மு. சிவலிங்கம் – இரங்கல் செய்தி

ஒருவருக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அவரது மூளையில் புகலாம்.
அவரது தாய் மொழியில் பேசினால், அவரது இதயத்தில் இடம் கிடைக்கும்.

— நெல்சன் மண்டேலா

Sivalingam.jpg
Link

நான் கல்லூரி இறுதி ஆண்டுகளில் (2003-2004) கணினி கற்க ஆசைப்பட்ட போது, கல்லூரி நூலகத்தில் இருந்த தடிதடியான ஆங்கிலப் புத்தகங்கள், என் கணினி ஆசையை துரத்தி விட்டன.

நண்பர்கள் பலர் அப்புத்தகங்களைக் கொண்டு எனக்கு விளக்கம் அளித்தாலும், அவை எனக்கு அன்னியமாகவே இருந்தன. அவற்றை தமிழில் யாரேனும் எழுத மாட்டார்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

அப்போது, கல்லூரி நூலகர் திரு. ரகு ‘தமிழ் கம்ப்யூட்டர்’ என்ற மாத இதழ் வருவதாய்ச் சொன்னார். எனது தொல்லை தாங்காமல், கல்லூரி நூலகத்துக்கு இதழை வரச் செய்தார்.

முதல் முறையாக கணினி கற்றி எளிய தமிழில் அறியக் கிடைத்தது பெரு மகிழ்ச்சி.

அதில் கணினிகள் பயன் படுத்துதல், நிரலாக்கம், டேட்டாபேஸ், பல்வேறு இலவச நிரல்கள், புதுப்புது இணைய தளங்கள், கேள்வி பதில்கள் என்று அட்டகாசமான கட்டுரைகள் இருந்தன.

அதே போல ‘கம்ப்யூட்டர் உலகம்’ என்ற இதழும் வந்தது.

அவற்றைக் கொண்டே ஏகலைவனாக மாறி, கணினியும் நிரலாக்கமும் கற்கத் தொடங்கினேன். நூலகத்திலேயே வசிக்கத் தொடங்கினேன். கல்லூரி நூலகத்திலேயே ஒரு கணினியும் தந்தனர். மாலை நேரங்களில் சிறிது நேரம் இணையமும்.

வேறென்ன வேண்டும் கணினி கற்க?

இனிய தமிழில் கணினி பற்றி கிடைத்த அனைத்தையும் கற்கத் தொடங்கினேன். தமிழில் கட்டுரை எழுதிக் கற்பித்த ஆசிரியர்கள், கட்டை விரல் கேட்காதவர்கள்.

பல சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி, விடைகளை அடுத்த இதழ்களில் பெறுவேன். எனது மொக்கை கேள்விகளுக்கும் பதில் தந்தவர்களை எண்ணி வியப்பேன்.

அப்போது அடிக்கடி பார்த்த பெயர் மு. சிவலிங்கம்.

கணினி நுட்பங்களை எளிய தமிழில் விளக்கும் அவரது கட்டுரைகளே நான் இத்துறையில் நுழையக் காரணம். புது நுட்பங்களுக்கான அறிமுகத்தை இனிய தமிழில் பெற்றால் போதும். அவை குறித்த பயம் போய், தைரியமாக அடுத்த முயற்சிகளை நோக்கி நகரலாம்.

காலம் உருண்டோடி, கணினித் துறையில் வேலை கிடைத்து, கட்டற்ற மென்பொருள் காதலனாகிப் போன நேரம்.

கணினித் துறையில் நுழைய விரும்புவோர் அனைவருக்கும் லினக்ஸ், பைத்தான், ரூபி என ஊர் ஊராகப் போய் பரப்புரை செய்து கொண்டிருந்தோம். அப்போது தமிழில் அவற்றை நாங்கள் கொண்டு சென்றது பெரிதும் பயன் தந்தது. ஆயினும் லினக்ஸ் பற்றிய தொடர்ந்த கற்றலுக்கான ஆவணங்கள், பாடங்கள் தமிழில் அப்போது மிகவும் குறைவாகவே இருந்தன.

மு. சிவலிங்கம் லினக்ஸ் பற்றி எழுதுவார் எனக் காத்திருந்தேன். ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் தந்தபோது, அறிவுப் பகிரலை எப்போதும் செய்து வர வேண்டும். பிறர் செய்வார் என்று காத்திருக்காமல், இருக்கும் வசதிகள், வாய்ப்புகள் கொண்டு, எல்லா வகையிலும் நம் அறிவைப் பகிர்வதே மனித குலத்துக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பது போல எழுதி இருந்தார்.

அவரது இந்த பதில் என்னை பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்ய எப்போதும் ஊக்கம் அளிப்பதாகும்.

அவரது ஊக்க உரைகளை மனதில் கொண்டு, கணியம் என்ற மின்னிதழை நண்பர்கள் சேர்ந்து தொடங்கினோம். இப்போது 1700+ கட்டுரைகள், 850+ மின்னூல்கள், பல்வேறு கணித்தமிழ் செயல்கள் என ஊர் கூடித் தேர் இழுத்துக் கொண்டிருக்கிறோம்.

கணியம் தொடங்கிய சில ஆண்டுகளில், சென்னை புத்தகத் திருவிழாவில் மு. சிவலிங்கம் அவர்களைக் கண்டு, பெரிதும் மகிழ்ந்தேன். கணியம் பற்றி அறிந்திருந்தார். அவரது மாணவர்கள் இணைந்து, அவரது பணிகளைத் தொடர்வது கண்டு வியந்தார்.

அன்று முதல் கணியம் பணிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள், நுட்ப உதவிகள் வழங்கி ஊக்கமளித்து வந்தார். அவரது மார்க்சியப் பணிகளும், கணித்தமிழ்ப் பணிகளும், பல்லாயிரம் ஏகலைவர்களை உருவாக்கி, வாழ்வில் முன்னேற்றி உள்ளன.

சென்ற வாரம் சென்னையில் கணித்தமிழ் 24 மாநாட்டில் பல நண்பர்களை கண்டிருந்தார்.

அடுத்த வாரமே அவர் 13.2.24 அன்று இயற்கை எய்திய செய்தி அறிந்து அனைவரும் வருந்தினோம்.

அவரது அரும்பணிகளை விதைகளாக காலம் தோறும் விதைத்துள்ளார். அவை அனைத்தும் ஆல மரங்களாக உலகெங்கும் அறிவுப் பரவலை செய்து வருகின்றன.

என்றும் அவரது மாணவர் என்பதில் பெருமை கொள்கிறோம். தமிழுக்காகவும், மனிதர் அனைவர் மீதான அன்புக்காகவும் என்றும் பணி புரிவோம் என்று உறுதி கூறுகிறோம்.

— த. சீனிவாசன்

ta.wikipedia.org/s/2k9o

www.sivalingam.in/

www.facebook.com/musivalingam

www.facebook.com/photo/?fbid=5348658678580154&set=pcb.5348677628578259

muelangovan.blogspot.com/2024/02/blog-post_14.html

%d bloggers like this: