லாஜிக் கதவுகள் : குறுங்தொடர் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் – 27

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகள் குறித்து 26 கட்டுரைகள் மூலம் நாம் விவாதித்திருக்கிறோம். இனிமேல் வரக்கூடிய சுமார் பத்து கட்டுரைகள் வரை, லாஜிக் கதவுகள் தொடர்பாக விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த 10 கட்டுரைகளையும் எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியோடு, குறுந்தொடராக வெளியிட நான் முடிவு செய்து இருக்கிறேன்.

என்னுடைய, இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

அடிப்படையில், நம்மில் பலரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து இருக்கக்கூடிய ஒரு பொதுவான தலைப்பு தான்! லாஜிக் கதவுகள்(logic gates). லாஜிக்(logic) என்றால் தமிழில் அளவையியல் என பொருள்படும். சில இடங்களில் இது ‘தர்க்கம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

சரி! இந்த லாஜிக் கதவுகள் என்றால் என்ன? இவை எங்கே பயன்படுத்தப்படுகின்றன? என்பது குறித்து எல்லாம் பார்ப்பதற்கு முன்பாக, லாஜிக் முறை(logic method)என்றால் என்னவென்று நாம் அறிந்திருக்க வேண்டும். அதை தான், இன்றைய அறிமுக கட்டுரையில் மிகவும் எளிமையாக உங்கள் மத்தியில் விளக்கவிருக்கிறேன்.

எப்பொழுதும், கொஞ்சம் லாஜிக்காக யோசிக்க வேண்டும் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட நம்மை அடிக்கடி குழப்பக் கூடிய லாஜிக்கல் திங்கிங் அடிப்படைக்கு அஸ்திவாரம் போட்டதே, இந்த லாஜிக் கதவுகள்(Logic gates) தான்.

பூலியன் இயற்கணிதம்(Boolean Algebra) அடிப்படையில் தான், இந்த லாஜிக் கதவுகள் இயங்குகின்றன. இந்த பூலியன் இயற்கணித முறையை தோற்றுவித்தவர் george boole என்பவர் ஆவர்.

1847 ஆம் ஆண்டு, The Mathematical Analysis of Logic (1847) எனும் புத்தகத்திலிருந்து தான் பூலியன் இயற்கணிதத்தின் பயணம் தொடங்கி இருக்கிறது.

பூலியன் இயற்கணிதத்தில் மொத்தமே இரண்டே இரண்டு வாதங்கள்(டூ arguments only) மட்டும்தான். ஒன்று மெய்(truth) மற்றொன்று பொய்(false).

என்ன? ஆதிகாலத்து சினிமா பட டயலாக் போல இருப்பதாக குழம்பி கொள்ளாதீர்கள்!. அடிப்படையில், ஒரு பொருள் இருக்க முடியும் அல்லது அந்த பொருள் இருக்காது என்பதுதான் பூலியன் இயற்கணிதத்தின் அடிப்படை.

நீங்கள் மின்சாரத்தை வழங்கினால் மின் விளக்கு எரியும்(truth),மின்சாரத்தை வழங்காவிட்டால் மின் விளக்கு எரியாது(false) இதுதான் பூலியன் இயற்கணிதம்.

வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் இருக்கும்போது ஒளி வெளிப்படும்(truth), நட்சத்திரங்களே இல்லை என்றால் ஒளி நிச்சயமாக இருக்காது(false) இதுதான் பூலியன் இயற்கணிதம்.

காற்று வீசும் போது கிளைகள் அசையும்(truth),காற்று வீசாத போது கிளைகள் அசையாது(false) இவ்வளவுதான் பூலியன் இயற்கணிதம்.

மனம் இருந்தால் அதனுள் எண்ணங்கள் இருக்கும், மனம் என்று ஒன்று இல்லாது போனால் எண்ணங்களே இருக்காது! இதுவும் பூலியன் இயற்கணிதம் தான்.

சரி! கவிஞர் பாணியில் விளக்கியது உங்களுக்கு எளிமையாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

முடிவாக ஒரே வரியில் சொல்லப்போனால்,

உள்ளதை உள்ளபடி கூறுவது பூலியன் இயற்கணிதம்.

இங்கே உங்களுக்கு இரண்டே இரண்டு வாதங்கள் தான் ( either true or false)இதை எலக்ட்ரானிக் துறையில் நாம் குறிப்பிடும் போது, பொய்க்கு பூஜ்யம்( 0 or off state) என்றும் மெய் க்கு ஒன்று(1 or ON state) என்றும் குறிப்பிடுகிறோம்.

நீங்கள் பழைய காலத்து சுவிட்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள்! ஆப் செய்யக்கூடிய இடத்தில் பூஜ்ஜியம் என்றும், ஆன் செய்யக்கூடிய இடத்தில் ஒன்று என்றும் போடப்பட்டிருக்கும்.

இது கூட வேண்டாம்! உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய டிவி ரிமோட்டை எடுத்துப் பாருங்கள். அதன் மீது இருக்கக்கூடிய இலச்சினையானது(symbol) பூஜ்ஜியம் அதற்கு மேலே ஒன்று என்பது போல இருக்கும்.அதாவது, இந்த பட்டனை வைத்து உங்களால் ஆன் செய்ய முடியும் மற்றும் ஆப் செய்ய முடியும் என்பது தான் அதன் பொருள்(you can perform both the arguments).

இந்த அடிப்படையில் தான் உலகில் உள்ள 99% எலக்ட்ரானிக் வேலைகள் நடைபெறுகின்றன.

எந்த நேரத்தில், எந்த பொருள் செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது இந்த பூலியன் இயற்கணிதம் தான்.

நீங்கள், இன்றைக்கு கணினியோடு உரையாடுவதற்கு சி ,சி பிளஸ் பிளஸ், ஜாவா, பைத்தான், ரூபி ,ஃபோர்ட்டான், கோபால் என விதவிதமான பெயர்களில் மொழிகளைப் பயன்படுத்தினாலும், அடிப்படையில் கணினிக்கு தெரிந்ததோ நான் குறிப்பிட்ட பொய்யும், மெய்யும் மட்டும்தான்.

சங்கேத மொழியால்(பைனரி language 0 1 )மட்டுமே உங்களால் கணினியில் உரையாட முடியும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய, நிரலாக்க மொழிகள் அனைத்தும் உங்களுடைய ஆங்கில மொழியை சங்கேத மொழியாக மாற்றும் பணியை தான்(compiler and interpreter) செய்கின்றன.

சங்கேத மொழியின் அடிப்படைகளை நீங்கள் படிக்கும் போது, எவ்வித மொழியின் துணை இன்றியும் உங்களால் கணினியோடு நேரடியாக உரையாட முடியும். அவ்வளவு ஏன்? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் தரவுகளும், சங்கேத மொழியின் அடிப்படையிலும், பூலியன் இயற்கணிதத்தின் அடிப்படையிலும் தான், தரவு தகடுகளுக்குள் சேமித்து(data storage) வைக்கப்படுகின்றன.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட பூலியின் இயற்கணிதத்தின் வகைகள் எவை எவை? என்பதை அடுத்த வார கட்டுரையில் காணலாம்.

மீண்டும், மற்றொரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

என்னுடைய புது முயற்சி குறித்து, உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும். உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: