தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று?
2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல் 2015 வரை ஏழரை மடங்கு வளர்ச்சியடைந்தது. விற்பனை 200 கோடி ரூபாய்க்கு மேல். பணியாளர்கள் 100 க்கும் மேல். நியூயார்க் மாநகர மத்தியில் 50000 சதுர அடிக்கு மேல் தொழிற்சாலை.
அவர் கல்லூரியில் பயின்ற திறன்களை எல்லாம் நடைமுறையில் செய்து பழகிக் கொண்டார். இசை இயக்கி, கூட்டிணைப்பி, சிறிய விளையாட்டுப் பொம்மைகள் போன்ற அன்றாடப் பொருட்களைத் தேவையான சாமான்களை வாங்கித் தயாரித்தார். அவற்றை எவரும் தயாரிக்குமாறு எளிதான பயிற்சிகளை “நீங்களே செய்து பாருங்கள்” என்று தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டார். ஒரு பொருளைச் செய்யத் தேவையான பாகங்களைத் தொகுத்து விற்பனை செய்யப் பலர் மின்னஞ்சல்மூலம் கோரினர். ஆரம்பத்தில் அவருக்கு இதில் நேரம் வீண்டிக்க விருப்பமில்லை. ஆனால் போகப்போக அவருடைய ரசிகர்கள் விருப்பத்திற்கிணங்க பாகங்களைத் தொகுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொறியியலில் அதிகமானவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் இலக்கு. இவர்கள் விற்பனை செய்யும் திட்டத் தொகுப்புகள் வெறும் கல்வி பயிற்சிகள் இல்லை, நடைமுறைக் கருவிகளைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.