ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது.


சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால் சில நூறு கட்டளைகள் குறித்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
பெரும்பாலான அனைத்து கட்டளைகளையும் ஒரே இணைய புத்தகத்தில் வழங்கி விடுவது எளிமையான காரியம் அல்ல. அதேபோல இணைய புத்தகமாக இருந்தாலும் கூட, நேற்று விட்டு சென்ற பக்கத்தை தேடி கண்டுபிடித்து படித்து செயலாற்றுவதில் சற்று சிக்கல் இருக்கும். மேலும், அவசரமாக சில கட்டளைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சிறிதே தடுமாற வேண்டி இருக்கும்.
ஆனால், இவை அனைத்திற்கும் தீர்வாக உங்கள் மொபைல் கருவிகளிலேயே பயன்படுத்தும் வகையில் கட்டற்ற லினக்ஸ் கட்டளைகள் அடங்கிய ஒரு செயலி எனக்கு கிடைத்துள்ளது. இந்த செயலியில் 6300+ லினக்ஸ் கட்டளைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் ஒருவரி விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது
வரும் நாட்களில் லினக்ஸ் புராணம் பகுதியில் கூட, இதில் உள்ள கட்டளைகளை பயன்படுத்தி உங்களுக்கு செயல்முறை விளக்கம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும்,இந்த செயலியில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்,இங்கே ஒரு தடவை நிறுவி விட்டால் போதும் ஒவ்வொரு தடவையும் இணைய நினைப்பு இருந்தால்தான் கட்டளைகளைப் படிக்க முடியும் என்றெல்லாம் இல்லை. முழுக்க முழுக்க இணையமற்ற சூழலில் இயங்கும் திறன் படைத்த செயலிதான் இது.
லினக்ஸ் குறித்த பல்வேறு விதமான குறிப்புகளும் கூட வழங்கபட்டு இருக்கிறது.
மேலும், இந்த செயலியின் அளவும் பத்து எம்பிக்குள் தான் இருக்கிறது என்பதால், உங்கள் மொபைல் கருவிகள் அதிகப்படியான இடத்தை அடைத்துக் கொள்ளுமோ என்கிற பயமும் தேவையில்லை. வழக்கம்போல, கட்டற்ற செயலி என்பதால் விளம்பரங்கள் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எவ்வித பயத்திற்கும் இந்த இடமில்லை. புதியதாக லினக்ஸ் கற்றுக் கொண்டிருக்கும், என்னை போன்ற உங்கள் நண்பர்களுக்கு இந்த செயலியை பகிருங்கள்.
ஒவ்வொரு நினைத்து பயனரின் மொபைல் கருவிகளிலும் நிச்சயம் இடம்பெற்று இருக்க வேண்டிய சிறந்த கட்டற்ற செயலி இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
செயலிகான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
f-droid.org/packages/com.inspiredandroid.linuxcommandbibliotheca
மீண்டும் ஒரு கட்டற்ற செயலியில் சந்திப்போம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com