சில்லுவின் கதை 12. ஒரு நல்ல பொறியாளர் மேலும் இருவரைக் கொண்டு வரட்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

சீன அறிவியலாளர்கள் ஆராய்ச்சியை விட்டு வயல்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது

0:00 தைவான் என்பது சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மிகச் சிறிய தீவு. ஹாங்காங் அதற்கு அருகில் உள்ள இன்னும் சிறிய புள்ளி. இவற்றைப் பார்த்தால் நமக்கு என்ன தெரியவரும்? ஒரு நாட்டின் அளவு முக்கியமல்ல, அங்கு வாழும் மக்களின் உந்துதலும், முனைப்பும் தான் முக்கியம். சீனாவில் 1949 இல் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். 1963 இல் அவர்கள் முதல் ஒருங்கிணைந்த மின்சுற்றை (integrated circuit) உருவாக்கினர். சீனத் தலைவர் மாவோ சேதுங்கின் (Mao Zedong) கொள்கை, கல்வியைக் குறைத்து அனைவரையும் வயல்களில் வேலை செய்ய வைப்பது. அவர்கள் தன்னிறைவை மையமாகக் கொண்டு வெளிப்புறப் பொருட்கள் மற்றும் கருத்துக்களைத் தவிர்த்தனர். அவர்கள் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்தனர். மேம்பட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சீன விஞ்ஞானிகள் மனம் வருந்தினர். இது 1990 க்கு முன்பு சீனாவின் நிலை.

4:15 இதே காலகட்டத்தில் ஹாங்காங்கில் நிலைமை வேறுபட்டது. ஹாங்காங் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த ஒரு சீனப் பகுதி. அவர்கள் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்திற்காக சில்லுகளைத் தொகுத்துக் கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து வருபவர்கள். டிரான்சிஸ்டரின் இணைக் கண்டுபிடிப்பாளரான ஜான் பார்டீன் (John Bardeen) 1975 இல் சீனாவிற்குப் பயணம் சென்றார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் உலகின் பிற பகுதிகளுக்கும் கல்வியை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது.

நவீனமயமாக்கலுக்கான தீவிர மாற்றங்களை அவர் ஒற்றை ஆளாகச் செய்தார்

6:05 தலைவர் மாவோ (Chairman Mao) 1976 இல் காலமானார். டெங் சியாவ்பிங் (Deng Xiaoping) தலைவரானார். அவர் நவீனமயமாக்கலை ஆதரித்தார். தனி ஒருவராக அவர் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தார். அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியக் கொள்கைகளாயின. “முதலில் இறக்குமதி செய், அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள், பின்னர் சீனாவிலுள்ள பிரம்மாண்டமான தொழிலாளர் படையைப் பயன்படுத்தி அதையே உற்பத்தி செய், அதன் பிறகு ஏற்றுமதி செய்” என்பது அவரது கொள்கை. எனினும், இதில் குறைபாடு என்னவென்றால் அடிப்படை ஆராய்ச்சியை அரசாங்க உத்தரவால் மட்டுமே உருவாக்க முடியாது.

ஒரு நல்ல பொறியாளரைக் கொண்டு வாருங்கள் அவர்கள் மேலும் இருவரைக் கொண்டு வரட்டும்

8:00 நமது அடுத்த அறியப்படாத நாயகன் ரிச்சர்ட் சாங் (Richard Chang). இவர் சீனாவில் பிறந்து தைவானில் வளர்ந்தார். இவர் தைவானில் எந்திரவியல் பொறியியல் படித்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று மின்பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்து டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்தார், அவரது முதல் மேலாளர் ஜாக் கில்பி (Jack Kilby). இவர் முழுத் தொழிற்சாலை செயல்முறையையும் எப்படி இயக்குவது என்று கற்றுக்கொண்டார். மேலும் உலகம் முழுவதும் பல பெரிய அளவிலான வில்லைத் தொழிற்சாலைகளை நிறுவ உதவினார். இவர் 2000 இல் சீனாவுக்குத் திரும்பி ஷாங்காயில் SMIC (Semiconductor Manufacturing International Corporation) நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் GS (Global Semiconductors), மோட்டோரோலா மற்றும் தோஷிபாவிடமிருந்து 1.5 பில்லியன் டாலர்களைத் திரட்டினார். இவரது குறிக்கோள் மிகவும் எளிமையானது. சீனாவில் TSMC மாதிரியைப் பின்பற்றி வில்லைகளைத் தயாரிப்பது. நாம் தற்போது இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதையே செய்ய முயற்சிக்கிறோம். SMIC-ன் முழக்கம், “ஒரு நல்ல பொறியாளரைக் கொண்டு வாருங்கள், அந்த நல்ல பொறியாளர் இன்னும் இரண்டு நல்ல பொறியாளர்களைக் கொண்டு வரட்டும்” என்பது. இந்த வழியில் பல நல்ல பொறியாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சீனாவுக்குத் திரும்பி வந்தனர்.

SMIC குறுகிய காலத்திற்குள்ளேயே TSMC-க்கு கடும் போட்டியைக் கொடுத்தது

13:30 SMIC குறுகிய காலத்திற்குள்ளேயே, TSMC-க்குக் கடும் போட்டியை கொடுத்தது. வரி விலக்குகள் உட்பட முழு அரசாங்க ஆதரவும் SMIC-க்குக் கிடைத்தது. ரிச்சர்ட் சாங்கின் தொலைநோக்குப் பார்வை வெறும் TSMC-ஐ பின்பற்றுவதோடு நின்றுவிடாமல், அதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேறுவது. 2004 ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) SMIC பட்டியலிடப்பட்டது. SMIC, TSMC, சாம்சங், UMC மற்றும் CSM (Chartered Semiconductor Manufacturing) போன்ற நிறுவனங்களுக்கு நல்ல போட்டியை அளித்தது. இந்தப் போட்டியின் விளைவாக, தொழிற்சாலைகளின் செலவு மேலும் குறைந்து, புனைவு ஆலை இல்லாத நிறுவனங்கள் (fabless) செழித்தன.

தமிழாக்கம்: இரா. அசோகன்