இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும்.
ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு அதனாலேயே, பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகிறது.
ஆனால், இன்றைக்கு நான் குறிப்பிடப் போகிற பாதுகாப்பு செயலி முழுக்க முழுக்க கட்டற்ற வகை தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
“keep alive” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலியின் பயன்பாடு என்னவென்றால், உங்களுடைய மொபைல் கருவியானது குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு எவ்வித பயன்பாடு என்று இருந்தால், நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய பாதுகாப்பு எண்ணிற்கு குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகளை தானாகவே மேற்கொள்ளும். உதாரணமாக,நீங்கள் ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கிறீர்கள் அப்போது இந்த செயலியில் 15 நிமிடத்திற்கான டைமரை ஆன் செய்து வைத்து விட்டால், உங்களுடைய மொபைல் கருவியை நீங்கள் 15 நிமிடத்திற்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் வழங்கி இருக்கும் பாதுகாப்பு எண்ணிற்கு உங்கள் இருப்பிடம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும்,நீங்கள் விருப்பப்பட்டால் பாதுகாப்பு எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ளும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
தனியாக வெகு தூரம் பயணிப்பவர்கள் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலருக்கும் இந்த செயலி பயன்படும். தாமாகவே உங்களுடைய இருப்பிட தகவல்களை நம்பகமான பாதுகாப்பு எண்ணிற்கு பகிர்வதால், உங்களுடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மேலும்,இது கட்டற்ற செயலி என்பதால் உங்களுடைய தகவல்கள் எதுவும் திருடப்படாது.
அடிப்படையில், இந்த செயலி எவ்வாறு வேலை செய்கிறது என்றால் உங்களுடைய மொபைல் கருவி குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செயல்படாமல் இருந்தால், நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய மொபைல் எண்ணிற்கு உங்கள் இருப்பிடத்துடன் கூடிய அனுப்புகிறது. இதன் மூலம், உங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று பிறர் புரிந்து கொள்ள முடியும்.
மேலும், இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் தங்களுடைய மொபைல் கருவியில் இந்த செயலியை நிரூவி வைத்திருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உங்களுடைய மொபைல் பயன்பாடு இல்லாமல் இருந்தால், உங்களுடைய தந்தை அல்லது உறவினருக்கு உடனடியாக உங்கள் இருப்பிடம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு இருந்தாலும் கூட, இந்த குறுஞ்செய்தியை காவல்துறைக்கு பகிர்வதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை சரியாக கண்டறிந்து உங்களை காப்பாற்ற முடியும்.
மேலும், வயதான பெற்றோர், சிறுவயது குழந்தைகள் என அனைவர் கையில் இருக்கும் மொபைல் கருவிகளிலும் இந்த செயலி கண்டிப்பாக நிறுவப்பட்டு இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்று ஒருமுறை கற்றுக் கொண்டால் நிச்சயமாக பயனுள்ள செயலியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தனிப்பட்ட முறையில் இந்த செயலியின் பயன்பாடு குறித்து இரண்டு வாரங்கள் நான் பரிசோதித்து பார்த்தேன். அதற்குப் பின்பே இந்த கட்டுரையை எழுதுகிறேன். மேலும் நான் பயன்படுத்தி பார்த்த அனுபவங்களை உள்ளடக்கிய சில புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.




இந்த செயலியானது fdroid தளத்தில் கிடைக்கிறது. அதற்கான இணைப்பையும் கீழே வழங்கியிருக்கிறேன்.
f-droid.org/en/packages/io.keepalive.android/
மற்றும் ஒரு பயனுள்ள கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :
ssktamil.wordpress.com