ஐக்கிய நாடுகள் திறந்த மூலக் கருவி போட்டியில் இந்தியர் முதல் பரிசு

ஐ.நா. பொதுச்சபை தீர்மானங்களை பயனர்கள் எளிதாகத் தேடிப் பார்க்கவும் உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் வகைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கூடிய ஒரு திறந்த மூலக் கருவியை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் ஒரு இந்திய மென்பொருள் பொறியாளர் முதல் பரிசு வென்றுள்ளார்.

ஒரு தொழில்முனைவரான அப்துல்காதிர் ராஷிக் (Abdulqadir Rashik) உருவாக்கிய ‘உலகளாவிய கொள்கை (Global Policy)’ என்ற திறந்த மூலக் கருவியின்  முன்மாதிரி பொது மக்கள், ஐக்கிய நாடுகள் துறைகள் மற்றும் உறுப்பு நாடுகளுடன் பகிரப்படும். இது அமெரிக்க வெளியுறவுத் துறையும் ஐ.நா. சபையும் இணைந்து நடத்தும் திட்டம். ஆகவே இவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அங்கீகாரத்தையும் பெறுவார். இவர் ஐ.நா. சபை போட்டிகளில் அடிக்கடி பங்களித்து முதல் பரிசும் பெற்றுள்ளார்.

“உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களை பாதிக்கும் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை ஐ.நா. பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றுக் கொள்ளுதலுக்கு ஆதரவாக பல நாட்டு தூதர்களும், கொள்கை வகுப்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் இந்த பரந்த தரவுதளத்தை எளிதாக மற்றும் சரியான நேரத்தில் அணுக  வழியிருக்க வேண்டும்,” என்று ஒரு வெளியுறவுச் செயலக அலுவலர் கூறினார்.