திகளையும் கற்றுத் தரும் பாடங்கள். சில பாடங்களுடன் பயிற்சி பாடமும் (Lab subject) கூட வரும். ரிக்கார்டில் இருக்கும் 10 பயிற்சியை மட்டும் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதை விடுத்து பலவகை சவால்களுக்கு நிரல் எழுத முயலுங்கள். topcoder, hackerrank, ICPC programming contest, போன்ற தளங்களுக்குச் சென்று பயிற்சி எடுங்கள். திறமூல திட்டங்களுக்கும் பங்களியுங்கள். உங்கள் நிரலாக்கும் திறன் தானாக வளரும். குறைந்தபட்சம் தனியாக (தவறாகவாவது) நிரல் எழுதும் தன்னம்பிக்கை வரும்.

    2. கல்வியாளர் / ஆராய்ச்சியாளராக்கும் பாடங்கள் : Artificial Intelligence, Neural Networks, Theory of Computation, Compiler Design, Numerical Methods, Natural Language Processing போன்ற பாடங்கள் வருடக்கணக்கான ஆராய்ச்சியைப் பற்றியும், தற்காலத்தில் உள்ள அராய்ச்சி சவால்களையும் கற்றுத்தரும் பாடங்கள். இவற்றில் வரும் பல தலைப்புகளை நம்மால் எளிதாக நடைமுறையில் இருக்கும் விடயங்களுடன் பொறுத்திப் பார்க்க முடியாது. ஆனால் இவற்றின் தாக்கம் நாம் பயன்படுத்தும் நுட்பங்களில் ஒழிந்து கொண்டு இருக்கின்றன. முடிந்த வரை நடைமுறையில் இவற்றை பயன்படுத்தும் விடயங்களைப்பற்றி தெரிந்துகொண்டு ஒப்பிட்டு படித்தால் சிறிது ஆர்வம் கூடும். ஃபேஸ்புகின் HHVM என்ற அதிக செயல்திறன் கொண்ட PHP இயக்கக் கூடிய virtual machine பின்னால் Compiler Design அடிப்படைகள் உள்ளது. அதுபோல இப்பாடங்களைக் கற்கும்பொழுது பாடபுத்தகத்தைத் தாண்டி சமகால ஆராய்ச்சி முடிவுகள், தாக்கங்கள், பரிந்துரைகள் போன்றவற்றை தானகவே தேடி இற்றைப்படுத்திக் கொள்ளுங்கள். இத்துறைகளில் நாட்டம் அதிகமானால் மேற்படிப்பு படியுங்கள், திறமையானவர்களுக்கு ஆராய்ச்சித் துறையிலும், கல்வி துறையிலும் வாய்ப்புகள் ஏராளம். காலை 9 முதல் இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இந்த தலைமுறைக்கான நுட்பத்தில் வேலை பார்ப்பதை விட,2 மணி நேரம் பாடமெடுத்துவிட்டு, மனம்போல் உலகைப் புரட்டிப்போடும் ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகங்களிலோ, ஆராய்ச்சிக்கூடங்களிலோ சகல வசதிகளுடன் மன அழுத்தமில்லாமல் அடுத்த தலைமுறைக்காக வேலை பார்க்கும் வாழ்க்கையும் உங்களுக்காக காத்திருக்கின்றது.

    3. கோட்பாட்டுப் பாடங்கள் : Operating Systems, Database Management System, Computer Architecture, Computer Networks, Network Security, Software Engineering, Software Testing Microprocessors போன்ற பாடங்கள் கணினி உலகின் பல கட்டுமான கோட்பாடுகளை கற்றுத்தரும் பாடங்கள். இவை வரலாற்று முக்கியம்வாய்ந்த அடிப்படை கோட்பாடுகளையும், அதன் சார்ந்து வரும் நடைமுறை விடயங்களைக் கற்றுக் கொடுக்கும். பாடதிட்டம் சொல்லித்தரவில்லை என்றாலும், நம்மாலேயே கோட்பாடுகளையும் அதன் நடைமுறைத் தாக்கங்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். அனைத்து தலைப்புகளின் நிஜ உலகப் பயன்பாடுகள் பற்றி கூடுதலாக பயிலுங்கள். நீங்கள் நிரலாளராக முயன்றாலும் சரி, கல்வி/ஆராய்ச்சியாளராக விரும்பினாலும் சரி, நிரல் சம்மந்தமில்லாமல் பிற கணினித்துறை வேலையில் ஆர்வமிருக்கும் நபராக இருந்தாலும் சரி, அடிப்படை கோட்பாடுகள் அறிந்து கொள்வது அவசியம்.

    4. பல்துறைப் பாடங்கள் : இயற்பியல், வேதியியல், கணிதம், மின்னியல், மின்னணு பொறியியல், இயந்திரவியல் , சூழியல், மேலாண்மை, தொழில் தர்ம்ம, பொருளாதாரம், இன்னும் பல, இது போல 25% பாடங்கள் துறைக்கு நேரடி சம்மந்தமில்லாமல் இருக்கும். இது கணினித்துறைக்கு சற்றும் சம்மந்தமில்லாத குப்பை என்று தோன்றும். உங்கள் ஆர்வம் சார்ந்து அந்த மதிப்பீடு சரியாக இருக்கலாம், அல்லது பல்துறை நிபுணராக உதவும் பாடங்களாகவும் இருக்கலாம். உங்கள் சிறு வயது கனவு வக்கீல் ஆக வேண்டுமென்று இருந்திருக்கலாம், அப்பா சொன்னார் என்பதற்காக கணினி படிப்பை எடுத்தேன் என்றால், “அறிவுசார் சொத்துரிமை” பாடத்தை படியுங்கள், பின் அதில் மேற்படிப்பு படித்தால், இதே பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமை நிபுணருக்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு அடிப்படை மேலாண்மை, பொருளாதர அறிவு கண்டிப்பாக உதவும். இதுபோல் பல்துறைப் பாடங்களுக்கு சில பயன்கள் உள்ளன. சில சமயங்களில் பாடத்திட்டத்தின் பளுவைக் குறைக்கவும் செய்யும்.

    மென்பொருள் துறையும் கல்வி போல் கலவைதான். அனைவரும் நிரலாளர்களாவது கிடையாது. அதைத் தாண்டி பல வேலைவாய்ப்புகள் உள்ளது. அது பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம். உங்களை எது ஈர்ப்பது என்று சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள், பிறகு அதில் அதீத ஆர்வம் செலுத்துங்கள், காதல் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.

    ஆனாலும் வாழ்க்கை வினோதமானது, இவற்றையெல்லாம் செய்து கூட தோல்வி வர நேரிடும். அப்பொழுது நான் சுஜாதாவின் வரிகளை உங்களுக்கு சொல்வேன். “வெற்றி, வெற்றி மட்டுமே வாழ்க்கையாக இருந்தால், மனுஷன் தலை வெடிச்சு செத்தே போயிருப்பான். சின்ன்ச்சின்ன தோல்வி வேண்டும், தோல்விகளை மதிக்க வேண்டும். ” நான் கல்லூரியில் படிக்கும் பொழுது, மேற்க்கூறிய வற்றில் சில வடயங்களை செய்ய முயன்றும்,பல தோல்விகளை கண்டு, பின் எழுந்தவன் தான். உங்களாலும் தோல்விகளிடமிருந்து எழுந்து வர முடியும்.

    Reply
    1. எழில்

      இது மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

      Reply
  4. Hariharasuthan Mk

    Plz share and write this same article in english too , this article will be really useful for all

    Reply
  5. ஷேக்

    மிக மிக அருமையான பதிவு.
    இது போன்ற மாணவா்கள் நிறைய போ் உள்ளாா்கள். அவா்களுக்கு நீங்களே ஒரு தலைப்பை கொடுத்து புராஜக்ட் செய்ய சொன்னால் அவா்களின் அறிவு மேம்படுமே?

    Reply
    1. AshokR

      Last year I guided two project teams (4 ECE and 2 CSE students) of AVC College of Engineering, Mayiladuthurai to complete the following projects successfully:

      1. Develop GPS passive tracking using local hardware for a transport operator using open source OpenGTS. Students had to do localization and customization. This included some level of code changes to import data in the format generated by the local data logger into the system as well as customizing the web site to the brand of the transport operator. The localization involved switching the language to Tamil and translating some of the strings.

      2. Implement a PC-based Point of Sale (POS) system using local hardware for a retail shop using open source uniCenta oPOS. Students had to do some level of localization and customization. They loaded the system with the inventory of the shop. They used a trial version of a barcode generator to print the labels as well as used a local USB scanner to scan the labels at the point of sale to match up with the item in stock. They also configured local taxes on the invoice and they customized the reports for the local shop. They learnt how to switch to Tamil and how to translate the strings into Tamil. However, they ran out of time to do the translation.

      The following project is suitable for Mechanical Engineering students, if anyone is interested:

      Create a 2D drawing using open source LibreCAD, save it as a dxf file, generate gcode and demonstrate cutting in a CNC Router. Companies that have any CNC machine will be interested. They can use this open source software to supplement expensive software such as Autocad. A company that has a CNC Router is preferable because we can use cheaper materials like wood / thermocole for trial cutting.

      Reply
  6. Jaga Deesan

    அண்ணா, மிக அருமையான விளக்கம்…!!!

    Reply
  7. Thiagarajan

    Thankyou for a Beautiful article on கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்? , Sharing your link with my students at FB
    The very important message on “What is Expected” will give a new energy to the students. The “real life examples” will reach the students and they will realize the need for commitment.
    My best wishes for your continuing guidance in the field of Gnu/Linux and Tamil Heritage
    Have a nice day

    Reply
  8. Pingback: How students can prepare themselves for a computer career? | Going GNU

  9. ந.ர.செ. ராஜ்குமார்

    தெளிந்த வழிகாட்டுதலுடன் ஒரு அற்புதமான கட்டுரை. குறு நிறுவனங்களில் கூட version control குறித்து விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதார்த்தத்தை பொட்டில் அடித்தாற் போலச் சொல்லி இருக்கிறீர்கள். IT படிப்பை ITI படிப்புடன் ஒப்பிட்டது என்னை மிகவும் கவர்ந்தது.

    Reply
  10. Pingback: PHP தமிழில் – 23 – முடிவுரை – கணியம்

Leave a Reply to beer mohamedCancel reply