எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR)

கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம்.

மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined)

கலந்த மெய்ம்மை

கலந்த மெய்ம்மை

மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை மெய்ம்மை (AR) அமைக்கிறது. ஆனால் கலந்த மெய்ம்மை (MR) ஒரு படி மேலே சென்று மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக மட்டுமல்ல, மெய்யுலக சூழலிலேயே நிலைநிறுத்துகிறது (anchors).

கலந்த மெய்ம்மை நாம் பார்க்கும் உலகத்துக்கு மேல் எண்ணிம தகவல்களையும், உருவங்களையும் சேர்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அது நம்மைச் சுற்றியுள்ள இடத்துடன் அவற்றை ஒருங்கிணைத்து, மற்ற பொருட்களைப் போலக் கையாள அனுமதிக்கிறது. கலந்த மெய்ம்மையில் மெய்நிகர் பொருட்கள் உண்மையான உலகின் ஒரு பகுதியாக மாறும். மெய்நிகர் பந்து மேசை மற்றும் சுவர்களில் மோதித் தெறிக்கும் மற்றும் அறைகலன்களின் பின்னால் மறைந்துவிடும்.

மெய்நிகர் பொருட்களுடன் (virtual objects) ஊடாடுதல் (interaction) அல்லது கையாளுதல் (manipulation)

மெய்நிகர் பொருட்களுடன் ஊடாடுவது மற்றும் கையாளுவது என்றால் என்ன? நம் தலையைத் திருப்பி அவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்க இயல வேண்டும். விரல்களால் பிடித்து அவற்றை நகர்த்தவும் திருப்பவும் இயல வேண்டும்.

விரல் மற்றும் தலை அசைவுகளைப் பின்தொடரல்

ஆகவே நமக்குத் தலை திரும்புவதையும் விரல் நகர்வதையும் துல்லியமாகப் பின்தொடர ஒரு உபாயம் தேவை. இதற்கு செயலின்மை அளவிடும் கருவியைப் (Inertial Measurement Unit – IMU) பயன்படுத்துகிறோம். தலையணியிலும், சுட்டுவிரல் நகத்திலும் இக்கருவியைப் பொருத்த வேண்டும்.

இதன் மற்றொரு பெயர் கலப்பின (hybrid) மெய்ம்மை

மிகை மெய்ம்மை இயற்பியல் உலகில் நடைபெறுகிறது. தகவல் அல்லது பொருட்கள் மெய்நிகராக  சேர்க்கப்படுகின்றன. கலந்த மெய்ம்மை இயற்பியல் உலகிலோ அல்லது மெய்நிகர் உலகிலோ தனிப்பட நடைபெறாது. ஆனால் இது நடப்பது இயற்பியல் உலகம் மற்றும் மெய்நிகர் உலகத்தின் கலப்பினமாகும். ஆகவே இதைக் கலப்பின மெய்ம்மை என்றும் கூறுகிறார்கள்.

நன்றி

  1. How is Mixed Reality (MR) changing how we see the world? – Stanford University

இத்தொடரில் அடுத்த கட்டுரை: MR தலையணி (headset) வகைகள்

ashokramach@gmail.com

%d bloggers like this: