உபுன்டுவில் லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம்.
வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view)
இந்த மென்பொருளில் படத்தில் இடது பக்கம் உள்ள செங்குத்து வீழல் என்ற வரித்தோற்றம் தவிர படத்தில் வலது பக்கம் உள்ள சம அளவுத்தோற்றங்களையும் வரைய முடியும்.
துணைத் தொகுப்புகள் (Blocks)
நம்முடைய வரைபடங்களில் சில துணை தொகுப்புகளை அடிக்கடி வரைய வேண்டி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றைத் தனியாக துணை தொகுப்புகளாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான இடங்களில் அப்படியே நுழைத்துக் கொள்ளலாம்.
துணைத் தொகுப்புகளைப் பலர் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். பொதுப்பொறியியலில் சாளரங்கள் மற்றும் கதவுகள் இம்மாதிரி பதிவிறக்கம் செய்து வீட்டுக்கான வரைபடத்தில் பல இடங்களில் திரும்பத் திரும்ப நுழைத்துப் பயன்படுத்துகிறார்கள்.. எந்திரவியல் பொறியியலிலும் தலையணைத் தாங்கி (pillow block) போன்ற துணைத் தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அடுக்குகள் (Layers)
பணிமனையில் உற்பத்திக்கு கொடுக்கவேண்டிய வரைபடங்களில் உருவரைவைத் தவிர அளவுகள், அவற்றுக்கான பொறுதிகள் (tolerances) மற்றும் உற்பத்திக்கான பல குறிப்புகள் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே உருவரைவு மிகவும் நெரிசலாக ஆகிவிடும். இம்மாதிரி நெரிசலான உருவரைவை ஒழுங்குபடுத்த நாம் அடுக்குகள் என்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக உருவரைவை ஒரு அடுக்கிலும், அளவுகளை மற்றொரு அடுக்கிலும், குறிப்புகளை மூன்றாவது அடுக்கிலும் வைக்கலாம். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தலாம். ஒரு அடுக்கில் வேலை செய்யும் பொழுது, இடைஞ்சல் இல்லாமல் இருக்க, மற்ற அடுக்குகளை மறைத்து வைக்கலாம். கடைசியாக அச்சடிக்கும் போது எல்லா அடுக்குகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
துல்லியமாக இடங்களைத் தேர்ந்தெடுத்தல் (Snapping)
சுட்டியைப் பயன்படுத்தும் போது துல்லியமாக இடங்களைத் தேர்ந்தெடுக்கும் திறனை இது வழங்குகிறது. கட்டத்தைப் பயன்படுத்தும் போது பயனர்கள் உருபொருட்களில் அல்லது வரைபட இடத்தின் வெவ்வேறு இடங்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு தேர்வு கருவிகள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவற்றுக்கு ஆணைகள் உள்ளன:
- ஒரு கட்டத்தின் குறுக்குவெட்டைத் தேர்ந்தெடு.
- ஒரு கோட்டின் இறுதிப் புள்ளிகள், ஒரு வட்டத்தின் கால்வட்டங்கள், ஒரு புள்ளி ஆகியவற்றைத் தேர்ந்தெடு.
- ஒரு வட்டம் அல்லது நீள்வட்டத்தின் மையத்தைத் தேர்ந்தெடு.
DWG கோப்பு வகைகளையும் திறக்க முடியும்
லிபர்கேட் உருவரைவுகளை சேமித்துவைக்க DXF என்ற கோப்பு வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இந்தக் கோப்பு வடிவம் திறந்த மூலம் மற்றும் வணிக மென்பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தக் கோப்பு வகையை எந்தவொரு கணினி வழி வடிவமைப்பு மென்பொருளிலும் திறக்க முடியும்.
ஆனால் உங்களுக்கு சில சமயம் DWG கோப்பு வகை திறக்க வேண்டி நேரலாம். இது ஆட்டோகேட் (AutoCAD) வணிக மென்பொருளின் தனியுரிமக் கோப்பு வகை. ODA (Open Design Alliance) 1200 நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்ப இலாபநோக்கற்றக் கூட்டமைப்பு. சமீப காலங்களில் இந்தக் கோப்பு வகை பற்றிய விவரங்கள் ODA மூலமாகவும் கிடைக்கிறது. ஆகவே DWG கோப்பு வகைகளையும் லிபர்கேட் ஓரளவு திறக்க முடியும்.
ODA கோப்பு மாற்றி (File Converter)
அப்படி ஒருக்கால் சில DWG கோப்புகளை லிபர்கேட் திறக்க இயலாவிட்டால் ODA கோப்பு மாற்றியில் DXF கோப்பு வகையாக மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் அந்தக் கோப்பை லிபர்கேட் நேரடியாகத் திறக்க முடியும்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: திட வடிவம் உருவாக்கும் உத்திகள் (Solid Modeling Techniques)
திட வடிவ ஆக்கம் (Constructive Solid Geometry – CSG). 2D வடிவத்திலிருந்து 3D மாதிரி உருவாக்கல். வடிவத்தோற்ற மாற்றங்கள் (Transformations on shapes).